Last Updated : 07 Oct, 2018 03:06 PM

 

Published : 07 Oct 2018 03:06 PM
Last Updated : 07 Oct 2018 03:06 PM

பெண்கள் 360: முடக்கப்படும் முன்னேற்றம்

முடக்கப்படும் முன்னேற்றம்

அமில வீச்சால் பாதிக்கப்பட்ட பெண்கள் ஒன்றிணைந்து, ‘ஷிரோஸ் ஹேங்அவுட்’ எனும் காபி ஷாப்பை புதுடெல்லியில் நடத்திவருகின்றனர். உத்தரபிரதேசத்தில் அகிலேஷ் யாதவ் ஆட்சியின்போது அந்தக் கடையின் கிளை லக்னோவில் தொடங்கப்பட்டது. அவர்களை ஊக்குவிக்கும் விதமாக மாநிலம் முழுவதும் இந்த வகைக் கடைகளைத் திறக்குமாறு அவர் கூறினார். அதற்குள் அவரது ஆட்சி முடிந்துவிட்டது.

இந்த நிலையில் தற்போதைய முதல்வர் யோகி ஆதித்யநாத், அந்தக் கடைகளை மூடும்படி கூறியுள்ளார். மேலும், “இப்படி காபி ஷாப் திறப்பதாலேயே, பாதிக்கப்பட்ட பெண்கள் முன்னேற முடியாது. அவர்களுக்கு எப்படி மறுவாழ்வு அளிப்பது என எங்களுக்குத் தெரியும். இப்படி காபி ஷாப் நடத்துவது அவசியமற்றது” என்று சொல்லியிருக்கிறார். இது அங்கு வேலை பார்க்கும் அமில வீச்சால் பாதிக்கப்பட்ட பெண்களுக்குப் பெரிய அதிர்ச்சியை அளித்துள்ளது. சொந்தக் காலில் நிற்கத் தொடங்கிய சில ஆண்டுகளிலேயே அவர்கள் மீண்டும் முடக்கப்பட்டுள்ளனர்.

அடிமைகளை மீட்டெடுத்தவர்

பெர்முடாவில் 1788 செப்டம்பர் 1-ம் தேதி கறுப்பினக் குடும்பத்தில் பிறந்தவர் மேரி பிரின்ஸ். அவருக்குச் சுதந்திரம் என்பது கனவிலும் சாத்தியமற்றது. 1826-ல் டேனியல் ஜேம்ஸ் எனும் முன்னாள் அடிமையை மணந்தார். அடுத்த இரண்டு ஆண்டுகளில் இங்கிலாந்துக்கு அனுப்பப்பட்டார். கணவரிடமிருந்து மேரி பிரிக்கப்பட்டார்.

doodle 2jpg

1808-ல் இங்கிலாந்தில் அடிமை விற்பனை தடை செய்யப்பட்டிருந்ததால் முதன்முறையாகச் சுதந்திர காற்றைச் சுவாசித்தார். அங்குப் பிழைப்புக்கு வழியில்லை. வறுமையை மீறித் தன்னைப் போன்ற அடிமைகளின் விடுதலைக்காக மேரி போராடினார்.

‘சுதந்திரம் மனிதனின் அடிப்படை உரிமை’ என அவர் முன்னெடுத்த விவாதம் பேசுபொருளானது. ‘மேரி பிரின்ஸ் எனும் மேற்கிந்திய அடிமையின் வரலாறு’ என்ற அவரது சுயசரிதை அடிமைகள் குறித்த இங்கிலாந்தின் பொதுப்புத்தியை மாற்றியமைத்தது. அதுவே எட்டு லட்சத்துக்கும் மேலான அடிமைகளை விடுவிக்கவும் வழியமைத்தது. “ஆடு, மாடுகளைப் போல நானும் என் சகோதரிகளும் அடிமைகளாக விற்கப்பட்டோம்.

அது துயரமான பிரிவு. ஒருவர் பின் ஒருவராக நாங்கள் சென்றோம்.  என் தாய் வெறுங்கையோடு வீடு திரும்பினார்” என்ற வரிகள் அடிமை வாழ்வின் வலிக்கும் வேதனைக்கும் சாட்சியாக இன்றும் உள்ளன. அவரது 230-வது பிறந்தநாளைக் கொண்டாடும்விதமாக அக்டோபர் 1-ம் தேதி சிறப்பு டூடுலை கூகுள் வெளியிட்டது.

 

நம்பிக்கை தந்த நோபல் பரிசு

இயற்பியலில் பெண்களுக்குப் பெரிய அளவுக்கு அங்கீகாரம் கிடைத்ததில்லை. 2017 வரை இரண்டு பெண்களே இயற்பியலில் நோபல் பரிசு பெற்றிருக்கிறார்கள். முதல் நோபல் பரிசை மேரி கியூரி பெற்றார். இரண்டாவதாக 1963-ல் மரியா மேயர் பெற்றார். பெண்கள் இயற்பியலில் நோபல் வென்று 55 ஆண்டுகள் ஆகிவிட்டன.

இந்த நிலையில், இந்த ஆண்டு இயற்பியலுக்கான நோபல் பரிசை டோனா ஸ்ட்ரிக்லேண்டு பெற்றுள்ளார். அதுவும், “இயற்பியல் துறை என்பது ஆண்களால் மட்டுமே கட்டமைக்கப்பட்டது” என்று விஞ்ஞானி செர்ன் அறிவித்த மறுநாளே நோபல் பரிசை வென்று பெண்களின் பங்களிப்பை உறுதிசெய்துள்ளார்.

nobeljpgright

“இயற்பியல் துறையில் இருக்கும் பெண்கள் அனைவரும் கொண்டாட வேண்டிய தருணம் இது. இதுவரை இயற்பியலிலிருந்து நாம் விலக்கி வைக்கப்பட்டிருந்தோம். நமது பங்களிப்பு அங்கீகாரமற்றதாக இருந்தது.

இயற்பியலைப் பெண்கள் இனி வேகமாக, மிக வேகமாக முன்னெடுத்துச் செல்வார்கள்” எனப் பேராசிரியை டோனா நம்பிக்கையுடன் தெரிவித்திருக்கிறார். இந்த நிலையில் வேதியியலுக்கான நோபல் பரிசை ஃபிரான்செஸ் அர்னால்ட் வென்றிருக்கிறார்.

இந்த வெற்றி, அறிவியலில் பெண்களின் பங்களிப்பைக் கேள்விக்கு அப்பாற்பட்டதாக ஆக்கியிருக்கிறது. பெண்கள், குழந்தைகள் மீது நிகழ்த்தப்படும் வன்முறைக்கு எதிராகப் போராடிவரும் ஈராக்கைச் சேர்ந்த நாதீயே மூராத்துக்கு (23 வயது) அமைதிக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டிருக்கிறது.

 

காவு வாங்கும் கடன் தொல்லை

ஈழப் போரால் ஏற்பட்ட காயத்தின் வடுவும் குருதியின் நெடியும் இன்றும் மறையவில்லை. உறவுகளையும் உடைமையையும் இழந்த மக்கள் இயல்பு வாழ்வுக்கு மெல்லத் திரும்பி வருகின்றனர். இந்த நிலையில் மட்டக்களப்பு மாவட்டத்தில் கடன் தொல்லை காரணமாக 37 பெண்கள் தற்கொலை செய்துகொண்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சர்வதேச சிறுவர் தினத்தையொட்டி அங்கு நடைபெற்ற விழாவில் மட்டக்களப்பு மாநகர சபை உறுப்பினர் இதைத் தெரிவித்தார்.

மேலும், அவர் பேசும்போது, “மட்டக்களப்பு மாவட்டத்தில் கடன் தொல்லையால் மக்கள் அதிக அளவில் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழ்ப் பெண்கள் ஏமாற்றாமல் எப்படியாவது கடனை வட்டியுடன் திரும்பச் செலுத்திவிடுவார்கள் என்பதால், அவர்களை இலக்காகக்கொண்டே கடன் கொடுக்கும் நிறுவனங்கள் அங்கு இயங்குகின்றன. இந்த ஆண்டு 37 பெண்கள் இந்த மாவட்டத்தில் தற்கொலை செய்துகொண்டுள்ளனர். 163 குடும்பங்கள் நீதிமன்றம் சென்று பிரிந்துள்ளன. 300-க்கும் அதிகமான பெண்கள் தமது பிள்ளைகளைப் பிரிந்து வெளிநாடுகளுக்குப் பிழைப்புக்காகச் சென்றுள்ளனர்” எனக் குறிப்பிட்டார்.

 

சமையலறையை விட்டு வராதீர்கள்?

ஆனந்திபென் பட்டேல், குஜராத்தின் முன்னாள் முதல்வர். தற்போது மத்திய பிரதேசத்தின் ஆளுநராக உள்ளார். அவ்வப்போது ஒழுக்கம், அறிவுரை, தத்துவம் என ஏதாவது பேசி சர்ச்சையில் சிக்குவது அவரது வாடிக்கை.

aanandijpg

அந்த வகையில், மாணவிகளுக்கு அவர் அளித்த அறிவுரை, புதிய சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

மத்திய பிரதேசத்தில் உள்ள ராஜ்கார்க் மாவட்டத்தில் ஒரு விழாவில் பங்கேற்றபோது கஸ்தூர்பா மகளிர் விடுதி மாணவிகளுடன் கலந்துரையாடினார். அப்போது, “நீங்கள் படிப்பில் பல சாதனைகளைப் புரிந்துவருகிறீர்கள். அதே நேரத்தில் சமையலறையை விட்டு நீங்கள் வெளியே வந்து விடாதீர்கள்.

நன்றாகச் சமையுங்கள். நன்றாகச் சமைக்கக்கூடிய பெண்களுக்கு எதிர்காலத்தில் மாமியாருடன் நல்ல உறவு ஏற்பட வாய்ப்பு அதிகம். பெண்கள் தலைமுடியை வெட்டக் கூடாது.

நீளமான தலைமுடியே பெண்களுக்குக் கவுரவத்தை அளிக்கும்” என அவர் அறிவுரை வழங்கியிருக்கிறார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x