Published : 08 Dec 2018 05:54 PM
Last Updated : 08 Dec 2018 05:54 PM
விளையாட்டுத் துறையில் பெண்களுக்கு எண்ணற்ற வாய்ப்புகள் கொட்டிக் கிடக்கின்றன; கொஞ்சம் முயன்றால் அவற்றை எட்டிப் பிடிக்கலாம் என நம்பிக்கையுடன் சொல்கிறார் சர்வதேச மூத்தோர் தடகள நடுவரான கே.மனோன்மணி.
இந்தோனேஷியாவில் அண்மையில் நடைபெற்ற ஆசிய அளவிலான மூத்தோர் தடகள நடுவர்களுக்கான தொழில்நுட்பக் கருத்தரங்கில் இந்தியா சார்பில் பங்கேற்றுத் திரும்பியுள்ள இவர், கோவை அல்வேர்னியா மெட்ரிக். பள்ளியில் உடற்கல்வி இயக்குநராகப் பணியாற்றுகிறார். இவர் இந்தியாவில் உள்ள சர்வதேச மூத்தோர் தடகள நடுவர்களில் ஒருவர். 18 ஆண்டுகளுக்கும் மேலாக, சர்வதேச மூத்தோர் தடகளப் போட்டிகளில் தொழில்நுட்ப நடுவராகச் செயல்பட்டுவருகிறார்.
அமெரிக்கா, ஆஸ்திரேலியா, பிரான்ஸ், இலங்கை, இந்தோனேஷியா உள்ளிட்ட நாடுகளில் நடைபெற்ற பல்வேறு விளையாட்டுப் போட்டிகளிலும் நடுவராகச் செயல்பட்டுள்ளார். பல போட்டிகளில் பங்கேற்ற இந்திய நடுவர்களில் இவர் மட்டுமே பெண்!
“மனித வளம் மிகுந்த இந்தியாவில் விளையாட்டுத் துறையில் பெண்கள் இன்று அதிகமாக ஜொலிக்கிறார்கள். ஆனால், திறமை இருந்தும் பல்வேறு காரணங்களால் அங்கீகாரம் கிடைக்காத வீரர்கள்தான் அதிகம். பெண்களைப் பொறுத்தவரை, ஆண்கள் அளவுக்கு விளையாட்டுக்கு முக்கியத்துவம் அளிப்பதில்லை என்ற கருத்து தற்போது கொஞ்சம் கொஞ்சமாக மாறிவருகிறது” என்று சொல்லும் மனோன்மணி, பெண்களின்
ஆரோக்கியத்துக்கும் உடலைக் கட்டுக்கோப்பாக வைத்துக்கொள்வதற்கும் உடற்பயிற்சியும் விளையாட்டுகளும் பெரிதும் துணைபுரியும் என்கிறார்.
“விளையாட்டில் பாலின பேதம் இல்லை. செல்போனில் மூழ்கி நேரத்தை வீணடிப்பதைவிட, விளையாட்டுகளில் ஆர்வம் செலுத்தினால் உடலுக்கு மட்டுமல்ல; எதிர்காலத்துக்கும் நன்மைதான். கிரிக்கெட்டைத் தாண்டி தடகளம் உள்ளிட்ட விளையாட்டுப் போட்டிகளில் நாம் கவனம் செலுத்த வேண்டும்.
விளையாட்டுகளில் தொழில்நுட்பரீதியாக நாம் மிகவும் பின்தங்கியுள்ளோம். வெளிநாடுகளில் விளையாட்டுக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கப்பட்டு, ஊக்கத் தொகையும், சலுகைகளும் வழங்கப்படுகின்றன. விளையாட்டு வீரர்களை ஊக்குவிப்பதில் மிகுந்த அக்கறை காட்டுகிறார்கள்.
இதனால், சர்வதேச அளவிலான தடகளம் உள்ளிட்ட விளையாட்டுப் போட்டிகளில் சீனா, ரஷ்யா, அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகளைச் சேர்ந்தோர் வெற்றிகளைக் குவிக்கின்றனர். 120 கோடிக்கும் மேல் மக்கள்தொகை கொண்ட நம் நாட்டில், சர்வதேசத் தடகளப் போட்டியில் சாதித்தவர்களை விரல்விட்டு எண்ணிவிடலாம்” என்று வருத்தப்படும் மனோன்மணி இந்த நிலையை மாற்ற வேண்டும் என்கிறார்.
வேண்டாத அரசியல்
“விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்கும் பெண்களுக்கு வேலைவாய்ப்பு, நடுவராகச் செயல்படுவது, சர்வதேச அளவிலான அங்கீகாரம் எனப் பல்வேறு வாய்ப்புகள் கொட்டிக் கிடக்கின்றன. உரிய வசதியும் வழிகாட்டுதலும் இருந்தால் கிராமப்புற மாணவியரும் இத்துறையில் சாதிக்கலாம்.
இது தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்துவது அவசியம். தினமும் குறைந்தபட்சம் இரண்டு மணி நேரமாவது விளையாட்டுக்கு ஒதுக்க வேண்டும். இது நிச்சயம் படிப்பைப் பாதிக்காது. அதுமட்டுமின்றி, நன்றாக விளையாடும் மாணவிகளால் படிப்பிலும் நன்கு கவனம் செலுத்த முடியும். தன்னம்பிக்கை, விடாமுயற்சி, கடின உழைப்புடன் செயல்பட்டால், வெற்றி நிச்சயம்” என்கிறார் அவர்.
வெளிநாடுகளில் நேர மேலாண்மை, நவீனத் தொழில்நுட்பம், அதிநவீன உபகரணங்கள், உணவு முறை, பயிற்சி, அடிப்படைக் கட்டமைப்பு வசதி போன்றவற்றோடு அரசாங்கத்தின் ஊக்குவிப்பும் விளையாட்டு வீரர்களை வெற்றிபெறச் செய்கின்றன. நம் நாட்டில் அரங்கேறும் அரசியலால் இதுபோன்ற வாய்ப்புகள் நமக்குக் குறைவாகக் கிடைப்பதையும் அவர் சுட்டிக்காட்டுகிறார்.
“ஏழை விளையாட்டு வீரர்கள் விமானக் கட்டணத்துக்கு வழியின்றி வெளிநாட்டு வாய்ப்பைத் தவறவிட்ட தருணங்கள் இனியும் நீடிக்கக் கூடாது. ஒலிம்பிக் போட்டிகளில் வெல்லும் அளவுக்கு நமது மாணவிகளைத் தயார் செய்ய நாம் அனைவரும் ஒத்துழைக்க வேண்டும்” என்கிறார் மனோன்மணி.
படம்: ஜெ.மனோகரன்
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT