Published : 31 Aug 2014 12:00 AM
Last Updated : 31 Aug 2014 12:00 AM
கடந்த சில மாதங்களாக நம்மை வெட்கப்படவும் வேதனைப்படவும் வைத்த நிகழ்வுகளில் ஒன்று, பெண்கள் மீதான பாலியல் வன்முறை நிகழ்வைக் குறித்த விவாதங்களில் குற்றம் இழைத்தவர்களுக்கு பதிலாகப் பாதிக்கப்பட்ட பெண்களையே குற்றவாளி கூண்டில் ஏற்றும் அநீதிதான்.
ஒரு பெண் வன்முறைக்கு ஆளாகிவிட்டால் போதும். உடனே ஆயிரக்கணக்கான கேள்விக் கணைகள் தொடுக்கப்படும். வன்முறை சம்பவம் எங்கு நடந்தது? அந்தப் பெண் யார்? எந்தச் சாதியைச் சார்ந்தவர்? என்ன உடை உடுத்தியிருந்தார்? அவருடன் இருந்தவர் யார்? சம்பவம் நடந்த நேரம் இரவா? பகலா? இதுபோன்ற கேள்விகள் எழுப்பப்படும். வன்முறைச் சம்பவம் ஆள்நடமாட்டம் இல்லாத இடத்தில் நிகழ்ந்தால் அங்கு இவளுக்குத் தனியாக என்ன வேலை? என்ற கேள்வி வேறு. சாதியில், பொருளாதாரத்தில் பின்தங்கியவராக அந்தப் பெண் இருந்தால் அவர் ஒழுக்கமானவராக இருக்க மாட்டார் என்ற தீர்மானம் உடனே நிறைவேறிவிடும். புடவையைத் தவிர எதை உடுத்தியிருந்தாலும், இப்படி உடை உடுத்தினால் ஆண்கள் சீண்டிப் பார்க்காமல் என்ன செய்வார்கள்? என்ற நியாயப்படுத்துதலும் நடக்கும்.
நிகழ்வின் போது உடன் இருந்தவன் ஆண் நண்பனோ, காதலனோ என்றால் கண்டவனோடு சுற்றினால் இப்படித்தான் நடக்கும் என்ற விமர்சனமும் நிச்சயம் உண்டு. இரவு நேரத்தில் நடந்தது என்றால், நேரம் கெட்ட நேரத்தில் இவளுக்கு வெளியில் என்ன வேலை என்ற கேள்வியும் கேட்கப்படும்.
இம்முறை பாதிக்கப்பட்டவர்கள் வீட்டில் பெற்றோருடன் உறங்கிக் கொண்டிருந்த குழந்தை, வீட்டில் கழிப்பறை இல்லாத காரணத்தால் இரவில் வெளியே சென்ற பெண்கள். எனவே, நிகழ்வுக்குப் பின் நடந்த விவாதங்களில் பெண்களை விமர்சிக்காமல், பெண்களுக்குக் கழிப்பறை இல்லாத வாழ்க்கை பாதுகாப்பு அற்றது என்று முடிவு செய்யப்பட்டது. இங்கும் எல்லோருடைய கவலையும் பெண்களின் பாதுகாப்பு குறித்து அல்லாமல், கழிப்பறைகூட இல்லாத வீடுகளே. ஒரு பெண் குழந்தை (கதவு இல்லாத) தன் வீட்டில் தன் பெற்றோருடன் பாதுகாப்பாகப் படுத்துறங்க முடியாது. பெண்கள் தாங்கள் வசிக்கும் ஊரில், தங்களின் வீட்டிலிருந்து சில மீட்டர்கள்கூட பாதுகாப்பாகச் சென்றுவர முடியாது. எல்லோருக்கும் பொதுவான பேருந்தில் பயணிக்க முடியாது என்றால் இது சட்டம் ஒழுங்கு பிரச்சினை அல்லவா? ஒட்டு மொத்த சமுதாயத்தின் பிரச்சினை அல்லவா?
கேள்வி கேளுங்கள்
இங்கு நாம், நம் நாட்டின் நாகரிகம், பண்பாடு, பெண்ணைக் கடவுளாக, தாயாகப் போற்றும் வாழ்க்கைமுறை, ஒருவனுக்கு ஒருத்தி எனும் அறநெறி, கற்பு என்னும் கண்ணியம் இவை அனைத்தையும் கேள்விக்கு உள்ளாக்க வேண்டாமா?
நம் வீடுகளில் நாம் வளர்க்கும் ஆண்பிள்ளைகளின் இத்தகைய வன்முறைப் போக்கு நமக்குக் கவலைதர வேண்டும். இதற்கான காரணங்களை நாம் தேட வேண்டும். அவற்றை ஆய்வுக்கு உட்படுத்த வேண்டும்.
இதற்கு மாறாக, பஞ்சாயத்தைக்கூட்டி, பெண்கள் இரவு வேளைகளில் வெளியே செல்லக் கூடாது. தக்க துணையின்றி தனியே செல்லக் கூடாது. சரியான உடைகளை உடுத்த வேண்டும். கண்டிப்பாகப் பெண்கள் கைப் பேசியைப் பயன்படுத்தக் கூடாது என்ற கட்டுப்பாடுகளை விதிப்பதே நிகழ்கிறது. இத்தகைய கட்டுப்பாடுகள் பெண் கல்வி, வேலைவாய்ப்புகள், பெண்ணுரிமை, சுதந்திரம் என அனைத்தையும் மறுக்கும். மேலும், இந்த அணுகுமுறை இந்தப் பிரச்சினைக்குப் பெண்கள்தான் காரணம் என்ற மாயையை உருவாக்கி, வன்முறையில் ஈடுபட்ட கயவர்கள், அதற்கான காரணங்கள் குறித்த ஆய்வையும் தடுக்கிறது.
