Published : 23 Dec 2018 11:34 AM
Last Updated : 23 Dec 2018 11:34 AM
கனடாவில் பெண்ணுரிமை இயக்கத்தை முன்னெடுத்துச் சென்ற பெண்ணியச் செயற்பாட்டாளர்களில் முதன்மை யானவர் ஹென்ரீட்டா. எழுத்தாளர், ஓவியர், சட்ட நிபுணர், ஆசிரியர், பெண்ணியச் செயற்பாட்டாளர் எனப் பன்முகம்கொண்டவர்.
இளம் வயது தொடங்கி பெண்ணுரிமை, பெண் கல்வி, பணி, உடல்நலன் போன்றவற்றுக்காக நாடு முழுவதும் எண்ணற்ற போராட்டங்களை முன்னெடுத்தார். இவரது போராட்டங்கள் கோஷத்துடன் முடிந்தவையல்ல. அவர் முன்னெடுத்துச் சென்றதை நிகழ்த்திக்காட்டும் விதமாக முடிந்தன.
அவர் காலத்தில் அங்கு வாழ்ந்த பிற செயற்பாட்டாளர்களுடன் இணைந்து செயல்பட்டு, பெண்களின் ஒற்றுமையால் நிகழும் அற்புதப் பலன்களைப் பெண்களுக்கு உணர்த்தினார். தனது வாழ்நாள் முழுவதும் இடைவிடாத போராட்டங்களின் மூலம் பெண்களுக்கு எதிரான அநீதிகளுக்கு முடிவுகட்ட முயன்ற அவரது 165-வது பிறந்த நாளையொட்டி டிசம்பர் 18 அன்று சிறப்பு டூடுலை கூகுள் வெளியிட்டது.
துணிவால் பெற்ற நீதி
திருச்சி சோமரசம்பேட்டை காவல் நிலையத்தில் பாலசுப்பிரமணியம் (54) துணை ஆய்வாளராகவும் சசிகலா (34) தலமைக்காவலராகவும் பணியாற்றுகின்றனர். கடந்த 12-ம் தேதி இரவு நேரப் பணியின்போது பாலசுப்பிரமணியம் சசிகலாவிடம் தகாத முறையில் நடந்துகொண்டார். இது குறித்து சசிகலா புகார் அளித்தார். காவல் நிலையத்தில் இருந்த வீடியோ பதிவு எஸ்.பி. ஆபீசுக்கு அனுப்பப்பட்டது.
அப்போது இந்த வீடியோ எப்படியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலானது. உடன் பணிபுரிந்த பெண்ணிடம் தகாத முறையில் நடந்துகொண்டதற்காக பாலசுப்பிரமணியம் உடனடியாக சஸ்பெண்ட் செய்யப்பட்டார். “இருவரின் சம்மதத்தோடுதான் இது நடந்தது. தண்டனை கொடுத்தால் இருவருக்கும்தான் கொடுக்கணும்.
எனக்கு மட்டும் தண்டனை கொடுப்பது என்ன நியாயம்?” எனக் கேட்டு வழக்கைத் திசை திருப்ப முயன்றார் பாலசுப்பிரமணியம். இதையடுத்து பெண் காவலரைப் பணி செய்யவிடாமல் தடுத்தது, பாலியல்ரீதியாகத் துன்புறுத்தியது, மிரட்டல் விடுத்தது என மூன்று பிரிவுகளின்கீழ் அவர்மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது. சசிகலா துணிச்சலாக அளித்த புகாரின் அடிப்படையிலேயே இந்த நடவடிக்கையைக் காவல்துறை எடுத்துள்ளது.
தங்கம் வென்ற சிந்து
உலகப் பெண்கள் பேட்மிண்டன் இறுதிச் சுற்றுப் போட்டி சீனாவின் குவாங்சோவ் நகரில் சமீபத்தில் நடந்தது. அதில் பி.வி.சிந்து, முன்னாள் உலக சாம்பியனான ஜப்பான் வீராங்கனை நஜோமி ஒகுஹாராவை எதிர்கொண்டார். ஆட்டம் முழுவதும் மின்னல் வேகம், எதிராளியின் தவறைப் புள்ளியாக்குவதில் கவனம் என நேர்த்தியான ஆட்டத்தை சிந்து வெளிப்படுத்தினார்.
