Published : 18 Nov 2018 10:55 AM
Last Updated : 18 Nov 2018 10:55 AM
தொடரும் சிறுமிகள் மீதான வன்முறை
தருமபுரிக்கு அருகிலிருக்கும் சிட்லிங்கி மலைக் கிராமத்தைச் சேர்ந்த ராணிக்கு (பெயர் மாற்றப்பட்டுள்ளது) 16 வயது. அவருடைய பெற்றோர் கூலித் தொழிலாளர்கள். பாப்பிரெட்டிப்பட்டியில் தங்கி அவர் 12-ம் வகுப்பு படித்துக்கொண்டிருந்தார். தீபாவளி விடுமுறைக்காக சிட்லிங்கிக்கு வந்தார். மதிய வேளையில் இயற்கை அழைப்புக்காக வீட்டுக்கு அருகில் உள்ள வனப் பகுதிக்குச் சென்றார். அங்கு அவரைப் பின்தொடர்ந்த சதீஷ், ரமேஷ் இருவரும் அவரைக் கடத்திச் சென்று பாலியல் வல்லுறவுக்கு ஆளாக்கினர்.
உடல்நிலை மிகவும் மோசமடைந்த நிலையில் மிகத் தாமதமாகவே மருத்துவமனையில் ராணி சேர்க்கப்பட்டார். தீவிர சிகிச்சையளித்தும் பலனின்றி இறந்தார். பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்பட்ட ராணிக்கு உடனடியாக சிகிச்சை அளிக்கப்பட்டிருந்தால் அவரைக் காப்பாற்றியிருக்க முடியும். அதற்கான துரித நடவடிக்கையை மேற்கொள்ள காவல்துறை தவறிவிட்டது எனக் கூறப்படுகிறது. கடமையைச் செய்யத் தவறிய அதிகாரிகளின் அலட்சியம் பலரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கி இருக்கிறது.
ஓய்வெடுங்கள் மருத்துவரே
டி.எஸ். கனகா, ஆசியாவின் முதல் நரம்பியல் அறுவைசிகிச்சை பெண் மருத்துவர். நரம்பியல் மருத்துவத்தில் மிகப் பெரும் ஆளுமையான அவருக்கு ஆழ்மூளைத் தூண்டலிலும் பக்கவாத சிகிச்சையிலும் மிகுந்த ஈடுபாடு உண்டு. ஸ்டீரியோடாக்டிக் அறுவை சிகிச்சையின் முன்னோடி. சென்னை மருத்துவர் கல்லூரியின் நரம்பியல் பிரிவு அவருடைய முனைப்புக்கும் வெற்றிகரமான முன் முயற்சிகளுக்கும் சான்றாக உள்ளது. கனகாவின் தாக்கத்தாலும் ஊக்கத்தாலும் 80-க்கும் மேற்பட்ட பெண் நரம்பியல் மருத்துவர்கள் உருவானார்கள்.
இந்திய - சீனப் போரின்போது ராணுவத்திலும் ஈராண்டுகள் பணியாற்றினார். நரம்பியல் துறை பேராசிரியராக, சென்னை மருத்துவக் கல்லூரியில் நீண்டகாலம் பணியாற்றிய கனகா 1990-ல் ஓய்வுபெற்றார். பணி ஓய்வுக்குப் பிறகு முழுநேரமும் ஏழைகளுக்கு உதவினார். அதற்காகத் தனது ஓய்வூதிய நிதியைக்கொண்டு ‘ஸ்ரீ சந்தான கிருஷ்ணா பத்மாவதி ஹெல்த்கேர் & ரிசர்ச் ஃபவுன்டேஷன்' எனும் அமைப்பை நிறுவினார். சமீபத்தில் உடல்நலம் குன்றிய கனகா, சென்னையில் கடந்த புதன் அன்று 86-வது வயதில் காலமானார்.
நைட்டி அணியத் தடை?
ஆந்திரப் பிரதேச மாநிலம் மேற்கு கோதாவரி மாவட்டத்தில் தோகலாபள்ளி என்ற கிராமம் உள்ளது. இந்தக் கிராமத்தில் ‘மாலை ஆறு மணி முதல் காலை எட்டு மணிவரை மட்டுமே பெண்கள் நைட்டி அணிய வேண்டும். நைட்டி அணிந்தபின் பெண்கள் வீட்டைவிட்டு வெளியே வரக் கூடாது’ என்று கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. இந்தக் கட்டுப்பாட்டை மீறும் பெண்ணுக்கு ரூ.2,000 வரை அபராதம் விதிக்கப்படும் என்றும் இந்தத் ‘தடை’யை மீறும் பெண்களைப் பற்றிச் சொன்னால் 1000 ரூபாய் சன்மானம் வழங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டது.