சமூக சிந்தனையுள்ள ஒவ்வொருவரும், ஆண் ஏன் தனியாகவோ, குழுவாகவோ வன்முறையில் ஈடுபடுகிறான்? பெண்கள் மீதான பாலியல் வன்முறையில் ஒரு பெண்ணின் உடலைக் கடந்து அவளின் தன்னம்பிக்கை, சுதந்திரம், ஆளுமையென அனைத்தையும் அவன் சிதைக்கக் காரணம் என்ன? ஆணும் பெண்ணும் சேர்ந்து வாழும் சமுதாயத்தில், ஆணுக்கு எங்ஙனம் எதிரியாகிப்போனாள்? ஒரு பெண் குழந்தையைச் சிதைக்கும் வகையில் ஆணின் வக்கிரம் அதிகரித்து வருவது ஏன்? போன்ற கேள்விகளை எழுப்புவதும் அதற்கான விடைகளைத் தேடுவதுமே வன்முறையற்ற வாழ்வுக்கு உதவும்.
சமத்துவம் இல்லை
இந்தச் சமுதாயத்தில் ஆண்களும் பெண்களும் சேர்ந்து வாழ்ந்த போதிலும், பாகுபாடு இன்றி சமமாக வாழ்வது இல்லை. இந்தியாவில் எப்படி சாதிய அடுக்கில், ஒரு சாதியைச் சார்ந்தவரைவிட இன்னொரு சாதியைச் சார்ந்தவர் கீழானவராகக் கருதப்படுகிறாரோ, அவ்வாறே ஆண்களைவிடப் பெண்கள் கீழானவர்களாகவே கருதப்படுகின்றனர். பெண், ஆணுக்கு நிகராகக் கல்விகற்று, சரிசமமாக வேலை செய்வது, உடை உடுத்துவது, வாகனங்களை ஓட்டுவது, இரவில் நடமாடுவது என்பதெல்லாம் ஆணை எரிச்சல் அடையச் செய்கிறது. காலகாலமாகத் தனக்கு அடிமைப்பட்டு ஏவல்செய்த ஓர் இனத்தின் உரிமை வாழ்வு அவனுக்கு ஆத்திரத்தை ஏற்படுத்துகிறது. பெண்மீதான வன்முறைக்கு அவனைத் தூண்டுகிறது.
ஊடகம் தரும் தூண்டுதல்
பாலியல் வக்கிரங்கள் நிகழ்வதற்கு ஊடகம், குறிப்பாக இணையம் பெரும் தூண்டுகோலாக இருக்கிறது. ஊடகங்களில் காட்சிப்படுத்தப்படும் பாலியல் வாழ்க்கை ஒரு அன்பின் வெளிப்பாடாக, கணவன் - மனைவி இடையே நிகழ்வதாக சித்திரிக்கப்படுவதில்லை. பெரும்பாலும் அவை இயற்கைக்கு முரண்பட்டதாக, மிகைப்படுத்தப்பட்டதாக, வன்முறையுடன் கூடியதாகச் சித்திரிக்கப்படுகின்றன. இதன் விளைவாக இது தனது இயல்பு வாழ்க்கையில் சாத்தியமல்ல எனத் தெரிந்தவன் இதைப் பரீட்சித்து பார்க்க எதிர்த்துப் போராட இயலாத, தனித்துவிடப்பட்டப் பெண்களை, குழந்தைகளைத் தேர்வுசெய்கிறான்.
இந்தச் சூழலில் நமக்கு எழும் கேள்வி, ஊடகத்தில் காட்டப்படும் பல்வேறு சாகச நிகழ்வுகளை முயற்சி செய்ய அஞ்சுபவன், பெண்ணை மட்டும் வல்லுறவு கொள்வது ஏன்? காரணம் சாகச விளையாட்டுகளில் அவனின் உயிருக்கு ஆபத்து இருக்கிறது. ஆனால், ஒரு பெண்ணின் வாழ்வையே சீர்குலைத்துவிட்டுச் சட்டத்தின் ஓட்டையில் அவன் எளிதாக தப்பி சுதந்திரமாக நடமாட முடியும்.
இந்நிலை மாற, சட்டங்கள் கடுமையாக்கப்பட வேண்டும். தண்டனைக்கான வயதுவரம்புகள் நீக்கப்பட வேண்டும். ஒரு குற்றவாளிகூடத் தப்பிவிடாதபடி காவல்துறையும், நீதித்துறையும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும். குற்றங்களை வெளியில்வந்து பதிவு செய்யவும், குற்றவாளிகளை கண்டுபிடிக்க உதவவும், பெண்கள் பயிற்றுவிக்கப்பட வேண்டும்.
எல்லாவற்றிற்கும் மேலாக ஆண்-பெண் பாகுபாடுகள் களையப்பட்டு பாலின சமத்துவத்திற்கான முனைப்புகள் வீடு, பள்ளி, பணியிடம் என எங்கும் தொடங்கப்பட வேண்டும். ஆண் குழந்தைகள் வளர்ப்பிலும், அவர்களுக்கு அறிவுடன் அறநெறியைப் பயிற்றுவிப்பதிலும் அதிகக் கவனம் செலுத்த வேண்டும். இந்த உலகம் அனைவருக்கும் பாதுகாப்பானதாய், இனிதானதாய் இருக்க ஒவ்வொருவரும் பங்களிப்பு செய்வோம்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT