Last Updated : 03 Nov, 2018 06:18 PM

 

Published : 03 Nov 2018 06:18 PM
Last Updated : 03 Nov 2018 06:18 PM

வண்ணங்கள் ஏழு 29: திருநங்கையரின் இன்னொரு உலகம்

“பார்வதி உம் பையன் வாசல் தெளிச்சு கோலம் போடுறது எல்லாம் சரியில்ல. இது ஆம்பள புள்ளக்கி அழகுல்ல” என்று சொன்னபோதெல்லாம்கூட பார்வதி நம்பவில்லை.

ஆனால், இன்று பெண் குரலில் பாடுவதுடன் புடவையைச் சுற்றிக்கொண்டு கண்ணாடி முன்னால் நின்று தன் அழகைப் பார்த்து ரசித்துக்கொண்டிருந்தான் ரமேஷ்.

பார்வதி ஒரு நிமிடம் அப்படியே உட்கார்ந்துவிட்டாள். தன் கண் எதிரிலேயே தன் மகன் புடவையைக் கட்டிக்கொண்டு.. சே..சே…

திருநங்கை ஒருவர் எழுதிய முதல் தமிழ் நாவலான ‘மூன்றாம் பாலின் முகம்’ நாவலில் வரும் சில வரிகள் இவை. இந்த நாவலுக்காக பெரியார் விருதைப் பெற்ற அந்தத் திருநங்கை பிரியா பாபு.

எழுத்தாளர், நடிகை, சமூகச் செயற்பாட்டாளர், மாற்றுப் பாலினத்தவர் குறித்த விழிப்புணர்வை அளித்து வருபவர் எனப் பல்வேறு அடையாளங்கள் பிரியா பாபுவுக்கு உண்டு. பலதரப்பட்ட திருநங்கைகளின் உண்மைக் கதைகளைக் கொண்ட தொகுப்பு, அரவாணிகளின் சமூக வரைவியல், பாலினச் சிறுபான்மையினர் காதல், திருநங்கையர் சமூக வரலாறு, திருநங்கைகள் குறித்த வாழ்க்கைக் கதைகள் உள்ளிட்ட ஏழு புத்தகங்களை இவர் எழுதியிருக்கிறார். தற்போது மதுரையில் திருநங்கையர் ஆவண மையத்தை நடத்திவருகிறார்.

பல துறைகளிலும் சாதித்துக்கொண்டிருக்கும் திருநங்கையர் குறித்த பதிவுகள், அவர்களைப் பற்றிய செய்திகள், அவர்களின் படைப்புகள், இசைப் பாடல்கள் போன்றவற்றை tranzmedia எனும் யூடியூப் பக்கத்தில் பிரியா பாபு பதிவேற்றியும்வருகிறார்.

அண்மையில் மதுரையில் இரண்டு நாள் நிகழ்வாகத் திருநங்கையர் திரைப்பட) விருது வழங்கும் விழாவை நடத்தியிருக்கிறார். மதுரை அமெரிக்கன் கல்லூரியில் இந்தியாவில் முதன்முறையாகத் திருநங்கையர் திரைப்பட விருது வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. இந்த நிகழ்வை மதுரையிலிருந்து செயல்படும் திருநங்கையர் ஆவண மையமும் மதுரை அமெரிக்கன் கல்லூரியின் ஊடகத் துறையும் ஏற்பாடு செய்திருந்தன.

மூன்று மொழிகளைச் சேர்ந்த 39 படங்கள் இதில் பங்கெடுத்தன. இரண்டு மாதங்களுக்கு முன்பே www.transfilmawrds.com என்ற இணையதளத்தை அறிமுகப்படுத்தி அதன் வழியாக இந்தத் திருநங்கையர் குறும்படங்கள், ஆவணப்படங்கள் குறித்த அறிவிப்பை வெளியிட்டனர்.

போட்டிக்கான விண்ணப்பங்களைப் பெறுதல், படங்களை இணையதளம் வழியாகவே அனுப்பச் செய்தல், வெவ்வேறு ஊர்களில் நடுவர்கள் படங்களைப் பார்த்துத் தேர்வு செய்வதற்கான ஏற்பாடுகளை மேற்கொள்ளல் என அனைத்தும் மிக நேர்த்தியாகச் செய்யப்பட்டிருந்தன. இதன் நடுவர்களாக எழுத்தாளர் பா.ஜீவசுந்தரி, ‘மை சொசைட்டி’ அமைப்பின் நிறுவனர் சுபிக் ஷா, அமெரிக்கன் கல்லூரியின் ஆங்கிலத் துறைத் தலைவர் இளங்கோ ஆகியோர் இருந்தனர்.

இந்த நிகழ்வை ஒருங்கிணைத்த திருநங்கையர் ஆவண மையத்தின் தலைவர் பிரியா பாபு இந்த நிகழ்வைக் குறித்து பகிர்ந்துகொண்டார்.

மையம் திருநங்கையர் சொத்து

“இந்தியாவில் திருநங்கையருக்கு என இருக்கும் தரவுகள் மையம்தான் இந்தத் திருநங்கையர் ஆவண மையம். மதுரையை மையமாகக் கொண்டுள்ள இந்த மையம் திருநங்கையர் குறித்த நூல்கள், குறும்படங்கள், ஆவணப்படங்கள், ஆய்வுக் கட்டுரைகள், செய்தித்தாள் தரவுகள், அரசு ஆணைகள் எனப் பல தரவுகளை உள்ளடக்கிய ஒரு நூலகத்தைக் கொண்டுள்ளது.