அந்த ஊரில் உள்ள மகளிர் சுயஉதவிக் குழுவினர்தான் இந்தக் கட்டுப்பாட்டை விதித்துள்ளனர். “இது தொடர்பாக அந்தக் கிராமத்தைச் சேர்ந்த பெண்கள் யாரும் புகார் அளிக்கவில்லை. இருப்பினும் பெண்களுக்கு இவ்வாறு தடை விதிப்பது சட்டவிரோதமானது” என்று அங்கே சென்றுவந்த துணைக் காவல் ஆய்வாளர் விஜய் குமார் தெரிவித்தார்.
போர்க் குற்றவாளிகளே வருக!
முதல் உலகப் போர் 1918 நவம்பர் 11 அன்று முடிவடைந்தது. இதன் நூறாவது ஆண்டு விழா உலகம் முழுவதும் நடைபெற்றுவருகிறது. இதன் தொடர்ச்சியாக பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் முதல் உலகப் போர் நூற்றாண்டு நிறைவு விழா அனுசரிக்கப்படுகிறது. இந்த விழாவில், அமெரிக்க அதிபர் டிரம்ப், ரஷ்ய அதிபர் விளாதிமிர் புடின் உள்ளிட்ட உலகின் முக்கியத் தலைவர்கள் கலந்துகொண்டனர். அதிபர் டிரம்ப் இந்த விழாவுக்குச் சென்றபோது அவரது காரை மறிக்கும் வகையில் பெண் ஒருவர் மேலாடை இல்லாமல் ஓடிவந்தார்.
அவரைத் தொடர்ந்து அவருக்குப் பின் இன்னொரு பெண்ணும் மேலாடை இல்லாமல் ஓடி வந்தார். இவர்கள் இருவரின் உடலிலும் welcome war criminals என்று எழுதப்பட்டு இருந்தது. அந்தப் பெண்கள் இருவரும் உடனடியாகக் கைதுசெய்யப்பட்டனர். உலகம் முழுவதும் அந்தப் பெண்களுக்கு ஆதரவு குவிந்துவருகிறது.
எகிப்து திரையுலகின் அரசி
எகிப்திய மௌனப் படங்களில் ஓரமாக நிற்கும் துணை நடிகையாக 1949-ல் அறிமுகமானார் ஹிண்ட் ரஸ்தம் (Hind Rostom). வசீகரிக்கும் அழகாலும் உணர்ச்சிமிக்க நடிப்பாலும் நளினமான நடனத்தாலும் உறுதியான உடல்மொழியாலும் எகிப்தை மட்டுமல்லாமல் உலகையே தன்மீது மையல் கொள்ளவைப்பார் என அப்போது யாரும் அறிந்திருக்கவில்லை. இவரது நடிப்பில் 1955-ல் ஹஸன் அல் இமான் இயக்கத்தில் வெளியான ‘இரவின் பெண்’ எனும் திரைப்படம் அதை உலகுக்கு உணர்த்தியது.
இவர் 1929-ல் பிறந்தார். 80 திரைப்படங்களுக்கு மேல் நடித்துள்ளார். அழகின் மொத்த உருவமாக இருந்தபோதும், வெறும் அழகுப் பதுமையாக மட்டுமே திரையில் உலவவில்லை. மனத்தில் பட்டதைச் சட்டெனப் பேசும் துணிவு நிறைந்த தனித்துவமான பெண்ணாக மட்டுமே நடித்தார். தெருமுனை பழ வியாபாரியாக அவர் நடித்த ‘கெய்ரோ ஸ்டேஷன்’ எனும் திரைப்படத்தை அவரது நடிப்பின் உச்சம் எனலாம். உமர் ஷெரிஃப் போன்ற நடிகர்களுடன் நடிக்கும்போதும் தனது நடிப்பு திறனால் தனித்து ஜொலித்தார்.
எண்ணற்ற விருதுகள் அவரைத் தேடிவந்தன. அவற்றில் சிலவற்றை நிராகரித்தும் உள்ளார். திரைத் துறையில் உச்சத்தில் இருந்தபோது 1979-ல் ஓய்வுபெறுவதாக அறிவித்தார். அவரை மீண்டும் நடிக்கவைக்க முயன்ற பலரது முயற்சி வெற்றிபெறவில்லை. மாரடைப்பால் 79 வயதில் மறைந்த அவரது 87-வது பிறந்தநாளையொட்டி கடந்த செவ்வாய் அன்று சிறப்பு டூடுலை கூகுள் வெளியிட்டது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT