Published : 18 Nov 2018 10:53 AM
Last Updated : 18 Nov 2018 10:53 AM
அமெரிக்காவின் ஜேரட் பொலிஸ் என்பவருக்கும் வேலூர் மாவட்டத்தின் குக்கிராமத்தைச் சேர்ந்த தமிழ்ச்செல்விக்கும் ஓர் ஒற்றுமை இருக்கிறது.
ஜேரட் பொலிஸ், அண்மையில் அமெரிக்காவில் நடந்த தேர்தலில் ஜனநாயகக் கட்சி சார்பாகப் போட்டியிட்டு, கொலராடோ மாகாணத்தின் கவர்னராகத் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார். தன்னைத் தன்பால் உறவாளராக அறிவித்துக்கொண்ட இவரது வெற்றி அமெரிக்காவில் மாற்றுப் பாலினத்தவர் மத்தியில் முக்கியமானதாகப் பார்க்கப்படுகிறது. பல தடைகளைக் கடந்து இந்தியாவில் செவிலியர் படிப்பில் சேர்ந்திருக்கும் முதல் திருநர் மாணவி என்னும் பெருமையைப் பெற்றிருப்பவர் தமிழ்ச்செல்வி.
தமிழ்ச்செல்வி, வேலூர் மாவட்டம் வாலாஜா தாலுகாவில் இருக்கும் புளியங்கண்ணு கிராமத்தைச் சேர்ந்தவர். இரண்டு ஆண்டுகளாகவே செவிலியர் படிப்புக்காக முயன்றுகொண்டிருந்தார். கடந்த ஆண்டு பி.பார்ம். படிப்பதற்காக முயன்றார். அவர் திருநர் என்ற காரணத்தால் மெரிட் லிஸ்டில் அவரால் இடம்பெற இயலவில்லை.
அரசுக் கல்லூரிகளில்தான் இப்படிச் செய்கிறார்களே என்று தனியார் செவிலியர் கல்லூரியில் சேர்ந்திருக்கிறார். ஆறு மாதம் ஆனபிறகு, திருநராயிருக்கும் ஒருவர் செவிலியர் படிப்பைப் படிக்க முடியாது என்று கடிதம் வந்தது. அந்தக் கடிதத்தை எடுத்துக்கொண்டு ஒவ்வொரு அரசு அலுவலகமாக ஏறி இறங்கியதுதான் மிச்சம். அதிகாரிகள் அவருக்கு ஆறுதல் சொன்னார்களே தவிர, அவரது செவிலியர் படிப்பு கனவாகவே இருந்தது.
கருணைக்கொலை செய்துவிடுங்கள்
“அதற்கு மேல் என்னால் பொறுத்துப் போக முடியவில்லை. சுகாதாரத்துறை செயலாளருக்கு, “என்னை நர்சிங் படிக்க அனுமதியுங்கள். இல்லாவிட்டால் கருணைக் கொலை செய்துவிடுங்கள்” என்று கடிதம் எழுதினேன். அதன்பிறகு, இந்த ஆண்டு டிப்ளமோ இன் ஜெனரல் நர்சிங் பிரிவில் திருநர் சமூகத்தைச் சேர்ந்தவரும் செவிலியர் படிப்பில் சேர விண்ணப்பிக்கலாம் என்று ஆணை பிறப்பித்தனர்.
அதிலும் தகுதிப் பட்டியலில் வந்தும் கவுன்சலிங்கில் மட்டும் என்னுடைய பெயர் இடம்பெறவில்லை. அதனால் சமூகச் செயற்பாட்டாளர் கிரேஸ் பானு, பிரித்திகா யாஷினி, அனுஸ்ரீ ஆகியோரின் உதவியுடன் வழக்கறிஞர் சஞ்சீவ் குமார் மூலமாக உயர் நீதிமன்றத்தில்
ரிட் மனுத்தாக்கல் செய்தேன். நான் இந்த வழக்கைத் தொடுத்ததைப் பார்த்து மனித உரிமை ஆணையம் என்னுடைய படிப்பு குறித்த விவரங்களை ஆராய்ந்து, எனக்கு ஆதரவாகச் செயல்பட்டது. அக்டோபர் 31 அன்று வேலூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் நர்சிங் படிப்பதற்கான அனுமதி கிடைத்தது” என்கிறார் தமிழ்ச்செல்வி.
பெருமையும் பொறுப்பும்
குடும்பத்தின் ஆதரவு மறுக்கப்படும் போதுதான் பிச்சை எடுப்பது, பாலியல் தொழிலில் ஈடுபடுவது போன்ற நிலைக்குப் பெரும்பாலான திருநங்கைகள் தள்ளப்படுகின்றனர். கல்வி, வேலைவாய்ப்பு போன்றவற்றில் பாலியல் சிறுபான்மையினருக்கான இட ஒதுக்கீட்டை அரசு சரியான முறையில் செயல்படுத்தினால்தான் தங்களின் நிலை மாறும் என்கிறார் தமிழ்ச்செல்வி.
“கல்லூரி விடுதியில் இடம் கிடைத்துவிட்டது. உடன் படிக்கும் மாணவிகள், ஆசிரியர்கள் அனைவரும் என் மீது அன்பாக இருக்கின்றனர். இந்தியாவிலேயே முதன்முறையாகச் செவிலியர் படிப்பில் சேர்ந்திருக்கும் முதல் திருநங்கை என்பதில் மகிழ்ச்சி. இந்தப் படிப்பை நல்லபடியாக முடித்து, நல்ல பேரை வாங்க வேண்டும் என்ற பொறுப்பும் இருக்கிறது” என்கிறார்.
கேரளத்தில் மணக்கும் தமிழ் பிரியாணி கோயம்புத்தூர் கரும்புக்கடை ஏரியாவில் சரோ அக்கா பிரியாணி என்றால் அவ்வளவு பிரசித்தம். அந்தப் பகுதியில் காது குத்து, கல்யாணம், கடை திறப்பு, திருமண விழா முதல் எந்த விழாவாக இருந்தாலும் அதில் சரோ அக்கா பிரியாணிக்கு நிச்சயம் இடம் இருக்கும். 50 பேர் இவரிடம் வேலை செய்கின்றனர். இதில் எட்டுப் பேர் திருநங்கைகள். சரோ அக்கா பிறந்த ஊர் திருச்சி. “குடும்பத்தால் ஒதுக்கப்பட்டு, தென்னிந்தியாவின் மான்செஸ்டரான கோயம்புத்தூரில் எப்படியும் வேலை கிடைக்கும் என்ற நினைப்பில் இங்கே வந்தேன். முதலில் ஒரு சின்ன ஓட்டலில் வேலைக்குச் சேரந்தேன். அதன் பின், எங்களுடைய மக்களின் அறிமுகம் கிடைத்தது. அவர்களோடு வெளியே வந்தேன். செல்வியம்மாதான் என் பிரியாணி குரு. இருவரும் எங்களுக்கு வரும் வேலையை இணைந்து செய்வோம்” என்கிறார் சரோ. செல்வி – சரோ இணையின் பிரியாணிக்கு இந்தப் பகுதியில் ரசிகர்கள் அதிகம். பிரியாணி செய்வதில் 20 வருட அனுபவம் சரோவுக்கு. செல்விக்கு 30 வருட அனுபவம். “25 பேராக இருந்தாலும் சரி 500, 1000 பேராக இருந்தாலும் பிரியாணி செய்துகொடுப்போம். கோயம்புத்தூர் தவிர கேரளத்தின் பாலக்காடு, திருச்சூர்வரை எங்களுக்கு வாடிக்கையாளர்கள் இருக்கிறார்கள். ஒரு பக்கெட் பிரியாணி வாங்கினால் எட்டுப் பேர்வரை தாராளமாகச் சாப்பிடலாம். கடைகளுக்கு நாங்கள் சப்ளை செய்ய மாட்டோம். இதைக் கொள்கை