Last Updated : 16 Dec, 2018 11:57 AM

 

Published : 16 Dec 2018 11:57 AM
Last Updated : 16 Dec 2018 11:57 AM

முகம் நூறு: பெண்மையைப் போன்றே இசையும் தனித்துவமானது!

சங்கீதக் கலாநிதி அருணா சாய்ராம்

குடியரசுத் தலைவர் மாளிகை தொடங்கி இந்தியாவின் பெருமைமிகு சபைகளில் இசை நிகழ்ச்சியை நடத்தியிருக்கும் அருணா சாய்ராம், இந்தியாவின் இசைத் தூதராக கர்னாடக இசையை லண்டன் ராயல் ஆல்பர்ட் ஹால், ராயல் ஃபெஸ்டிவல் ஹால், நியூயார்க்கின் கர்னகி ஹால் போன்ற உலகின் பெருமைமிகு இசை மேடைகளிலும் படரவிட்டிருப்பவர்.

சங்கீத நாடக அகாடமியின் துணைத் தலைவராக இருக்கிறார். பத்மஸ்ரீ, சங்கீத நாடக அகாடமி விருது, இசைப் பேரறிஞர் விருது எனப் பல விருதுகளைப் பெற்றிருக்கும் அருணா சாய்ராம் இசை உலகில் பெருமைமிகு விருதான மியூசிக் அகாடமி வழங்கும் ‘சங்கீதக் கலாநிதி’ விருதுக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார்.

அருணா சாய்ராம் 1952-ல் திருச்சியில் ஆர்.சேதுராமன் - ராஜலட்சுமி தம்பதிக்குப் பிறந்தார். இசையின் பாலபாடத்தைத் தன்னுடைய தாய் ராஜலட்சுமியிடமே தொடங்கினார். பத்து வயதிலேயே இசை மேதை டி.பிருந்தாவிடம் பயிற்சியைத் தொடர்ந்தார். பிறகு எஸ்.ராமச்சந்திரன், சித்தூர் சுப்பிரமணிய பிள்ளை, ஏ.எஸ்.மணி, கே.எஸ்.நாராயணசுவாமி, டி.ஆர்.சுப்பிரமணியம், நாகசுர வித்வான்களான செம்பனார்கோயில் சகோதரர்களில் ஒருவரான எஸ்.ஆர்.டி.வைத்தியநாதன் ஆகியோரிடம் தன் இசையை மேம்படுத்திக்கொண்டார்.

mugamjpg

பதினான்கு மொழிகளில் பாடுபவர்

மரபார்ந்த இசை, பிரபந்தம், திருவாசகம், ஜாவளி, பதம், தாசர் பதம், அபங் எனப் பல பாணிகளில் இசையின் எல்லைகளை விரித்து இசை வானில்  பறந்தவர் அருணா சாய்ராம். பம்பாயில் இருந்தபோது தனது இல்லத்துக்கு வந்த இசை மேதைகள் அரியக்குடி ராமானுஜ அய்யங்கார், மதுரை மணி அய்யர், புல்லாங்குழல் மாலி, டி.பாலசரஸ்வதி போன்ற பலரின் ஆசிர்வாதத்தையும் அருணா சாய்ராம் பெற்றிருக்கிறார்.

வருகைதரு பேராசிரியராகப் பல பல்கலைக்கழகங்களுக்கும் பணியாற்றி யிருக்கிறார். பதினான்கு இந்திய மொழிகளில் பாடும் திறமை பெற்றவர் அருணா சாய்ராம். மாண்டலின் யு ஸ்ரீநிவாஸ், உஸ்தாத் ஜாகீர் உசேன் போன்ற புகழ்பெற்ற இந்திய வாத்தியக் கலைஞர்களுடன் இணைந்து ஜுகல் பந்தி நிகழ்ச்சியையும் மேற்குலக இசைக் கலைஞர்களுடன் இணைந்து கிழக்கும் மேற்கும் சங்கமிக்கும் இசை நிகழ்ச்சிகளையும் நடத்தியிருக்கிறார்.

பிபிசி பிராம்ஸ் திட்டத்தின்கீழ், இந்திய -பிரெஞ்சு கலாச்சார பரிவர்த்தனை திட்டத்தின்மூலம் இளம் பிரெஞ்சு இசைக் கலைஞர்களுக்குக் கர்னாடக இசையைக் கற்றுத் தந்திருக்கிறார். அமெரிக்காவின் ஹார்வர்ட் பல்கலைக்கழகத்திலும் கனடா வின் பான்ஃப் சென்டரிலும் அங்கிருக்கும் மாணவர்களுக்குக் கர்னாடக இசையைக் கற்றுத் தந்திருக்கிறார்.

“அமைதியையும் தெய்வீகத்தையும் இசையின் வழியாக இணைக்கும் பாலம் நான். இந்தப் பணிக்கான அங்கீகாரமாகவே மியூசிக் அகாடமியின் ‘சங்கீதக் கலாநிதி’ விருதைப் பார்க்கிறேன்” என்னும் அருணா சாய்ராம், இதன்மூலம் ரசிகர்களுடனான உறவுப் பாலம் மேலும் பலப்படும் என்று நம்புகிறார். அருணா சாய்ராம் நம்மிடம் பகிர்ந்துகொண்ட இசைப் பொழுதிலிருந்து சில துளிகள்.

ஆழ்மனதில் பிரகாசித்த தாரகைகள்    

“சிறுவயதிலேயே பெரிய சங்கீத வித்வான்களின் இசையைக் கேட்கும் பாக்கியம் கிடைத்தது. சங்கீதத்தின் மீது ஆர்வம் இருந்ததே தவிர, பெரிய மேடைக் கச்சேரி வித்வானாக வேண்டும் என்ற நோக்கத்துடன் இசையைப் படிக்கவில்லை. வாழ்க்கையை அதன் போக்கிலேயேதான் வாழ்ந்தேன். சென்னையில் என் அம்மா இசைத் துறையில் கால்பதிக்கவில்லையே தவிர, பம்பாயில் நிகழ்ச்சிகள் செய்துவந்தார்.

mugam-2jpgright

எங்களது வீட்டில் வானத்து நட்சத்திரங்களை எனக்குக் காட்டியதைவிட, இசைவானில் பிரகாசித்த தாரகைகளான எம்.எஸ். அம்மாவையும் டி.கே.பட்டம்மாளையும் எம்.எல். வசந்தகுமாரியையும் தண்டபாணி தேசிகரையும்தான் காட்டினர். அதுதான் என் ஆழ்மனத்தில் உறைந்திருந்தது. காலப்போக்கில் இறையருளால்தான் அது வெளிப்பட்டது. 

நன்றாகப் படித்தேன். இசையையும் கற்றுக் கொண்டேன். திருமணம் முடிந்து, குழந்தைகள் பிறந்து அதன்பிறகுதான் முழுமூச்சாகக் கச்சேரி செய்ய வேண்டும் என்னும் எண்ணம் ஏற்பட்டது. தொடக்கத்தில் பம்பாயில் மட்டும் சில நிகழ்ச்சிகளை நடத்திக் கொண்டிருந்தேன். வெளிநாடுகளில் சில நிகழ்ச்சிகள் நடத்திவந்தேன். 1990-களில்தான் கச்சேரிகளைச் செய்யத் தொடங்கினேன். 2002-ல் சென்னைக்கு வந்த பிறகு பரவலாகக் கச்சேரி செய்ய ஆரம்பித்தேன்.

குருவருளின் பெருமை

ஏறக்குறைய பதினைந்து ஆண்டுகள் இசை மேதை பிருந்தாம்மாவிடம் இசை கற்றுக்கொள்ளும் பாக்கியம் கிடைத்தது. சென்னையில் முதல் நிகழ்ச்சியை மியூசிக் அகாடமியில் நடத்துவதற்கு வாய்ப்பு பெற்றுத் தந்தவர் என்னுடைய குரு. அந்நாளில் ஜூனியர் கான்சர்ட் எனப்படுவது பகல் 12 மணிக்குத் தொடங்கும். மியூசிக் அகாடமியில் என்னுடைய முதல் நிகழ்ச்சி குருவின் ஆசீர்வாதத்தோடு நடந்தது. நிறையப் பேர் பாராட்டினார்கள்.

