Last Updated : 28 Oct, 2018 11:37 AM

 

Published : 28 Oct 2018 11:37 AM
Last Updated : 28 Oct 2018 11:37 AM

அனுபவம்: செய்தியாளர் சந்திப்பில் வெளிப்பட்ட பெண் வெறுப்பு

எந்த ஒரு மாற்றமும் தனிமனிதரிடமிருந்து தொடங்க வேண்டும் என்று சொல்வது தேய்வழக்கைப் போல் இருந்தாலும் அதுதான் உண்மை. கடந்த வாரம் தென்னிந்தியப் பெண்களின் திரைப்படச் சங்கம் (South Indian Women’s Film Association) ஏற்பாடு செய்திருந்த செய்தியாளர் சந்திப்பில் நானும் என்னைப் போன்ற பெண் ஊடகவியலாளர்கள் சிலரும் இதைத் தெளிவாக உணர்ந்துகொண்டோம்.

பாடகி சின்மயி ஸ்ரீப்ரதா, கவிஞரும் இயக்குநருமான லீனா மணிமேகலை, நடிகையும் இயக்குநருமான லட்சுமி ராமகிருஷ்ணன், தொலைக்காட்சி நிகழ்ச்சித் தொகுப்பாளர் ஸ்ரீரஞ்சனி உள்ளிட்ட அந்தச் சங்கத்தின் உறுப்பினர்கள் அந்த செய்தியாளர் சந்திப்புக்கு ஏற்பாடு செய்திருந்தனர். 

கடந்த ஆண்டுகளில் தாங்கள் எதிர்கொண்ட பாலியல் சீண்டல்,  தகாத செயல்கள் போன்றவற்றை வெளிப்படையாகப் பகிர்ந்துகொண்ட திரைத் துறைப் பெண்களுக்கு ஆதரவு தெரிவிப்பதே அந்தச் சந்திப்பின் நோக்கம்.

இது குறித்த செய்தியாளர் சந்திப்பு நடக்கவிருக்கிறது என்பதே எனக்கு நம்பிக்கை அளித்தது.

‘நானும்கூட’ (#MeToo) இயக்கம் பற்றிய விவாதம், பாலியல் சீண்டல் பற்றிய விழிப்புணர்வை அதிகரித்துத் திரைப்படத் துறைக்குள் அதைப் பற்றிய உரையாடலை விரிவுபடுத்தும் என்றும் நான் நினைத்தேன்.

ஆனால், அந்தச் செய்தியாளர் சந்திப்பின் முதல் 20 நிமிடங்களிலேயே நான் அமர்ந்திருந்த இருக்கையில் நெளியத் தொடங்கிவிட்டேன். அது எனக்கு மட்டும் ஏற்படவில்லை. எனக்கு அருகில் அமர்ந்திருந்த இரண்டு பெண் பத்திரிகையாளர்கள் அடைந்த வேதனை அதிர்ச்சியாகவும் அந்த அதிர்ச்சி கோபமாகவும் மாறி அவர்களது முகங்களில் வெளிப்பட்டது.

“நாங்கள் முன்பே புகார் அளிக்கும் அளவுக்குச் சாதகமான சூழல் நிலவவில்லை. பாதிக்கப்பட்ட பெண்கள் புகார் அளிப்பதற்குத் தோதான சூழலை உருவாக்கவே நாங்கள் முயல்கிறோம். தாங்கள் எதிர்கொண்ட பாலியல் சீண்டலைப் பற்றிப் பேச விரும்பும் பெண்களுக்கு உதவுவதே எங்கள் நோக்கம்” என்று தொடக்கத்திலேயே லட்சுமி ராமகிருஷ்ணன் சொல்லிவிட்டார். ஆனால், ஊடகவியலாளர்கள்-பெரும்பாலும் ஆண்கள்- தங்கள் கேள்விக் கணைகளை ஏவியபோது அதை முற்றிலும் மறந்து விட்டிருந்தார்கள்.

“சம்பவம் எங்கே, எப்போது நடந்தது? உங்கள் மீது என்னவிதமான வன்செயல் நிகழ்த்தப்பட்டது?” என்று ஒரு செய்தியாளர் லீனாவிடம் கேட்டார். தனக்கு நேர்ந்த அனுபவத்தை மீண்டும் நினைவுகூர்வதில் உள்ள சங்கடத்தை லீனா விளக்கிய பின்னரும் ‘முடியாது’ என்ற வார்த்தையை விடையாக ஏற்றுக்கொள்ள எந்தச் செய்தியாளரும் தயாராக இல்லை.

லீனா ஏற்கெனவே தனது ஃபேஸ்புக் பதிவிலும் பிரத்யேக செய்தியாளர் சந்திப்பிலும் தனக்கு நேர்ந்தவற்றை விளக்கிவிட்டார் என்றாலும் கூடுதல் விவரங்கள் வேண்டும் என்று அவரிடம் வலியுறுத்திக் கேட்டனர்.

லட்சுமி ராமகிருஷ்ணன் இடைமறித்து, “கண்ணியமான கேள்விகளை மட்டும் கேளுங்கள்” என்று வேண்டிக்கொண்டபோது உரக்க எழுப்பப்பட்ட ஆட்சேபனைகளின் இரைச்சலில், அவரது குரல் அடங்கிப்போனது. அந்தப் பெண்கள் சுமத்திய குற்றசாட்டுகளுக்கு ஆதாரம் கொடுக்க வேண்டும் என்றும் தங்களுக்கு நேர்ந்த அனுபவத்தை விளக்க வேண்டும் என்றும் ஊடகவியலாளர்கள் தொடர்ந்து வற்புறுத்தினர்.

அவர்கள் ஏன் நீதிமன்றத்திலோ காவல்துறையிடமோ அவர்களது துறைக்குள்ளேயே இயங்கும் விசாரணைக் குழுக்களிடமோ புகார் அளிக்க முயலவில்லை என்றும் திரும்பத் திரும்ப கேட்டுக்கொண்டே இருந்தனர். இத்தனை ஆண்டுகளாகத் துறைக்குள் இயங்கும் குழுக்கள் அவர்களுக்கு நியாயம் பெற்றுத் தரத் தவறிவிட்டதை அந்தப் பெண்கள் விளக்க முயன்றதை யாரும் காதில் போட்டுக்கொள்ளவில்லை.

 “எந்த ஆண் மீது வேண்டுமானாலும் நீங்கள் இது போன்ற குற்றச்சாட்டுகளை வீசுவீர்கள்தானே?” என்று சில ஆண் செய்தியாளர்கள் ஆத்திரத்துடன் கேட்டனர். “இந்த ஊடக சந்திப்பே ஆண்கள் அனைவருக்கும் களங்கம் விளைவிப்பதற்கான முயற்சியாகத் தெரிகிறது” என்று ஒரு ஆண் செய்தியாளர் கத்தினார்.

நிலைமை எல்லை மீறிப்போவதை உணர்ந்த என்னைப் போன்ற சிலர் விவாதத்தை வேறு திசைக்கு நகர்த்த முயன்றோம். ஆனால், நாங்கள் வெகு சிலர்தான் என்பதால், அந்த முயற்சியும் தோற்றது.  இறுதியாக சின்மயி எழுந்து நின்று கைகளைக் கூப்பி, செய்தியாளர்களிடம் கண்ணியம் காக்க வேண்டியபோது சில மணித்துளிகளேனும் அந்த அறையில் அமைதி நிலவியது. “இவ்வளவு காலம் கடந்து எங்களில் சிலராவது எங்களுக்கு நேர்ந்ததைப் பகிர்ந்துகொள்ள வந்திருக்கிறோம். ஆண்கள் எல்லோருக்கும் களங்கம் விளைவிப்பது எங்கள் நோக்கம் அல்ல.

பாலியல் சீண்டல் நடந்திருக்கிறது. அது தொடர்பாகச் சொல்லப்பட வேண்டிய கதைகள் எங்களிடம் இருக்கின்றன. எங்களுக்கு ஆதரவாக நில்லுங்கள் என்று ஆண்களைக் கேட்டுக்கொள்கிறோம். இதையும் மீறி நாங்கள் வாயை மூடிக்கொண்டு இருக்க வேண்டும் என்று இங்கே வலியுறுத்தப்படுகிறது” என்று அவர் சொல்லிக்கொண்டிருக்கையில் தொடர்ச்சியாக ஒளிப்படங்கள் எடுக்கப்பட்டன.

அங்கு உட்கார்ந்துகொண்டிருந்தபோது ‘நானும்கூட’ இயக்கத்தைப் பற்றி இணையத் தில் உலவிய மோசமான கமெண்டுகள், மீம்கள் மற்றும் ‘நகைச்சுவைகள்’ என் நினைவுக்கு வந்தன. அந்த மனநிலையின் வேர்களை வெகு தொலைவில் தேட வேண்டியதில்லை என்று தோன்றியது.

செய்தியாளர் சந்திப்பு முடிந்தவுடன், என் துறையைச் சேர்ந்தவர்கள் எழுப்பிய கேள்விகளுக்காக லீனாவிடம் சென்று மன்னிப்பு கேட்டேன். அந்தக் கேள்விகளை அவர் நன்றாகக் கையாண்டார் என்று நான் சொன்னபோது அவரிடமிருந்து வெளிப்பட்ட விரக்திப் புன்னகை, அவரிடமும் அவரைப் போன்ற சில பெண்களிடமும் ஒரு போர் தொடங்கியிருக்கிறது என்பதையும் அதில் அவர்கள் இன்னும் வெகுதூரம் செல்ல வேண்டியிருக்கிறது என்பதையும் விளக்கியது.

© தி இந்து
தமிழில்: ச.கோபாலகிருஷ்ணன்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x