Last Updated : 29 Oct, 2018 11:38 AM

 

Published : 29 Oct 2018 11:38 AM
Last Updated : 29 Oct 2018 11:38 AM

வண்ணங்கள் ஏழு 28: காதலின் உன்னதத்தைக் காகிதங்கள் உறுதி செய்யுமா?

நாட்டில் எத்தனையோ திருமண சேவை இணையதளங்கள் இருக்கின்றன. அதிலும் குறிப்பாக இந்த சாதி, மதத்தைச் சேர்ந்த வரன்களுக்கென்றே பிரத்யேகமாக இயங்கும் திருமண சேவை வலைத்தளங்களும் உண்டு. இதில் மணப்பெண்ணின் நிறம், உயரம், உடல்வாகு, எடை போன்றவை குறித்து நிறைய எதிர்பார்ப்புகளோடு மணமகன் வீட்டாரும், அன்பான, புரிந்து நடக்கக்கூடிய உள்நாட்டிலோ வெளிநாட்டிலோ நல்ல வேலையில் இருக்கும் மணமகனை எதிர்பார்த்துப் பெண் வீட்டாரும் திருமண இணையதளங்களில் தங்களுக்கான வரன்களைத் தேடுவதைப் பார்த்திருக்கலாம்.

ஆனால், இதுபோன்ற எண்ணற்ற இணையதளங்கள் எல்லாமே எதிர் பாலின ஈர்ப்பில் இருப்பவர்களின் திருமணத்துக்கு உதவுபவை. தன்பால் உறவாளரான ஆணோ பெண்ணோ இந்த இணையதளங்களை நாடுவதற்கு வழியில்லை. மாற்றுப் பாலினத்தவரும் தங்களின் இணையைத் தேர்ந்தெடுப்பதற்கு உதவும் வகையில் உலக அளவில் ஓர் இணையதளத்தை இரண்டு ஆண்டுகளுக்கு முன்பாகவே உருவாக்கியிருக்கிறார் ஊர்வி ஷா.

இப்படி ஒரு யோசனையோடு இதைத் தொடங்கியிருக்கிறார் என்றால், நிச்சயமாக அவரும் அந்தச் சமூகத்தைச் சேர்ந்தவராகத்தான் இருக்க வேண்டும் என்ற எண்ணம் நம்முடைய பொதுப்புத்தியில் உதிக்கும். ஆனால், ஊர்வி ஷா மாற்றுப் பாலினச் சமூகத்தைச் சேராதவர்!

www.arrangedgaymarriage.com என்னும் இவரின் இணையதளத்தில் 26 தன்பால் உறவாளர்கள் பணிபுரிகின்றனர். இவர்களே இந்த இணைய சேவையை நாடுபவர்களின் விண்ணப்பங்களைத் தீவிரமாக அலசி ஆராய்கிறார்கள். அவர்களின் கல்வி, பணி, வசிப்பிடம், அவர்களின் விருப்பம், பழக்க வழக்கங்கள் போன்றவற்றை அறிவதுடன், பலகட்ட பேச்சுவார்த்தைக்குப் பிறகும் உலகத்தின் பல பகுதிகளிலும் இருக்கும் இவர்களின் ஊழியர்களைக் கொண்டு கண்காணித்தும் சரிபார்க்கிறார்கள்.

இவ்வளவையும் பணம் பெற்றுக்கொண்டுதான் இவர்கள் செய்கிறார்கள். அதுவும் இவர்கள் வடிவமைத்திருக்கும் வரன்களின் பட்டியல் அடங்கிய செயலியை இந்தியர்கள் பயன்படுத்த 15 ஆயிரம் ரூபாய் கட்டணம் என்றால், வெளிநாட்டில் இருப்பவர்கள் பயன்படுத்த 30 ஆயிரம் கட்டணம்.

ஏறக்குறைய 1, 600 பேர் பதிவு செய்திருக்கும் இந்த இணையதளத்தில் 30 சதவீதத்துக்கும் அதிகமானோர் அமெரிக்கா, ஆஸ்திரேலியா, கனடா, ரஷ்யா, இலங்கை போன்ற நாடுகளில்தான் இருக்கின்றனர். அடையாள அட்டை சரிபார்த்தல் உட்பட பிற விவரங்கள் சரிபார்த்தலுக்குப் பின் இரண்டு வரன்களையும் நேரிலோ வீடியோ கான்ஃபரன்சிங் முறையிலோ சந்தித்துப் பேசுவதற்கு ஏற்பாடு செய்கிறார்கள்.

எது எப்படி இருந்தாலும் இந்தியாவில் மாற்றுப் பாலினத்தவருக்குத் திருமணச் சான்றிதழ் கிடைக்காதே என்ற கேள்வியை அவரிடம் வைத்தோம்.

“உண்மைதான். இந்தியாவில் அதற்கு இப்போதைக்கு வழியில்லைதான். ஆனால் என்ன? பரஸ்பரப் புரிதலுடன் தங்களின் இணையை அவர்கள் தேர்வு செய்கின்றனர். சட்டபூர்வமாக நடக்கும் பல திருமணங்களில் காதல் இல்லாமல் போய்விடுவதைப் பார்க்கிறேன். காதலின் உன்னதத்தைக் காகிதங்களால் உறுதி செய்ய முடியுமா?’’ என்று கேட்கிறார் ஊர்வி.

விதை போட்ட கல்லூரி வாழ்க்கை

அப்போது ‘ஆந்த்ரபிரனர்ஷிப் டெவலப் மென்ட் இன்ஸ்டிடியூட் ஆப் இந்தியா’வில் ஊர்வி படித்துக் கொண்டிருந்தார். சமூகத்தில் பிரச்சினைகளை களை யெடுக்க உதவும் வகையில் ஏதாவது ஒரு விஷயத்தில் புராஜெக்ட்டை வடிவமைக்கச் சொன்னார்கள். அவருடன் படித்த மாணவர்கள் பெண்கள் முன்னேற்றம், கல்வி, ஏழ்மையை நீக்குவது, சுற்றுப்புற சுகாதாரம் இப்படிப் பல தலைப்புகளில் புராஜெக்ட்டை வடி வமைக்கத் திட்டமிட்டனர்.

ஊர்விக்கும் இந்த விஷயங்களில் உடன்பாடு இருந்தாலும் சமூகத்தில் இன்னமும் பலரும் பேசத் தயங்கும் விஷயமாக இருக்கும் மாற்றுப் பாலினத்தவரைப் பற்றி புராஜெக்ட் செய்யத் தீர்மானித்தார்.

டெல்லியில் இருக்கும் 30 வயதுக்கு மேற்பட்ட தன்பால் உறவில் ஈர்ப்புள்ள ஆண்களைச் சந்தித்தார். அவர்களின் பாலினத் தேர்வை உணர்ந்த பிறகு வீட்டிலும் சமூகத்திலும் அவர்கள் எதிர் கொண்ட விஷயங்கள் உள்ளிட்ட பல தகவல்களையும் கேட்டுப் பெற்ற போதுதான், அவர்களும் தங்களுக்கான துணையைத் தேர்ந்தெடுப்பதற்கு ஒரு பொதுவெளியை எதிர்பார்த்திருப்பது ஊர்விக்குப் புரிந்தது. எதிர் பால் ஈர்ப்புள்ளவர்களுக்குச் சாதி, மதம் வாரியாக எவ்வளவோ திருமண சேவை அமைப்புகள் இருக்கின்றன.

ஆனால், இவை எதிலும் மாற்றுப் பாலினத்தவர் தங்களின் இணையைத் தேடுவதற்கு வழியுமில்லை. தங்களைப் பற்றிய விவரங்களை அங்கு ஏற்றுக்கொள்ளவும் வழியில்லை என்று அவர்கள் சொன்னது ஊர்வியைப் பாதித்தது. அந்தச் சந்தர்ப்பத்தில்தான் மாற்றுப் பாலினத்தவருக்காக மட்டும் திருமண சேவையை அளிக்கும் ஓர் இணையதளத்தைத் தொடங்க வேண்டும் என்று உறுதி எடுத்துக்கொண்டார் ஊர்வி.

புரிய வைப்பதன் பலம்

அது அவ்வளவு எளிதான விஷயமாக ஊர்விக்கு இருக்கவில்லை. எல்ஜிபிடி மக்களுக்காக நான் பணி செய்யப் போகிறேன் என்று வந்து நின்ற ஊர்வியிடம், “அவர்களெல்லாம் யார்?” என்று அவரின் பெற்றோர் கேட்டிருக்கின்றனர்.

“முதலில் வீட்டில் இருப்பவர்களுக்குப் புரிந்தால்தானே தெருவில் இருப்பவர்களுக்கு நாம் புரியவைக்க முடியும்? அதனால் முதலில் அவர்களுக்கு மாற்றுப் பாலினத்தவர் யார் என்பதையும் அவர்களின் பிரச்சினைகள் என்னென்ன என்பதையும் புரியவைத்தேன். மாற்றுப் பாலினத்தவர் குறித்த திரைப்படங்களையும் ஆவணப் படங்களையும் அவர்களுக்கு அறிமுகப்படுத்தினேன்.

நண்பர்கள் இதைப் பற்றித் தெரிந்ததும் பெரும் அதிர்ச்சி அடைந்தார்கள். நீ படிச்சது என்ன செய்யறது என்ன, ஒரு பேங்க்ல வேலைக்குச் சேருவேன்னு பார்த்தா இப்படிப் பண்றியேம்மா என்று ஆதங்கப்பட்டனர். சிலர் உன்னுடைய லெவலே வேறம்மா புரிஞ்சுக்கோ என்று இதமாகத் திசைதிருப்பப் பார்த்தனர். இன்னும் சிலர், குறைந்தபட்சம் நீ மாற்றுப் பாலினத்தைச் சேர்ந்தவளாக இருந்தாலாவது ஒரு லாஜிக் இருக்கும். அதுவும் இல்லை. அப்புறம் எதுக்கு இவ்வளவு மெனக்கெடறேன்னு புலம்பித் தள்ளினாங்க.

சரிதான் போங்கப்பா... நீங்களும் வேணாம் உங்க ஃபிரெண்ட்ஷிப்பும் வேணாம்னு நான் முடிவெடுக்கவில்லை. பெற்றோர்களுக்குப் புரியவைத்ததுபோல் இவங்களுக்கும் புரியவைப்பது நம்முடைய கடமைன்னு நினைச்சேன். அவர்களுக்கும் மாற்றுப் பாலினத்தவர் குறித்த செய்திகள், திரைப்படங்கள், ஆவணப்படங்கள், சில நேரம் மாற்றுப் பாலினத்தவரைச் சேர்ந்த பிரமுகர்களை வரவைத்து அவர்களுடன் கலந்துரையாடுவது என்று பல முயற்சிகளுக்குப் பின், என்னோட நண்பர்களும் என் பக்கம் இருக்கும் நியாயத்தைப் புரிந்துகொண்டனர்.

என்னுடைய வலைத்தள உருவாக்கத்துக்குத் தங்களோட ஆதரவைத் தெரிவித்தனர். இன்றைக்கு இந்த வலைத்தளத்துக்கு பல தரவுகளையும் அவர்கள் கொடுக்கின்றனர். உலகம் முழுவதும் இருக்கும் மாற்றுப் பாலினத்தவர் குறித்த முகநூல் பதிவுகளை எனக்கு அனுப்புவதில் அவர்களின் பங்களிப்பு அதிகம்” என்கிறார் ஊர்வி.

மிரட்டல்

செகந்திராபாதில் வலைத்தளத்தைத் தொடங்கி, ஓராண்டுக்குப் பின் தன்னுடைய சொந்த ஊருக்குச் சென்றார் ஊர்வி. அவருக்குப் பல மிரட்டல்கள் வந்தன. நிறுத்தாவிட்டால் அவர் முகத்தில் ஆசிட் ஊற்றிவிடுவதாகக்கூடச் சிலர் மிரட்டினார்கள். அதேநேரம், மாற்றுப் பாலினத்தவரின் பெற்றோர் பலரும் அவரிடம் மிகவும் அன்பாகப் பழகினர்.

தங்கள் பிள்ளைகளைப் பற்றிய விவரங்களையும் தங்கள் பிள்ளைக்கு எப்படிப்பட்ட இணையை விரும்புகிறார்கள் என்பதையும் ஆர்வமாகப் பகிர்ந்து கொண்டனர். “இவங்களோட அன்புதான் எத்தகைய இடையூறு ஏற்பட்டாலும் இந்த இணையதளத்தைத் தொடர்ந்து நடத்தணும் என்னும் உத்வேகத்தை எனக்குக் கொடுக்குது.

தினமும் மாற்றுப் பாலினத்தவரைச் சந்திக்கிறேன். அவர்களுக்குள் ஓர் இனிய உறவு பூப்பதற்குக் காரணமாக இருக்கிறேன். அன்பை விதைத்து அன்பை அறுவடை செய்யும் அவர்களின் உறவுப் பாலத்தைக் கட்டமைப்பதில் என்னுடைய பங்கும் சிறிதளவு இருப்பதை எண்ணி மகிழ்கிறேன்” என்றார் ஊர்வி ஷா.
 

vannam-2jpg100 

தென்னிந்திய மாற்றுப் பாலினத்தவர் திருமணம் எப்படி நடக்கும் என்று ஒரு வீடியோ பாடலை உருவாக்கியிருக்கின்றனர் சில நண்பர்கள். மாலை மாற்றிக்கொள்ளுதல், மோதிரம் அணிவித்தல், பெரியவர்களிடம் மணமக்கள் ஆசிபெறுதல், ஊஞ்சலாடுதல் என ரம்மியமாகக் காட்சிகள் விரிகின்றன. கூடவே கல்யாண வீடுகளில் களைகட்டும் ஜி.என்.பி.யின்  ‘சத பாலைய’, தியாகராஜரின் ‘நகுமோமு’ ஆகியவற்றுடன்  ‘லாட்ச்’ போன்ற மேற்கத்திய இசையும் இணைந்து ஒலிக்கிறது. இணையத்தில் நிறையப் பேரை ஈர்த்திருக்கும் அந்தக் காணொலியை இங்கே காணலாம்:

gay marriagge 


(புரிந்துகொள்ள முயல்வோம்)
கட்டுரையாளரைத் தொடர்புகொள்ள: ravikumar.cv@thehindutamil.co.in

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x