எனக்குக் குருவின் பாராட்டுதானே முக்கியம்? நான் அவரையே பார்த்துக்கொண்டிருந்தேன். அவரிடமிருந்து வழக்கம்போல் ஒரு ‘ஹும்’ வெளிப்பட்டது. குருவிடமிருந்து கிடைக்கும் வெளிப்படையான பாராட்டு ஒருவேளை சிஷ்யர்களின் இசை முயற்சியை முடக்கிவிடும் என்று நினைத்ததாலோ என்னவோ, பிருந்தாம்மா கடைசிவரை அவரது பாராட்டை சஸ்பென்ஸாகவே வைத்திருந்தார் என்று தோன்றுகிறது.

வித்வத்தும் முக்கியம் பாட்டும் முக்கியம்

பிருந்தாம்மாவுக்குப் பிறகு பல இசை மேதைகளிடம் இசை நுணுக்கங்களைக் கற்றுக் கொண்டேன். இதில் நாகசுர வித்வான் எஸ்.ஆர்.டி. பெரிய மேதை. நாகசுர வித்வான்கள் இசையை அணுகும் விதமே வேறு மாதிரியாக இருக்கும். அந்த நுணுக்கத்தை அவரிடம் தெரிந்துகொண்டேன். ராகம், தானம், பல்லவியின் நிலை எப்படி இருக்க  வேண்டும் என்றால் லய வின்யாசங்கள், சங்கீத வின்யாசங்களோடு சாகித்ய பலமும் இருக்க வேண்டும். ஒவ்வோர் ஆண்டும் நானாகவே ஒரு ராகம், தானம், பல்லவியை உருவாக்கிப் பாடுவேன்.

இசைக் கொடை

எங்களின் ‘நாத யோகம்’  அறக்கட்டளை  சார்பாகப் பல கிராமங்களைச் சேர்ந்த இசைக் கல்லூரிகளில் படிப்பவர்களுக்கு வாத்தியங்களைக்கூட வாங்கமுடியாத நிலை இருக்கும். அப்படிப்பட்ட மாணவர்களுக்கு வாத்தியங்களை வாங்கித் தருகிறோம். புற்றுநோய் சிகிச்சைக்கான அறக்கட்டளை நிதிகளை உருவாக்கித் தருகிறோம். மூத்த கலைஞர்களை இன்றைய தலைமுறை கலைஞர்களுடன் சந்திக்கவைக்கும் நிகழ்ச்சிகளை ஓர் உறவுப் பாலமாக நடத்திவருகிறோம்.

இசையும் பெண்மையும்

சங்கீதமே ஒரு தெய்வத்தன்மை வாய்ந்தது. தனிப்பட்ட எந்தக் கடவுளையும் நான் இங்கே குறிப்பிடவில்லை. தெய்வீகம் என்பதை எதனோடும் நம்மால் தொடர்புபடுத்த முடியும். அது அவரவரின் தனிப்பட்ட விருப்பம். கடவுள் மறுப்பாளர்களாலும் மறுக்க முடியாதது இசை. அதோடு பெண்மையைப் போன்றே இசையும் தனித்துவமானது. இசையை ரசிப்பதன் மூலம் பெண்கள் மன அழுத்தத்திலிருந்து விடுபட முடியும் என்கின்றன பல ஆராய்ச்சிகள்.

இசையை ரசிக்கப் பழக்க வேண்டும். தகவல் தொடர்பு சாதனங்கள், ஊடகங்கள் போன்றவை இசைக்கு முக்கியத்துவம் கொடுத்து இந்தச் சேவையைத் தொடர்ந்து செய்ய வேண்டும். இசையை நம்முடைய பாடத் திட்டத்தில் சேர்ப்பதன்மூலம் இசையை ஊன்றி ரசிப்பதற்கான பயிற்சியை அடுத்த தலைமுறைக்கு நம்மால் ஏற்படுத்த முடியும்”.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x