Last Updated : 02 Dec, 2018 12:45 PM

 

Published : 02 Dec 2018 12:45 PM
Last Updated : 02 Dec 2018 12:45 PM

வண்ணங்கள் ஏழு 32: ஒரு வண்ணத்துப்பூச்சியின் நெகிழ்ச்சி!

திருநங்கை 25 என்னும் குடையின்கீழ் மூன்று நாள் நிகழ்ச்சியைச் சகோதரன், ஐடிஐ, தோழி அமைப்புகள் ஆகியவை இணைந்து நடத்தின. சென்னை லயோலா கல்லூரியில் தொடங்கி கலைவாணர் அரங்கில் இந்த நிகழ்ச்சியை நிறைவுசெய்தனர். 

திருநங்கைகளின் 25 ஆண்டுகால சாதனைப் புத்தகத்தைப் புரட்டிப் பார்க்கும் இந்த நிகழ்வில் திருநங்கைகளுக்கான மரியாதையையும் சமூக அங்கீகாரத்தையும் எழுத்திலும், பேச்சிலும், காட்சியிலும் தொடர்ந்து வலியுறுத்திவருபவரும் திருநங்கைகளால் மரியாதையுடன் ‘அப்பா’ என்று கொண்டாடப்படுபவருமான வீ.கே.டி.பாலன் போன்றவர்கள் கவுரவப்படுத்தப்பட்டனர்.

பெருகும் ஆதரவு

சமூகத்தில் இன்றைக்குத் திருநங்கைகள் மறுக்க முடியாத சக்தியாக மாறிவருகின்றனர். அவர்கள் நடத்தும் விழாக்கள் பொதுமக்களை மட்டுமல்லாமல் ரோட்டரி சங்கங்கள், அரிமா சங்கங்கள், திரைத் துறையினர் ஆகியோரையும் ஈர்க்கின்றன.

ஆனால், இந்த மாற்றங்களுக்குக் காரணம் திருநங்கைகளின் தொடர்ச்சியான செயல்பாடுகளே என்பதை ஆணித்தரமாகச் சொன்னது இந்த விழா. சமூகப் புறக்கணிப்பாலும் பெற்றோரின் ஆதரவு இல்லாமலும் கூட்டுப் புழுக்களாக வீட்டிலிருந்து வெளியேறுபவர்களைக் காப்பாற்றி, அடைக்கலம் கொடுத்து, அவர் களை வண்ணத்துப்பூச்சியாக மாற்று வது திருநங்கை சமூகமே.

அப்படிப்பட்ட ஒரு வண்ணத்துப்பூச்சிதான் மொபினா! குடும்பத்தின் புறக்கணிப்பால் வெளியேறிய இவர் பல அழகிப் போட்டிகளில் வென்றதுடன், பெற்றோரின் மனத்தையும் வென்றிருக்கிறார். விழாவன்று மேடையேறிய மொபினாவின் பெற்றோர் அவரைப்  பாராட்டியபோது மொபினா மட்டுமல்ல; ஒட்டுமொத்த அரங்கமே நெகிழ்ந்தது.

அனைவரது கண்களிலும்  ஆனந்தக் கண்ணீர். தங்கள் குழந்தைகளின் உடல், உள்ளம் சார்ந்த வேறு பாட்டைப் புரிந்துகொள்வதில் இருக்கும் சிறப்பை அரங்கில் இருந்தவர்களுக்கு உணர்த்திய தருணம் அது.

நான்கு சோறு பதம்

கடந்த 25 ஆண்டுகளில் சமூகப் புறக்கணிப்பு களையும் தாண்டி எண்ணற்றவர்கள் பல துறைகளில் சாதித்திருக் கின்றனர். ஒவ்வொரு துறையிலும் திருநங்கைகளின் வளர்ச்சி பெரும் போராட்டத்துக்குப் பிறகே சாத்தியமாகியிருக்கிறது. அப்படிச் சாதித்தவர்களின் பிரதிநிதிகளாகச் சிலரை மேடையில் ஏற்றிக் கவுரவித்தனர்.

மும்பை, புனே, ஹைதராபாத் போன்ற நகரங்களில் இருந்து புடவைகளை வாங்கி விற்பனை செய்யும் ஷாலினி, பிசியோதெரபிஸ்ட் செல்வி, பன்னாட்டுத் தகவல் தொழில்நுட்ப நிறுவனத்தில் பணிபுரியும் கிரவுளின், முதல் திருநங்கை வழக்கறிஞராகப் பதிவு செய்திருக்கும் சக்தி ஷர்மிளா ஆகியோர் பானை சோற்றுப் பதங்கள்!

வரவேற்பு பெற்ற ‘காம்போ’

விழாக்களின் வழக்கமான அம்சங்களான ஆட்டம் பாட்டம் கொண்டாட்டங்களைத் தவிர, ‘கண்ணா நீ தூங்கடா’, ‘கோகுலத்தில் கண்ணா’ போன்ற கிருஷ்ணன் பாடல்களின் சிலவரிகளை மட்டும் எடுத்துக்கொண்டு ஒரு நாட்டிய நிகழ்ச்சியை ‘காம்போ’வாக வழங்கியவிதம் அரங்கில் இருந்தோரின் பாராட்டைப் பெற்றது. இதற்கு நடன வடிவமைப்பு செய்த திருநங்கை ரம்பா பாராட்டுக்கு உறியவர். சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்ட நடிகர் லாரன்ஸ் இந்த நடனக் காட்சியைக் கண்டு வியந்து,  திருநங்கைகளைப் பிரதானப் படுத்தி ‘நாயக்’ என்று ஒரு படத்தை இயக்கவிருப்பதாக அறிவித்தார்.

