Last Updated : 25 Nov, 2018 10:14 AM

 

Published : 25 Nov 2018 10:14 AM
Last Updated : 25 Nov 2018 10:14 AM

வானவில் பெண்கள்: ஆட்டோ தீபா

சென்னை, பெங்களூரு, மும்பை போன்ற பெருநகரங்களில் ஆட்டோ ஓட்டும் பெண்களைப் பார்ப்பது இயல்பு. சிறு நகரங்களிலும் உள்ளடங்கிய மாவட்டங்களிலும் அரிதாகவே பெண்கள் ஆட்டோ ஓட்டுகின்றனர். எண்ணிக்கையில் குறைந்த அளவு இருந்தாலும் தயக்கத்தால் சில வேலைகளைத் தவிர்க்கும் பெண்க ளுக்கு இவர்களைப் போன்ற பெண்கள், முன்னுதாரணமாகவும் திகழ்கிறார்கள். தீபா அவர்களில் ஒருவர்!

விருதுநகர் அருகே உள்ள பாண்டியன் நகரைச் சேர்ந்த தீபா, தன் கணவருக்கு உதவியாக ஸ்டீரிங் பிடிக்கத் தொடங்கினார். கணவர் மாரிக்கனியும் ஆட்டோ ஓட்டுநர் என்பதால் தீபா எளிதாக ஆட்டோ ஓட்டப் பழகிவிட்டார். இவர் வசிக்கும் பகுதியில் பெண்கள் தனியாகச் செல்ல வேண்டும் என்றால் தீபாவின் ஆட்டோவைத்தான் அழைக்கிறார்கள். கல்லூரி மாணவிகளும் இவரது ஆட்டோவையே நாடுகிறார்கள்.

நிறைவே மகிழ்ச்சி

தனியாகப் பயணிக்கும் பெண்களுக்காக, ‘மகளிர் மட்டும்’ ஆட்டோ ஓட்டுவதில் தீபாவுக்கு அளவிட முடியாத நிறைவு. அது அவரது வார்த்தைகளிலும் வெளிப்படுகிறது. “என் கணவர் அஞ்சு வருஷமா ஆட்டோ ஓட்டிக்கிட்டு இருக்கார். சில நேரம் பிரசவத்துக்காகவும் உடல்நிலை சரியில்லாத பெண்களையும் மருத்துவமனைக்கு அழைத்துச்செல்லும்போதும் அவங்களுக்கு உதவியா யாரும் உடன் வரலைன்னா என்னை உதவிக்குக் கூட்டிட்டுப் போவார். அவங்களைப் பாதுகாப்பா மருத்துவமனையில் சேர்த்துவிட்டு வருவோம். சில நேரம் ஆட்டோவுலேயே குழந்தை பிறந்த சம்பவமும் நடந்திருக்கு” என்று புன்னகைக்கிறார்.

இப்படி மற்ற பெண்களுக்கு உதவியாக ஆட்டோவில் பயணித்தபோது, ஆண்கள் ஓட்டும் ஆட்டோவில் செல்ல சில பெண்கள் கூச்சப்படுவதை தீபா தெரிந்துகொண்டார். “எனக்கும் ரெண்டு பெண் குழந்தைகள் இருக்காங்க. சில நேரம் அவங்களைத் தனியா வெளியில் அனுப்ப பயமா இருக்கும். இந்த மாதிரிதானே மற்ற பெற்றோருக்கும் இருக்கும்? அதனால பெண்களுக்காக ஆட்டோ ஓட்டுறதுன்னு முடிவுசெய்தேன்.

அதோடு எனக்கும் என் கணவரைப் போல ஆட்டோ ஓட்ட ஆசை ஏற்பட்டது. அவர்கிட்ட என் விருப்பதைச் சொன்னபோது மகிழ்ச்சியோடு சம்மதிச்சு ஆட்டோ ஓட்டவும் கற்றுக்கொடுத்தார்” என்று சொல்லும் தீபா, தனியார் வங்கியில் லோன் வாங்கி தன் கணவர் ஆட்டோ வாங்கிக் கொடுத்ததைப் பெருமிதத்துடன் குறிப்பிடுகிறார். ‘மகளிர் மட்டும்’ ஆட்டோதான் என்றாலும் தவிர்க்க முடியாத நேரத்தில் குடும்பத்துடன் வரும் ஆண்களையும் ஏற்றிக்கொள்கிறார். 

“என் ஆட்டோவில் சவாரிக்கு வரும் பெண்கள் பாதுகாப்பாகவும் சுதந்திரமாகவும் உணர்வதா சொல்லியிருக்காங்க. வருமானத்துக்காக ஆட்டோ ஓட்டினாலும், இதில் ஒரு மன நிறைவு கிடைக்குது” என்று சொல்லிவிட்டுச் சவாரிக்காக விரைகிறார் தீபா.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x