Last Updated : 11 Nov, 2018 10:21 AM

 

Published : 11 Nov 2018 10:21 AM
Last Updated : 11 Nov 2018 10:21 AM

ஆடும் களம் 27: இந்திய கபடியின் கில்லி

பெருநகரங்களில் குவிந்து கிடக்கும் வசதி, வாய்ப்பைப் பயன்படுத்தி விளையாட்டு வீராங்கனைகளாவோர் ஒரு ரகம். வசதி வாய்ப்பு எதுவுமே இல்லாத கிராமப்புறங்களில் பிறந்து தன்னம்பிக்கையால் வீராங்கனைகளாவோர் இரண்டாவது ரகம். இந்திய மகளிர் கபடி அணியின் கேப்டன் மமதா பூஜாரி இதில் இரண்டாவது ரகம். பல்வேறு சவால்களையும் இடையூறுகளையும் சந்தித்து, பின்னர் கபடி விளையாட்டில் ‘கில்லி’யானவர் இவர். முதல் மகளிர் கபடி உலகக் கோப்பையை இந்தியாவுக்குப் பெற்றுதந்த கபடி ராணியும் இவரே! 

கர்நாடகத்தின் உடுப்பி மாவட்டத்தில் உள்ள ஹெர்மண்டே என்னும் ஊரில் மமதா பிறந்தார். பள்ளியில் படித்த காலத்திலேயே எல்லா விளையாட்டுகளும் மமதாவுக்கு அத்துப்படி. கோகோ, கைப்பந்தாட்டம், தடகளம் போன்றவை அவருக்குப் பிடித்தமானவை. 1990-களில் கபடி அணி இந்தியாவில் கால் பதிக்கத் தொடங்கியது. பெண்கள் பள்ளிகள், கல்லூரிகளில் அந்தக் காலகட்டத்தில்தான் கபடி அணிகள் உயிர்பெற்றன. மமதா 12-ம் வகுப்பு படித்தபோதுதான் கபடி விளையாட்டு அவருக்கு அறிமுகமானது.

உடை தயக்கம்

பள்ளி அணியின் சார்பாகக் கபடி விளையாட மாணவிகளை அழைத்தார்கள். ஆனால், மமதா உள்பட எந்த மாணவியும் கபடி விளையாட விரும்பவில்லை. கிராமத்தில் பிறந்து, கட்டுப்பாடுகளுடன் வளர்க்கப்பட்ட பெண்களால் ஷார்ட்ஸ் அணிந்துகொண்டு எப்படிக் கபடி விளையாட முடியும்?

ஷார்ட்ஸ் போட்டுக்கொண்டு விளையாட மமதாவுக்கும் விருப்பமில்லை.  விளையாட விருப்பமில்லாமல் கபடி கோர்ட்டில் நின்றுகொண்டிருந்தார்கள். கபடி விளையாட ஏழு பேர் தேவை. மமதாவுக்கு விளையாட்டு மீது ஆர்வம் அதிகம் என்பது பயிற்சியாளருக்குத் தெரிந்ததால், மமதாவைத்தான் முதலில் அவர் அழைத்தார்.

உடைந்த தடை

மமதா 5 அடி 10 அங்குல உயரத்துடன். விளையாட்டுக்கே உரிய வேகமும் விவேகமும் அவரிடம் நிரம்பி வழிந்தன. அதனால், மமதாவைப் பிடிவாதமாகக் கபடி அணியில் சேர்த்தார் பயிற்சியாளர். இது நடந்தது 2003-ம் ஆண்டில். மமதா கபடி விளையாடத் தொடங்கிய காலத்தில் களிமண் தரையில்தான் பயிற்சி மேற்கொண்டார். விளையாடிவிட்டு வீடு திரும்பும்போது உடை முழுவதும் அழுக்காகிவிடும். கை, கால்களில் சிராய்ப்புகள் இருக்கும். இந்தக் காயங்கள் மமதாவின் திருமணத்துக்குத் தடையாக வந்துவிடுமோ என்று அவருடைய பெற்றோர் அச்சப்பட்டார்கள்.

வீட்டில் மூத்த பெண்ணான மமதாவுக்கு இரண்டு சகோதரிகள் என்பதால், அவரது விளையாட்டு ஆர்வம் பெற்றோருக்குச் சற்றுக் கவலையளித்தது. ஒரு கட்டத்தில் கபடி விளையாட மமதாவை அவர்கள் அனுமதிக்க மறுத்தார்கள். ஆனால், மமதாவின் பயிற்சியாளர் அதற்குச் சம்மதிக்கவில்லை. மமதாவின் பெற்றோரைச் சமாதானப்படுத்தி அவரை விளையாடவைத்தார்.

நம்பிக்கையோடு பயிற்சி மேற்கொண்ட மமதா, அடுத்த மூன்று ஆண்டுகளில் தேசிய அளவிலான போட்டிகளில் பங்கேற்று உச்சம் தொட்டதன் பின்னணிக் காரணம்  அவரது உழைப்பு மட்டுமே. அந்தக் காலகட்டத்தில் தேசியக் கபடி அணியில் முதன்மை வீராங்கனையாக அவர் உருவெடுத்திருந்தார். ஹரியாணா, மஹாராஷ்டிரா போன்ற மாநிலங்களிலிருந்து வந்த வீராங்கனைகளைவிட இந்தியக் கபடியில் மமதா ஆதிக்கம் செலுத்தினார்.

உலை வாயை மூடினாலும் ஊர் வாயை மூட முடியுமா? மமதா தன் வீட்டிலிருந்து 3 கி.மீ. தொலைவில் உள்ள இடத்துக்குச் சென்று கபடி பயிற்சி மேற்கொண்டு வந்தார். பயிற்சி முடிந்து காடு வழியாக 3 கி.மீ. தூரம் நடந்தே வீட்டுக்கு வருவார். அப்படி வருவதைப் பார்த்த மமதாவின் ஊர்க்காரர்கள், “காடு வழியாக ஏன் அவள் தனியாக வருகிறாள்?” என்று பேச ஆரம்பித்தார்கள்.  ஊர் வாயை மூடுவதற்காக மமதாவின் சகோதரரை உடன் அனுப்பி வைக்கத் தொடங்கினார்கள் அவருடைய பெற்றோர். தொடக்கத்தில் கபடிக்காக மமதா இதுபோன்ற விமர்சனங்களைச் சந்திக்க வேண்டியிருந்தது.

விளையாட்டில் ஆதிக்கம்

2006-ல் கிராமத்தில் இருந்த அனைவரும் மமதாவை வரவேற்கப் பேருந்து நிறுத்தத்தில் காத்திருந்தார்கள். இலங்கையில் நடைபெற்ற தெற்காசிய விளையாட்டுப் போட்டியில் தங்கப் பதக்கத்துடன் திரும்பிய மமதாவை ஊரே திரண்டு வந்து வரவேற்றது. தொடக்கத்தில் மமதா கபடி விளையாடுவதைப் புறம்பேசிய ஊர்க்காரர்கள், அந்த வெற்றிக்குப் பிறகு மமதாவைப் புகழ்ந்தார்கள்.

கபடி விளையாட  எக்காரணம் கொண்டும் தடை போட்டுவிடாதீர்கள் என்று மமதாவின் பெற்றோரிடம் அன்புக் கோரிக்கை வைத்தார்கள். அந்தக் கிராமத்தில் உள்ள ஒவ்வொருவரும் மமதாவை நினைத்துப் பெருமையடைந்தார்கள்.

முத்திரை வெற்றி

இது மமதா பங்கேற்ற முதல் சர்வதேசத் தொடர். அடுத்த இரண்டு ஆண்டுகளில் இந்திய மகளிர் அணியின் கேப்டனாகும் அளவுக்கு மமதா உயர்ந்தார்.  கர்நாடக மாநிலத்தின் முதன்மை விளையாட்டு வீராங்கனையாகவும் ஆனார். 2008-ம் ஆண்டில் மகளிர் கபடி அணியின் கேப்டனாக மமதா உயர்ந்தார். 2010-ம் ஆண்டில் சீனாவின் குவாங்ஸு நகரில் நடந்த ஆசிய விளையாட்டுப் போட்டிக்கு இவரது தலைமையில்தான் இந்திய அணி சென்றது. தங்கப் பதக்கத்துடன் இந்திய அணி நாடு திரும்பியது.

ஒரு வீட்டில் ஒரு பெண் வேலைக்குச் சென்றால், அந்தக் குடும்பமே உயரும் என்று சொல்லப்படுவதைப் போல கபடியால் கிடைத்த ரயில்வே வேலையால் மமதாவின் குடும்பமும் இந்தக் காலகட்டத்தில் உயர்ந்தது. கபடி விளையாட்டு மூலம் தனக்குக் கிடைத்த பரிசுப் பணத்தை வைத்து சொந்தமாக வீடு கட்டி, தன் பெற்றோருக்கு அர்ப்பணம் செய்தார் மமதா.

2012-ம் ஆண்டில் பாட்னாவில் நடைபெற்ற முதல் மகளிர் உலகக் கோப்பைக் கபடி போட்டி மமதாவின் தலைமைப் பண்பு வெளிப்பட ஒரு வாய்ப்பாக அமைந்தது. அந்த உலகக் கோப்பையில் இவரது தலைமையில் களமிறங்கிய இந்திய அணி, உலகக் கோப்பையைக் கைப்பற்றியது. இந்த வெற்றி மமதாவின் வாழ்க்கையில் மறக்க முடியாதது. அந்த வெற்றிக்குப் பிறகு மமதாவை ‘கபடி ராணி’ என்று செல்லமாக அழைக்கத் தொடங்கினார்கள்.

அங்கீகாரம் தந்த உழைப்பு

திருமணத்துக்குப் பிறகு விளையாட்டை விட்டுவிட வேண்டும் என்று மமதாவின் பெற்றோர் அவரிடம் ஏற்கெனவே வாக்குறுதி பெற்றிருந்தார்கள். அதனால், திருமணத்துக்கு முன்பாக அதற்குத் தன்னைத் தயார்படுத்திவந்தார் மமதா. 2013-ம் ஆண்டில் மமதாவுக்குத் திருமணம் நடந்தது. திருமணத்துக்குப் பிறகு கணவர் அபிஷேக்கின் ஆதரவு அவருக்கு முழுமையாகக் கிடைத்தது. “கடின உழைப்பால் இந்த உயரத்துக்கு வந்த மமதா யாருக்காகவும் விளையாடுவதை நிறுத்திக்கொள்ள வேண்டாம்” என்று மமதாவின் கணவர் பிடிவாதமாகக் கூறிவிட்டதால், அவரது கபடி பயணம் தொடர்ந்தது.

தொடர்ந்து கபடி விளையாடிய மமதா, 2014-ம் ஆண்டில் மத்திய அரசின் அர்ஜுனா விருது பெற்றார்.  இதுவரை 11 சர்வதேசப் பதக்கங்களை மமதா பெற்றிருக்கிறார். சர்வதேச அளவுக்கு உயர்ந்துவிட்ட நிலையிலும், கிராமத்து கலாச்சாரம் இவரை விட்டு இன்னும் போகவில்லை. இப்போதும்கூட ஷார்ட்ஸ் அணிவது என்றால் மமதாவுக்குக் கூச்சம்தான். கபடி களத்தைத் தவிர வேறு எங்குமே அவர் ஷார்ட்ஸ் அணிவதில்லை. பயிற்சியின்போதுகூட சல்வார் அணிந்துகொண்டுதான் இருப்பார்.

கபடியில் 12 ஆண்டுகளாக நீடித்துவரும் இந்தச் சாதனைப் பயணத்தில் ஒன்பது முறை தேசிய அளவில் தங்கப் பதக்கங்களைப் பெற்றிருக்கிறார். கபடி விளையாடத் தொடங்கியதிலிருந்து இப்போதுவரை அவர் சந்தித்த திருப்புமுனைகள் எல்லாமே பெரும் அங்கீகாரமாக மாறின. அவரது கடின உழைப்புதான் இந்த அங்கீகாரத்துக்குக் காரணம் என்பது மிகையல்ல.

(வருவார்கள் வெல்வார்கள்)
கட்டுரையாளரைத் தொடர்புகொள்ள: karthikeyan.di@thehindutamil.co.in

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x