திருநங்கையர் குறித்து அறிய விரும்பும் மாணவர்கள், சமூகவியல் பாடப்பிரிவுத் துறை மாணவர்கள், ஆய்வாளர்கள், திரைத் துறையினர் எனப் பலரும் தங்களுக்குத் தேவைப்படும் திருநங்கையர் குறித்த தரவுகளுக்காக இந்த மையத்தை அணுகுகின்றனர். தமிழகம் முழுவதும் பல பள்ளி, கல்லூரிகளில் தொடர்ந்து திருநங்கையர் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறோம்.

நூறாண்டு சினிமாவில்

அதன் ஒரு பகுதியாகத்தான் இந்த ஆண்டு ‘திருநங்கையர் திரைப்பட விருது 2018’ விழாவைத் தொடங்கினோம். காரணம், நூறாண்டு கண்ட இந்தியத் திரைப்பட வரலாற்றில், அதிலும் தமிழ்த் திரைப்படங்களில்   திருநங்கையருக்கான பங்கு மிக மிகச் சொற்பமே. பெரும்பாலும் நகைச்சுவை அல்லது ஆபாசம் என்ற அளவிலேயே திருநங்கையரின் பாத்திரப் படைப்பு இருந்தது. இதிலிருந்து முற்றிலும்  மாறுபட்டது அசலான திருநங்கையர் வாழ்க்கை.

ஆகவே, திருநங்கையரின் அசலான வாழ்க்கை, அவர்களைக் குறித்த கற்பிதங்கள், அவர்களது ஏக்கம், காதல், உறவு நிலை என அனைத்தையும் பேசக்கூடிய குறும்படங்கள், ஆவணப்படங்களுக்கான போட்டியை நடத்துவதன்மூலம் திருநங்கையரின் உலகம் பொதுச் சமூகத்துக்குத் தெரியவரும் என நினைத்தோம். அதன் விளைவுதான் இந்த விருது விழா.

இந்த நிகழ்வில் பல திருநங்கைகள் நடித்த படங்கள் இடம்பெற்றன. குறிப்பாக, தற்போது திரைத் துறையில் ஒப்பனைக் கலைஞராக இருக்கும் ஜீவா சுப்பிரமணியத்தின் மூன்று படங்கள் போட்டிக்கு வந்திருந்தன. மேலும், திருநங்கை பாரதி கண்ணம்மா இயக்கிய ‘கௌரவக் கொலை’, கிரேஸ் பானு தயாரித்த ‘பிறவி’ ஆகியவையும் போட்டிக்கு வந்திருந்தன.

நிகழ்வில் சிறந்த படத்துக்கான விருது திருநங்கை ரெஜினா நடித்த ‘நேர் நேர் தேமா’ படத்துக்குக் கிடைத்தது. சிறந்த நடிகை 2018-க்கான விருதைத் தட்டிச் சென்றிருப்பவர் (திருத்தாய் அவளே) திருநங்கை ஜீவா சுப்பிரமணியம்.

மேலும் சிறந்த கதை, இயக்கம், ஒளிப்பதிவு, துணை நடிப்பு, சிறந்த நடிகர் எனப் பல பிரிவுகளில் விருதுகள் வழங்கப்பட்டன. திருநங்கையர் ஊடகத் துறையில் தனக்கான இடத்தை நோக்கி நகர இவ்விழா முதல் பாதை எனலாம்” என்று சொல்கிறார் பிரியா பாபு.

சங்க காலம், சங்கம் மருவிய காலம், சேர, சோழ, பாண்டிய, நாயக்க மன்னர்கள் காலம்வரை திருநங்கையரைப் பற்றிய வரலாற்றுச் சித்திரத்தை வெகுஜனத் திரைப்படமாக்கும் முயற்சியில் இவர் ஈடுபட்டிருக்கிறார். இதற்காகப் பல தரவுகள் தேவைப்படுவதால் இது தொடர்பாக உதவும் உள்ளங்களுடன் கைகோக்கத் தயாராக இருப்பதாக அவர் சொல்கிறார்.

தகவல் தானம் அளிக்க விருப்பமுள்ளவர்கள் இந்த எண்ணில் அவரைத் தொடர்புகொள்ளலாம்: 96005 55097

 

ஒரு நாள் வலி

நண்பர்களுக்காக ஒரு திருநங்கையைத் தவறாகப் பேசிவிடுகிறான் நாயகன். கோபமான அந்தத் திருநங்கை, ஒரே ஒரு நாள் திருநங்கையாக இந்தச் சமூகத்தில் இருந்து பார்… அப்போதுதான் எங்களுடைய வேதனை என்னவென்று உனக்குப் புரியும் என்று சவால் விடுகிறார். நாயகனும் அந்தச் சவாலை ஏற்றுக்கொண்டு திருநங்கை வேடத்தில் ஒரு நாள் முழுவதும் அவருடனேயே பயணிக்கிறான். அந்த ஒரு நாள் பயணத்தில் என்ன நடக்கிறது என்பதே ‘நேர் நேர் தேமா’ குறும்படத்தின் கதை.

 

நேர் நேர் தேமா 


(புரிந்துகொள்ள முயல்வோம்)
கட்டுரையாளரைத் தொடர்புகொள்ள: ravikumar.cv@thehindutamil.co.in

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x