முடிவாகவே வைத்திருக்கிறோம்” என்கிறார் சரோ. மூன்று டன் பிரியாணி நவம்பர் 21 அன்று மவுலோத் விருந்துக்காக மூன்று டன் அரிசியில் 20 ஆயிரம் பேருக்கான பிரியாணியைச் சமைக்கவிருக்கிறார்கள். கோயம்புத்தூரைச் சுற்றியிருக்கும் மசூதிகளில் இருந்து அவர்களுக்கான பங்கைச் செலுத்தி, வாங்கிப் போவார்கள். பிரியாணி பக்குவம் 1 கிலோ மட்டன் பிரியாணி செய்யத் தேவையானவை: 150 கிராம் பூண்டு, 100 கிராம் இஞ்சி, சின்ன வெங்காயம் 400 கிராம், பெரிய வெங்காயம் (அதில் 200 கிராம் தாளிக்க, 200 கிராம் தயிர் பச்சடிக்கு) 200 கிராம் தக்காளி, மல்லி, புதினா ஒரு கைப்பிடி, தயிர் 100 கிராம், நெய் 100 கிராம், எண்ணெய் 150 மி.லி., மிளகாய்த் தூள் 1 டீஸ்பூன், உப்பு தேவையான அளவு, எலுமிச்சம் பழம் 1, பட்டை, கிராம்பு, ஏலக்காய் மூன்றையும் ஒரு எலுமிச்சை அளவுக்கு அரைத்து எடுத்துக்கொள்ள வேண்டும். பிரியாணி சமைக்கும் பாத்திரத்தில் நெய், எண்ணெய் இரண்டையும் நன்றாகக் காயவைத்ததும் அரிந்த பெரிய வெங்காயத்தைப் போட்டுப் பொன்னிறமாக வதக்க வேண்டும். இஞ்சி, பூண்டு விழுதைச் சேர்த்து வதக்க வேண்டும். அதன்பின் மிளகாய்த் தூள் போட்டு வதக்கிப் பிறகு சின்ன வெங்காயம், தக்காளி, தயிர், மல்லி, புதினா ஆகியவற்றைப் போட்டு வதக்க வேண்டும். அதன்பின் மட்டனை நன்றாகக் கழுவிச் சேர்த்து நன்றாக வதக்க வேண்டும். மட்டன் வெந்ததும் எலுமிச்சைச் சாறு, மல்லி, புதினா கலந்து சிறிது நீரை ஊற்றி இன்னும் சிறிது நேரம் வேகவையுங்கள். கொதிவந்தவுடன் அரிசியைப் போட வேண்டும். இதையெல்லாம் செய்வதற்கு முன்பாகவே பிரியாணி அரிசியை (சீரக சம்பா அல்லது பாசுமதி அரிசி) ஊறவைக்க வேண்டும். ஊறவைத்த அரிசியைக் கறி மசாலா கலவையில் போட்டு ஒரு பங்குக்கு ஒன்றரைப் பங்கு அளவுக்கு நீர் ஊற்றுங்கள். மசாலாவில் அரிசியைக் கலக்கிவிட்டுக் கொதிவந்தவுடன் தட்டு போட்டு மூடிவிட வேண்டும். 20 நிமிடம் கழித்து எடுத்தால் கமகமக்கும் கோயம்புத்தூர் திருநங்கைகளின் தம் பிரியாணி தயார். சரோ தொடர்புக்கு: 94435 06333 |
(புரிந்துகொள்ள முயல்வோம்)
கட்டுரையாளரைத் தொடர்புகொள்ள: ravikumar.cv@thehindutamil.co.in
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT