Published : 22 Oct 2018 11:58 AM
Last Updated : 22 Oct 2018 11:58 AM
பதினாறு வயதினிலே பதினேழு பிள்ளையம்மா
தாலாட்டு பாடுகிறேன் தாயாக வில்லையம்மா
ஆ…ஆ.. ஆ.. ஆரிராரோ…
- இன்றைய தலைமுறை கேட்டிராத திரைப்பாடல் இது. இந்தப் பாடலுக்கு முழுக்க முழுக்கப் பொருந்திப்போகிறது மும்பையைச் சேர்ந்த கௌரி சாவந்தின் வாழ்க்கை.
மாற்றுப் பாலினத்தவரின் உரிமைகளைக் கோரி நேஷனல் லீகல் சர்வீசஸ் அத்தாரிட்டி (நால்சா) உச்ச நீதிமன்றத்தில் தொடுத்த வழக்கில் இவரும் ஒரு மனுதாரர். திருநங்கைகளுக்கும் ஆதார் அட்டை உரிமம் வேண்டும் என்று போராடியவர் இவர். மூத்த திருநங்கைகளுக்காக ‘நானி கா கர்’ எனும் காப்பகத்தை ஏற்படுத்தியிருக்கிறார். மும்பையில் பாலியல் தொழிலில் ஈடுபட்டிருக்கும் திருநங்கைகளின் குழந்தைகளைப் பாதுகாக்கும் பணியையும் செய்கின்றனர். குடும்பத்திலிருந்து தனி மரமாக வெளியேறி, தனக்கென ஒரு தோப்பை உருவாக்கிக்கொண்டவர் கௌரி சாவந்த்.
கணேஷ் கௌரியாக மாறிய கதை
புனேவில் பிறந்து வளர்ந்த கணேஷ் (கௌரி) ஐந்து வயதில் தாயை இழந்தார். பாட்டியின் அரவணைப்பில் வளர்ந்தவர், தன்னைத் திருநங்கையாக உணர்ந்தார். காவல்துறை அதிகாரியான அவருடைய தந்தையால் மகனுடைய இந்த மாற்றத்தை ஏற்றுக்கொள்ள முடியவில்லை. அதனால் மகனை வீட்டைவிட்டு வெளியேற்றினார். அப்போது கௌரிக்கு 17 வயது. வழக்கமாக மாற்றுப் பாலினத்தவருக்கு நடக்கும் கொடுமை இவருக்கும் நடந்தது.
கையில் 60 ரூபாயுடன் வீ்ட்டைவிட்டு வெளியேறினார் கௌரி. புனேவிலிருந்து ரயிலில் மும்பையின் தாதர் பகுதிக்கு வந்தார். அந்தப் பகுதியிலிருந்த சித்தி விநாயகர் கோயிலில் பிரசாதமாக வழங்கப்பட்ட இரண்டு லட்டுதான் அன்றைய மதிய உணவானது. மாலை மயங்கும் நேரம் கடந்து நெடிய இரவில் அவருடன் நட்பானார் ஒரு மாற்றுப் பாலின சகோதரி. அவர் தங்கும் இடத்தில் மூன்று நாட்கள் கௌரி தங்கினார்.
“நல்லவேளையாகப் பிச்சை எடுப்பதற்கும் பாலியல் தொழிலுக்கும் நான் பலியாகவில்லை. எனக்கு அடைக்கலம் கொடுத்த அந்தச் சகோதரி எல்.ஜி.பி.டி. மக்களுக்கு உதவும் பணியில் நீண்ட காலமாகச் செயல்படும் ஹம்சபர் எனும் தன்னார்வ அமைப்பில் என்னைச் சேர்த்துவிட்டார்” என்கிறார் கௌரி.
இயல்பிலேயே ஆங்கிலத்தில் நகைச்சுவையுடன் பேசும் திறனைப் பெற்றிருந்த கௌரிக்கு ஆங்கிலத்தில் கடிதங்கள் அனுப்புவது, அரசுக்குப் பல கோரிக்கைகளை வைப்பது போன்ற பல வேலைகளில் அங்கு, உதவியாக இருந்தார். எச்.ஐ.வி. விழிப்புணர்வு பிரச்சாரங்களையும் திருநங்கைகள் குறித்த புரிதலைச் சமூகத்தில் பல மட்டங்களில் கொண்டு செல்லும் பணியாளராக 1,500 ரூபாய் சம்பளத்துக்குப் பணியாற்றினார்.
அன்னையாக மாற்றிய காயத்ரி
தன்னுடைய பணி நிமித்தமாக பாலியல் தொழிலாளிகளிடம் விழிப்புணர்வுப் பிரச்சாரத்தில் ஈடுபட்டபோது ஒரு பாலியல் தொழிலாளியின் குழந்தையை கௌரி சந்தித்தார். அந்தக் குழந்தையின் பெயர் காயத்ரி. காயத்ரிக்கு ஐந்து வயது இருக்கும்போது, அவருடைய தாய் எய்ட்ஸ் நோயால் மரணம் அடைந்துவிட்டார். குழந்தை காயத்ரியை இந்தியாவின் பாலியல் தொழிலாளிகளின் பகுதியான சோனாகாச்சியில் விற்பதற்குச் சிலர் திட்டமிட்டனர். இதைக் கேள்விப்பட்ட கௌரி அவர்களிடமிருந்து காயத்ரியை மீட்டு, தானே வளர்த்துவருகிறார். திருநங்கைகளுக்குத் தத்தெடுக்கும் உரிமை வேண்டும் என்பதைச் சட்டபூர்வமாகப் போராடிப் பெற்றிருப்பவர் கௌரி சாவந்த்.
இவருடைய வாழ்க்கையின் முக்கியமான நிகழ்வை Vicks #TouchOfCare விளம்பரம் விளக்குகிறது. கௌரி சாவந்த் இடம்பெற்றிருக்கும் விளம்பரப் படத்தின் காணொலி, பொதுச் சமூகத்தில் இருக்கும் பலருக்கும் ஒரு படிப்பினையாக இருக்கிறது.
அயல்நாட்டில் திருநங்கையர் ஓவியம்! சமூகச் செயற்பாட்டாளர், கவிஞர், கல்வியாளர், பேச்சாளர் எனப் பல திறமைகளைக் கொண்ட திருநங்கை கல்கி சுப்ரமணியத்தின் அறிந்திராத இன்னொரு முகம், ஓவியர். பள்ளிப் பருவத்தில் பாலின மாறுபாட்டின் காரணமாகத் தன்னைக் கேலியும் கிண்டலும் செய்தவர்களிடமிருந்து தன்னை விடுவித்துக்கொள்ள கல்கி நாடிய இடம் காடு. “வானுயர்ந்த மரங்கள், பறவைகளின் ஓசை, மூங்கில்களின் உரசல், காய்ந்த இலைச் சருகுகளின் ஓசை போன்றவையெல்லாம் நான் கவிதை எழுத காரணிகளாகின. கூடவே, மனத் திரையில் பதிந்தவை ஓவியங்களாவும் மாறின” என்கிறார் கல்கி. கியூபிஸம், ஸ்பான்டேனியஸ், ரியலிஸம் போன்ற பாணிகளில் இவர் வரைந்த ஓவியங்களை அமெரிக்கா, கனடா போன்ற நாடுகளில் காட்சிக்கு வைத்திருக்கிறார். “ஓல்டன்பர்க் பல்கலைக்கழகப் பேராசிரியர் டாக்டர் கிளாடியாவின், அழைப்பையேற்று எனது சமூகச் செயற்பாடுகள், ஓவியப் படைப்புகள், கவிதைகள் குறித்து உரையாற்ற நவம்பரில் ஜெர்மனி செல்கிறேன். ஜெர்மனி மொழியில் எனது இரு கவிதைகள் மொழிபெயர்க்கப்பட்டு வெளியிடப்பட்டுள்ளன. நான் வரைந்த ஓவியங்களைக் காட்சிப்படுத்தி அவற்றை விற்பதன்மூலம் கிடைக்கும் தொகையில் திருநங்கைகளுக்கான சமூகப் பணிகளைச் செய்துவருகிறேன். ‘சகோதரி’ அமைப்பின் மூலமாக ‘Trans/Hearts’ என்ற திட்டத்தைத் தொடங்கியிருக்கிறேன். இதன்மூலம் என்னிடம் ஓவியப் பயிற்சி எடுத்துக்கொண்ட திருநங்கை மாணவிகளின் ஓவியப் படைப்புகளையும் காட்சிப்படுத்துகிறேன். அதில் அவர்களின் படைப்புகள் விற்பனை யானால் அந்தத் தொகை முழுவதையும் அவர்களிடமே கொடுக்கிறேன். கனடா, ஆஸ்திரேலியா நாடுகளிலிருக்கும் பலரது வீடுகளை என்னுடைய மாணவிகளின் ஓவியங்கள் அலங்கரிக்கின்றன. தமிழ்நாட்டுத் திருநங்கைகள் மட்டுமல்ல கேரளா, மேற்கு வங்கம் என இந்திய மாநிலங்களில் இருந்தும் உலக அளவில் பல நாடுகளிலும் ஓவியப் பயிற்சி அளிக்க அழைப்பு வருகிறது. ஆர்வம்மிக்க திருநர்கள் என்னை www.sahodari.org என்ற இணையதளம் வழியாகத் தொடர்புகொள்ளலாம்” என்கிறார் கல்கி. |
(புரிந்துகொள்ள முயல்வோம்)
கட்டுரையாளரைத் தொடர்புகொள்ள: ravikumar.cv@thehindutamil.co.in
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT