Last Updated : 11 Nov, 2018 10:25 AM

 

Published : 11 Nov 2018 10:25 AM
Last Updated : 11 Nov 2018 10:25 AM

வண்ணங்கள் ஏழு 30: தேசிய விருது பெற்ற உரிமைக் குரல்!

திருநங்கை ஷிலோக் முக்கட்டி கவிஞர், சமூகச் செயற்பாட்டாளர், தேசிய விருது பெற்ற ரேடியோ ஜாக்கி. தற்கொலையின் விளிம்புவரை சென்ற இவர், இன்றைக்குத் தன்னுடைய சமூகத்தினருக்கான நம்பிக்கையின் அடையாளமாக மாறியிருக்கிறார்.

கர்நாடக மாநிலத்தின் கூர்க் பகுதியில் நடுத்தரக் குடும்பத்தில் மூத்த மகனாகப் பிறந்தவர் இவர். தாய் செவிலியர் பணியிலும் தந்தை அரசுப் பணியிலும் இருந்தனர். இவருடைய தம்பியின் தற்கொலை குடும்பத்தை ஆறாத துயரத்தில் தள்ளியது.

அகத்திலும் புறத்திலும் அழுத்தம்

“இரண்டுவிதமான அழுத்தங்கள் எனக்கு அப்போது ஏற்பட்டன. தம்பியின் இழப்பில் நிலை தடுமாறி இருந்த என்னுடைய பெற்றோரை மீட்டெடுக்கப் போராட்டம். அதோடு, என்னுடைய உடலில் நான் உணர்ந்த மாற்றங்களால் ஏற்பட்ட தவிப்பும் அதனால் ஏற்பட்ட மனப் போராட்டமும். என்னுடைய பெற்றோருடன் எந்த விஷயத்தைப் பற்றி வேண்டுமானாலும் என்னால் பேச முடியும் என்ற நிலை எனக்கு இருந்தது. நல்ல நண்பர்களைப் போலத்தான் அவர்கள் எனக்கு இருந்தனர்” என்று சொல்லும் ஷிலோக், தன்னுடைய இளமைக்கால நினைவுகளைப் பகிர்ந்துகொண்டார்.

“என்னைப் பெண்ணாக உணர்வதற்கான எல்லா நியாயங்களையும் நான் உணர்ந்தேன். அந்த எண்ணத்தில் எந்தவிதமான குழப்பத்தையோ இயற்கைக்கு மாறானதாகவோ நான் உணரவில்லை. ஆனால், சமூகம் என்னை வேறுவிதமாகப் பார்க்கத் தொடங்கியது” என்று சொல்லும் ஷிலோக், பத்தாவது படித்தபோது நடந்த சம்பவத்தை நினைவுகூர்ந்தார்.

ஏறக்குறைய 80 மாணவர்கள் குழுமியிருந்த வகுப்பு அது. கன்னடப் பாடத்தில் வரும் மனப்பாடப் பாடலை ஷிலோக் பாட ஆரம்பித்தார். இடையில் குறுக்கிட்ட ஆசிரியர், ஷிலோக் பாடுவதைக் கிண்டல் செய்து பாடியபடி, “ஏன் இந்த ஷிலோக், சிக்னலில் புடவை கட்டிட்டுப் பிச்சை எடுக்கிற ஆம்பளைப் பசங்க மாதிரி பேசறான்…” என்று சொன்னார். அவரது அந்தப் பேச்சை ரசித்துப் பல மாணவர்களும் மேசையைத் தட்டி, குரல் எழுப்பி ஆரவாரம் செய்தனர். ஷிலோக்கின் முகத்துக்கு நேராகத் தங்களின் கைகளைக் காட்டி விதவிதமாகக் கிண்டல் செய்தனர்.

சிலரைத் தவிர ஒட்டுமொத்த வகுப்பே கொல்லென்று சிரித்ததில், கொஞ்சம் கொஞ்சமாக அதுவரை ஷிலோக் கட்டியிருந்த நம்பிக்கைக் கோபுரம் தரைமட்டமானது. அன்றைக்கு வகுப்பிலேயே கடிதம் எழுதிவிட்டுத் தற்கொலைக்குத் துணிந்தார். அவருடைய பெற்றோரால் அந்த முயற்சி தோல்வியடைந்தது. பிறகுதான் தனக்குள் இருக்கும் பெண் தன்மை குறித்துத் தன் பெற்றோருடன் பகிர்ந்துகொண்டார்.

“அதைக் கேட்ட பெற்றோர் என்னை செக்ஸாலஜிஸ்டிடம் அழைத்துச் சென்றனர். அந்த மருத்துவரின் அணுகுமுறை எப்படி இருக்குமோ என்று பயந்த எனக்கு, அவரது பேச்சு எனக்கு மட்டுமல்ல என் பெற்றோருக்கு மாற்றுப் பாலினத்தவர் குறித்து இருந்த தயக்கத்தையும் தெளியவைத்தது” என்ற ஷிலோக், அதன்பின் படிப்பதற்காக பெங்களூருக்குச் சென்றார்.

வாரியணைத்த நகரம்

உளவியல் படிப்பில் அவருக்கு அதிக ஆர்வம் இருந்தது. அதிலும் அவர் சார்ந்த மாற்றுப் பாலினத்தவர் குறித்து மேலும் விரிவாகத் தெரிந்து கொள்வதற்கும் இந்தப் படிப்பு உதவும் என்று நம்பினார். அதனால் 2015-ல் பெங்களூரு ஜெயின் பல்கலைக்கழகத்தில் சேர்ந்து உளவியல் படித்தார். பள்ளியில் அவருக்கு நேர்ந்த பாகுபாடுகள் எதுவும் கல்லூரி வாழ்க்கையில் ஏற்படவில்லை.

ஆசிரியர்களும் மாணவர்களும் அவரை வித்தியாசமாக நடத்தவில்லை. இந்த அன்பான புரிதல் அவருக்குள் இருந்த கவிமுகத்தை வெளிப்படுத்துவதற்குப் பெரிதும் துணைபுரிந்தது. தாய்மொழியான கன்னடத்தில் தொடங்கிய புலமை ஆங்கிலத்திலும் பல பாடல்களை எழுதவைத்தது. கல்லூரி அளவிலான போட்டிகளில் அவரைப் பங்கேற்க வைத்துப் பரிசு மழையில் நனையவைத்தது.

திருப்புமுனை தந்த பயிற்சி

கோடைக்கால மாணவர் பயிற்சிக்காக பெங்களூரு 90.4 பண்பலையில் சேர்ந்திருக்கிறார் ஷிலோக். பிங்கி சந்திரன் என்பவரின் முன்முயற்சியில் தொடங்கப்பட்ட இந்தப் பண்பலை, விளிம்பு நிலையில் வாழும் மக்களின் துயரம் தோய்ந்த கதைகளைப் பொதுவெளியில் பேசியது. அவர்களின் தன்னம்பிக்கையைப் பல விதங்களிலும் உயர்த்துவதிலும் அவர்கள் பொருளாதாரரீதியில் சொந்தக் கால்களில் நிற்பதற்கு வேண்டிய உதவிகளையும் செய்துவந்தது.

மாற்றுப் பாலினத்தவரின் பிரச்சினைகள், விவசாயிகளின் பிரச்சினைகள், காடுகளை அழிப்பதால் சமூகத்தில் ஏற்படும் விளைவுகள், காகிதங்கள், பிளாஸ்டிக் கழிவுகளைச் சேகரித்து அதில் வரும் வருமானத்தில் வாழ்க்கையை நடத்துவோர் இப்படிப் பலதரப்பட்ட மனிதர்களையும் அறிமுகப்படுத்தும் சேவையை அந்தப் பண்பலை செய்துவந்தது.

அதில் பயிற்சிக்காக சேர்ந்த ஷிலோக்கின் துடிப்பான திறமையை உணர்ந்த பிங்கி சந்திரன், அந்தப் பண்பலையிலேயே அவருக்குப் பணியையும் வழங்கினார். இதன் மூலம் அதில் பணிபுரியும் ஒரே மாற்றுப் பாலின ரேடியோ ஜாக்கியாக ஷிலோக்கின் புகழ் பரவத் தொடங்கியது.

நிகழ்ச்சி கொடுத்த விருது

ஷிலோக் ‘யாரிவரு’ என்னும் பண்பலை நிகழ்ச்சியின் மூலமாக மாற்றுப் பாலினத்தவர் பலரின் பிரச்சினைகளைப் பொதுச் சமூகத்தில் இருப்பவர்களும் புரிந்துகொள்ளும் வகையில் அந்த நிகழ்ச்சியை நடத்தினார். அதன்பின்

‘கலர்ஃபுல் கமனபில்லு’ எனும் நிகழ்ச்சியையும் தொகுத்து வழங்கினார். பல துறையைச் சேர்ந்த பிரபலங்களுடனும் பேசி அவர்களிடமிருந்து சுவையான தகவல்களை நேயர்களுடன் பகிர்ந்துகொள்ளும் இந்த நிகழ்ச்சி அவரை மாநிலம் முழுவதும் பிரபலப்படுத்தியது. இந்த நிகழ்ச்சியின் மூலம் சிறந்த ரேடியோ ஜாக்கிக்கான தேசிய விருதைத் தகவல் மற்றும் ஒளிபரப்புத் துறை அமைச்சகத்திடமிருந்து பெற்ற திருநங்கை என்னும் பெருமைக்கும் ஷிலோக் உரியவராகியிருக்கிறார்.

 

ஜனனமும் மரணமும்

‘புனரபி மரணம்… புனரபி ஜனனம்’ எனும் சம்ஸ்கிருத வார்த்தைகள் எம்.எஸ். பாடும் ஒரு பாட்டில் வரும். பிறப்பும் இறப்பும் ஒரு தொடர் சங்கிலிபோல் சுற்றிக்கொண்டே இருப்பது என்பதுதான் இதன் அர்த்தம். நம் உடலுக்குள்ளும் தினம் தினம் புதிய செல்கள் தோன்றுகின்றன. பழைய செல்கள் இறக்கின்றன. உடல்ரீதியிலும் இப்படியான மாற்றங்கள் ஏற்படும் வாய்ப்பு இருப்பதையும் அந்த மாற்றத்தையும் இயல்பாக எடுத்துக்கொண்டு தங்களுக்கு இடையேயான நட்பையும் அன்பையும் தொடரும் இரண்டு ஜீவன்களைப் பற்றியும் ‘குவாத்’ எனும் பத்து நிமிடக் குறும்படம் மிகவும் ரசனையோடு பேசுகிறது. ஒரே உடலில் கபீரின் மரணமும் க்ரியாவின் ஜனனமும் எப்படி நிகழ்கின்றன என்பதை இந்தக் காணொலியில் காணலாம்.

வண்ணம் 


(புரிந்துகொள்ள முயல்வோம்)
கட்டுரையாளரைத் தொடர்புகொள்ள: ravikumar.cv@thehindutamil.co.in

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x