நால்வருக்கு உதவி

“திருநங்கைகளுக்கு நிரந்தரமான இடம் வேண்டும் என்பது எங்களின் நீண்ட காலக் கனவு. அதை இரண்டு ஆண்டுகளுக்கு முன்பாக லாரன்ஸ் அண்ணனிடம் சொன்னோம். அவரும் உதவுவதாகச் சொன்னார். தொடர்ந்து பல நிகழ்ச்சிகளை நடத்தி, அவரது பார்வைக்கு எடுத்துச் சென்று வந்தோம். தற்போது எங்களுக்கான நிலத்தை லாரன்ஸ் அளித்திருக்கிறார். இனி அதில் கட்டிடம் எழுப்புவதற்கு அரசின் உதவியையும் பல நல்ல உள்ளங்களின் ஆதரவையும் கேட்போம் என்று சொல்லியிருக்கிறார் அவர்.

அத்துடன் சிறப்பு மருத்து உதவி தேவைப்படும் நான்கு திருநங்கைகளுக்கும் உரிய மருத்துவ உதவியைச் செய்வதற்கு லாரன்ஸ் ஒப்புக்கொண்டுள்ளார்.

திருநங்கைகளைக் கருணை உள்ளத்தோடு சமூகமும் அரசும் அணுக வேண்டிய தேவை இருக்கிறது. ஒட்டுமொத்த திருநங்கைச் சமூகத்துக்கும் கருணை அடிப்படையிலான உதவிகளை அரசு செய்ய வேண்டும். கல்வி, வேலைவாய்ப்பில் அவர்களுக்கான இட ஒதுக்கீட்டை உறுதிசெய்ய வேண்டும் என்பதுதான் அரசுக்கு நாங்கள் வைக்கும் கோரிக்கை” என்றார் சகோதரன் அமைப்பின் பொது மேலாளர் ஜெயா.

பொதுச் சமூகத்தின் புரிதல்

இதுபோன்ற விழாக்களால் பொதுச் சமூகத்தில் பல நல்ல விஷயங்களைச் செய்துவரும் அரிமா உறுப்பினர்கள், இன்னர்வீல் அமைப்பினர், மருத்துவர்கள், சட்டத்துறை நிபுணர்கள், காவல் துறை உயர் அதிகாரிகள் - இப்படிப் பலரையும் ஒருங்கிணைத்துத் திருநங்கைகள் குறித்த புரிதலை அதிகரிக்க முடிகிறது என்றார் நிகழ்ச்சிக்கு வந்திருந்த ஒருவர். அது உண்மை என்பது விழாவிலேயே உணரமுடிந்தது.

 

சுயம்பு

yezhu-3jpg

தனியார் கல்லூரியில் உதவிப் பேராசிரியர் பணியிலிருப்பவர் வெ.முனிஷ். தமிழ் இலக்கியத்தில் அரவாணிகள், அரவாணிகளின் பன்முக அடையாளங்கள், காலந்தோறும் தமிழ் இலக்கணங்களில் மூன்றாம் பாலினம் போன்ற நூல்களை எழுதியிருக்கிறார். தற்போது ‘சுயம்பு’ என்ற தலைப்பில் திருநங்கைகள் பற்றிய கவிதைகளை எழுதித் தொகுத்திருக்கிறார். திருநங்கையின் மனவலியைப் பொதுச் சமூகத்தின் பார்வையில் வெளிப்படுத்து கின்றன இவரின் கவிதைகள்.

தமிழ்நாடு அரசின் சிறந்த எழுத்தாளர் விருதை 2010-ல் பெற்றிருக்கும் இவர், மணிமுத்தாறு இலக்கிய விருது, அரவாணியர் மேம்பாட்டுக்காக உழைக்கும் விருது ஆகியவற்றையும் பெற்றிருக்கிறார்.

திருநங்கையர் குறித்து சொல்லப்பட்ட முதல் ஆய்வு ‘தமிழ் இலக்கியத்தில் அர வாணிகள்’. தொல்காப்பியம், எட்டுத் தொகை, பத்துப்பாட்டு, நீதிநூல்கள், ஐம்பெரும் காப்பியம், பன்னிரு திருமுறைகள், நாலாயிர திவ்யப்பிரபந்தம் ஆகியவற்றில் இருக்கும் அரவாணியர் குறித்த பதிவுகளை வெளிக்கொணர்ந்து அவர்களுக்கான வரலாற்றை மீட்டுருவாக்கம் செய்திருக்கிறது.

yezhu-2jpgright

மேலும், நாட்டுப்புறவியல், நவீன இலக்கியப் பதிவுகள் ஆகியவற்றில் உள்ள திருநங்கைகள் குறித்த பதிவுகளையும் பேசுகிறது இந்த ஆய்வு.

இரண்டாயிரம் ஆண்டு கால இலக்கிய வரலாற்றை மீட்டுருவாக்கம் செய்து, அரவாணியர் இன்று நேற்றல்ல மனிதன் தோன்றியபோதே தோன்றியுள்ளனர் என்று அழுத்தமாகக் கூறுவதோடு மார்க்ஸியம், பெரியாரியம், தலித்தியம், பெண்ணியம் போன்று அரவாணியம் என்றொரு கோட்பாட்டை முன்வைக்கிறது.


(புரிந்துகொள்ள முயல்வோம்)
கட்டுரையாளரைத் தொடர்புகொள்ள: ravikumar.cv@thehindutamil.co.in

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x