ஜப்பான் வீராங்கனையும் ஆட்டத்தை எளிதாக விட்டுவிடவில்லை. சிந்துவை அவர் அபாரமாக எதிர்கொண்டார். இறுதியில் வெற்றியைத் தன்வசப்படுத்தி, உலக சாம்பியன் பட்டம் வென்ற முதல் இந்தியப் பெண் என்ற வரலாற்றுச் சாதனையை பி.வி. சிந்து படைத்தார். 2017 இறுதிப் போட்டியில் ஒகுஹாராவிடம் அடைந்த தோல்வியை இந்த வெற்றியின்மூலம் சமன்செய்துவிட்டார் சிந்து!
விடைபெற்ற பெண் சிங்கம்
பென்னி மார்ஷல் 60-களில் ஹாலிவுட்டில் கொடிகட்டிப் பறந்த அமெரிக்கப் பெண் இயக்குநர். ஆண் இயக்குநர்கள் மட்டுமே ஆதிக்கம் செலுத்திவந்த அந்தக் காலத்தில் அமெரிக்கத் திரையுலகில் இயக்குநராக பென்னி கலக்கினார். Big, A League of Their Own போன்ற பல வெற்றிப் படங்களை அவர் எடுத்தார். இரண்டு முறை ஆஸ்கர் விருதை வென்றுள்ளார். இவரது Big திரைப்படம் 100 மில்லியன் டாலர்களை வசூல் செய்தது.
உடல்நலக் குறைவால் கடந்த திங்கள் அன்று பென்னி மரணமடைந்தார். பென்னியின் மரணம் ஹாலிவுட்டையே சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. சமூக வலைத்தளங்கள் அவருக்காக எழுதப்பட்ட இரங்கல் பதிவுகளால் நிரம்பிவழிகின்றன. சிறந்த நகைச்சுவை உணர்வு உடைய பென்னிக்கு, ‘ஆண் சிங்கங்கள் மத்தியில் வாழ்ந்த பெண் சிங்கம்’ என்று புகழாரம் சூட்டிப் பலர் நினைவுகூர்ந்தனர்.
மறைந்தும் வாழும் அஸ்மா
அஸ்மா ஜஹாங்கீர், பாகிஸ்தானைச் சேர்ந்த மனித உரிமை ஆர்வலர். தனது சேவையால் உலகம் முழுவதும் அறியப்பட்ட அவர், கடந்த பிப்ரவரி மாதம் மாரடைப்பால் மரணம் அடைந்தார். இந்நிலையில், ஐ. நா. மனித உரிமைகள் அமைப்பின் இந்த ஆண்டுக்கான விருதுக்கு அஸ்மா ஜஹாங்கீர் தேர்வுசெய்யப்பட்டுள்ளார். இவரைத் தவிர இந்த விருதுக்கு மேலும் மூவர் தேர்வுசெய்யப்பட்டுள்ளனர்.
தான்சானியா நாட்டைச் சேர்ந்த ரெபேக்கா கியூமி, பிரேசிலைச் சேர்ந்த வழக்கறிஞர் ஜோனியா வாப்பிச்சானா ஆகியோரும் இந்த விருதுக்குத் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். அஸ்மா ஜஹாங்கீரின் மகள் முனீஜா ஜஹாங்கீர் இந்த விருதைப் பெற்றுக் கொண்டார். தன்னலமற்ற உன்னத சேவையால் அஸ்மா ஜஹாங்கீர் தான் மறைந்த பின்னும் விருது பெற்றிருப்பது அவரது சேவைக்குக் கிடைத்த மற்றுமோர் அங்கீகாரம்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT