Last Updated : 08 Dec, 2018 05:56 PM

 

Published : 08 Dec 2018 05:56 PM
Last Updated : 08 Dec 2018 05:56 PM

பெண்கள் 360: உயிர் காத்த உன்னதர்

நார்விச் நகருக்கு அருகில் இருக்கும் குக்கிராமத்தில் 1865-ல் எடித் கேவல் பிறந்தார். வயதான  அவருடைய தந்தை கடுமையான நோயால் பாதிக்கப்பட்டிருந்தார். அவருக்குத் தேவைப்படும் அனைத்துப் பணிவிடைகளையும் கேவல் பார்த்துப் பார்த்துச் செய்தார். ஆத்ம திருப்தி அளித்த இந்தப் பணிவிடையின் உந்துதலில் செவிலியரானார். பெல்ஜியத்தில் செவிலியர் பயிற்சி மருத்துவமனையில் பணியாற்றினார்.

uyirjpgright

1910-ல் ஒரு மருத்துவ பத்திரிகையைத் தொடங்கினார். பெல்ஜியத்தில் முதல் உலகப்போர் மூண்டபோது, காயமடைந்தவர்கள் எந்த நாட்டைச் சேர்ந்தவர்கள் என்றெல்லாம் பாரபட்சம் பார்க்காமல் அனைவருக்கும் உன்னத சேவை அளித்தார். 1915-ல் பிரான்ஸ், இங்கிலாந்து ஆகிய நாடுகளைச் சேர்ந்த 200 ராணுவ வீரர்கள் பெல்ஜியத்திலிருந்து வெளியேற உதவியதற்காக எடித் கைது செய்யப்பட்டார்.

அவருக்குக் கருணை காட்டும்படி பெல்ஜியம் அரசை அந்நாட்டு மக்கள் வலியுறுத்தினர். இருப்பினும், 1915 அக்டோபர் 12 அன்று எடித்துக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது. இவரது 153-வது பிறந்தநாளையொட்டி கடந்த செவ்வாய் அன்று சிறப்பு டூடுலை கூகுள் வெளியிட்டது.


நிறவெறிக்கு எதிரான குரல்

உலக வரலாற்றில் நடந்த நிறவெறித் தாக்குதல் சம்பவங்களிலேயே மோசமானதாக, 1921-ல் அமெரிக்காவில் நடந்த தாக்குதல் கருதப்படுகிறது. அந்தத் தாக்குதலில் 300 கறுப்பினத்தவர்கள் கொடூரமாகப் படுகொலை செய்யப்பட்டனர். அந்தச் சம்பவத்தின்போது மயிரிழையில் உயிர் பிழைத்தவர் ஒலிவியா ஹூக்கர்.

niraverijpg

அன்றிலிருந்து தன் உடலில் உயிர் இருக்கும்வரை தொடர்ந்து 70 ஆண்டுகளாக அமெரிக்காவில் நிறவெறிக்கு எதிரான போராட்டங்களைத் தீவிரமாக முன்னெடுத்தார். 103 வயதில் அமெரிக்கக் கடலோரப்படையில் இணைந்து சாதனை படைத்து உலகையே வியக்கவைத்தார்.

‘நீதி மற்றும் சமத்துவத்துக்காக ஓயாமல் ஒலிக்கும் குரல்’ என ஒலிவியாவின் செயல்பாட்டை அமெரிக்காவின் முதல் கறுப்பின அதிபரான பாரக் ஒபாமா புகழ்ந்தார். அடக்குமுறைக்கும் நிறவெறிக்கும் எதிராகப் போராடிய ஒலிவியா கடந்த மாதம் 25 அன்று மரணமடைந்தார்.
 

தொடரும் வன்முறை

உத்தரப்பிரதேச மாநிலத்தில் லக்னோ அருகே பெண் ஒருவர் வல்லுறவுக்கு உள்ளாக்கப்பட்டு உயிரோடு எரிக்கப்பட்டார். சீதாபூரைச் சேர்ந்த அந்தப் பெண், நவம்பர் 29 அன்று தன்னுடைய உறவினர் வீட்டுக்குச் சென்றார். அப்போது, இருவர் அவரை மறித்து வல்லுறுவுக்கு ஆளாக்கினர். அந்தப் பெண் அங்கிருந்து தப்பித்துவந்து தாம்பூர் காவல்நிலையத்தில் புகார் அளித்தார்.

காவல் துறையோ புகாரை ஏற்க மறுத்தது. இதனால், காவல் துறையின் அவசர எண்ணைத் தொடர்புகொண்டு புகாரைப் பதிவுசெய்தார். அந்த வழக்கின் விசாரணைக்காகக் காவல் நிலையத்துக்கு அந்தப் பெண் சென்றபோது, அவரை வல்லுறுவக்கு உள்ளாக்கிய நபர்கள் அவரை மறித்து, அவர்மீது மண்ணெண்ணெய் ஊற்றித் தீ வைத்து எரித்துள்ளனர்.

தற்போது 60 சதவீதத் தீக்காயத்துடன் சீதாபூர் அரசு மருத்துவமனையில் அந்தப் பெண் உயிருக்குப் போராடிவருகிறார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x