Published : 16 Dec 2018 11:51 AM
Last Updated : 16 Dec 2018 11:51 AM
திண்டுக்கல் வாசகிகளை மகிழ்ச்சியில் திக்குமுக்காடவைத்த கையோடு, திருப்பூர் வாசகிகளைக் குதூகலத்தில் ஆழ்த்தியது ‘இந்து தமிழ் - பெண் இன்று’ மகளிர் திருவிழா. திருப்பூர் அங்கேரிப்பாளையம் சாலையில் அமைந்திருக்கும் கொங்கு வேளாளர் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் டிசம்பர் 9 அன்று நடைபெற்ற மகளிர் திருவிழாவில் வாசகிகள் பெருந்திரளாகப் பங்கேற்றனர்.
திருப்பூர் மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் அ. கயல்விழி, திருப்பூர் அரசு தலைமை மருத்துவ மனை மனநல மருத்துவர் ஆர். சுகன்யாதேவி உள்ளிட்டோர் விழாவில் சிறப்பு விருந்தினர்களாகப் பங்கேற்றனர். காவல் கண்காணிப்பாளர் அ. கயல்விழியின் சிறப்புரை வாசகிகளுக்குத் தன்னம்பிக்கையை ஏற்படுத்தும் வகையில் அமைந்திருந்தது.
மனநல மருத்துவர் ஆர். சுகன்யாதேவி, மனநலனைப் பேணுவதைப் பற்றிய ஆலோசனைகளை எளிமையாக விளக் கினார். சிறப்புரைகளைத் தொடர்ந்து எரிபொருள் சேமிப்பைப் பற்றி இந்தியன் ஆயில் நிறுவனத்தின் முதுநிலை மேலாளர் ரெஜினா ஜார்ஜ் விளக்கினார்.
பறையோசையும் பவளக் கும்மியும்
விழாவுக்கு வந்திருந்த வாசகிகளை ‘நிமிர்வு’ கலைக் குழுவினரின் பறை யாட்டம் அசத்தலாக வரவேற்றது. அதைத் தொடர்ந்து, பவளக்கொடி கும்மியாட்டக் குழுவினரின் பவளக் கும்மி ஆட்டம் வாசகிகளை உற்சாகப் படுத்தியது.
ஆணும் பெண்ணும் சமம்!
இவற்றைத் தொடர்ந்து அனைத்திந்திய மாதர் சங்கத்தின் திருப்பூர் கலைக் குழுவினரின் ‘சமம்’ நாடகம் நடைபெற்றது. ஆணும் பெண்ணும் வீட்டு வேலைகளைச் சமமாகப் பகிர்ந்துகொள்ள வேண்டிய அவசியத்தை நகைச்சுவையுடன் இந்த நாடகம் வாசகிகளுக்கு விளக்கியது. வீட்டு வேலை செய்வது எளிதல்ல என்பதை இந்த நாடகம் அழுத்தமாகப் பதிவுசெய்தது.
மாணவிகளின் பேச்சரங்கம்
‘சேமிப்பில் சிறந்தவர்கள் ஆண்களா, பெண்களா?’ என்ற தலைப்பில் நடைபெற்ற பேச்சரங்கத்தில் திருப்பூர் குமரன் மகளிர் கல்லூரியின் தமிழ்த்துறை இரண்டாம் ஆண்டு மாணவி தீபிகா நடுவராகவும், கவிப்பிரியா, கோகிலா ஆகியோர் பேச்சாளர்களாகவும் பங்கேற்றனர். மாணவி களின் கலகலப்பான இந்தப் பேச்சரங்கத்தை வாசகிகள் ஆரவாரத்துடன் ரசித்தனர்.
அனைவருக்கும் பரிசு
விழாவில் வாசகிகளை உற்சாகப்படுத்தும் நோக்கத்தில் பல்வேறு போட்டிகள் நடைபெற்றன. ‘மைமிங்’ போட்டியில், ‘சின்னத்திரை மோகம்’ என்ற தலைப்பில் நடித்துக்காட்டிய வாசகிகள் முதல் பரிசைத் தட்டிச்சென்றனர். நாள் முழுவதும் டி.வி. முன்னால் அமர்ந்திருப்பதைப் போல் நடித்த வாசகி அனைவரது பாராட்டையும் அள்ளினார்.
ரங்கோலிப் போட்டியில், சரண்யா முதல் பரிசைத் தட்டிச்சென்றார். அத்துடன், பந்து பாஸ் செய்வது, பிஸ்கட் சாப்பிடுவது, பலூன் உடைத்தல், கோலி-ஸ்பூன் போட்டி உள்ளிட்ட பல்வேறு சுவாரசியமான போட்டிகள் நடத்தப்பட்டு, பரிசுகள் வழங்கப்பட்டன.
விழாவின் இடையில் திருப்பூரின் சிறப்புகள் தொடர்பான கேள்விகள் கேட்கப்பட்டு, சரியாகப் பதிலளித்த வாசகிகளுக்குப் பரிசுகள் வழங்கப்பட்டன. திடீர் போட்டியில், மழை, நிலா, பூ, தாலாட்டு, அம்மா, பறவைகள், பொங்கல் உள்ளிட்ட வார்த்தைகளில் உடனடியாக இரண்டு பாடல்களைப் பாடி அசத்திய வாசகிகளுக்கு ஆச்சரியப் பரிசுகளும் வழங்கப்பட்டன.
வாசகிகள் செல்வி விஜயகுமார், அன்னம் ஆகியோர் பம்பர் பரிசுகளைத் தட்டிச்சென்றனர். விழாவில் கலந்துகொண்ட அனைவருக்கும் பரிசுகள் கிடைத்ததால் வாசகிகள் பெரும் மகிழ்ச்சியடைந்தனர். மாலை நிகழ்ச்சியைச் சின்னத்திரை நடிகையும் தொகுப்பாளினியுமான தேவி கிருபா தொகுத்து வழங்கினார்.
இந்த விழாவை ‘இந்து தமிழ்’ நாளிதழுடன் இணைந்து இந்தியன் ஆயில் நிறுவனம், பொன்வண்டு சோப், செளபாக்யா, பொன்மணி வெட்கிரைண்டர், ஆர்.கே.ஜி. நெய், சக்தி மசாலா, மில்கா ஒண்டர் கேக், பனானாஸ் சிலைஸ், ஜூவல் ஒன், பாரத் எலெக்ட்ரானிக்ஸ் அண்ட் அப்ளையன் சஸ், ரமணி நிசான், பூமர் லெக்கிங்ஸ், சாவித்ரி போட்டோ ஹவுஸ், சூர்யா கேட்டரிங் ஆகிய நிறுவனங்கள் இணைந்து வழங்கின.
படங்கள்: ஜெ.மனோகரன்
பெண்கள் மீதான வன்முறையை ஒழிக்கும்விதமாக ஒவ்வோர் ஆண்டும் நவம்பர் 25 ‘ஆரஞ்சு தின’மாகக் கொண்டாடப்படுகிறது. இதையொட்டி ‘இந்து தமிழ்’ நாளிதழின் ‘பெண் இன்று’ இணைப்பிதழும் ஐ.நா. பெண்கள் அமைப்பும் சேர்ந்து முன்னெடுக்கும் பரப்புரையின் ஒரு பகுதியாக பெண்களின் தன்னம்பிக்கையை அதிகரிக்கும் விதமாக திருப்பூர் மகளிர் திருவிழாவில் சிறப்பு அழைப்பாளர்கள் பேசினர். |
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT