Last Updated : 07 Oct, 2018 03:04 PM

 

Published : 07 Oct 2018 03:04 PM
Last Updated : 07 Oct 2018 03:04 PM

வண்ணங்கள் ஏழு 25: நானும் ஒரு பெண்

இவரெல்லாம் பெண்தானா எனச் சிலர் நினைக்கலாம். அப்படி நினைப்பவர்களுக்கு ஒரு சின்ன விளக்கம். பால் மாற்று அறுவை சிகிச்சை செய்துகொண்ட சாரா ஷேக்கா ஒரு பெண். இவரது பெயருக்கு எகிப்திய மொழியில் அரிய இளவரசி எனப் பொருள்! இந்தியாவில் பன்னாட்டு நிறுவனம் ஒன்றில் மனித வள அதிகாரியாகப் பணியாற்றிய முதல் திருநங்கை இவர். பாரம்பரிய நடனங்களான பரதநாட்டியம், குச்சிபுடி, மோகினியாட்டம் ஆகியவற்றில் தேர்ந்தவர். பள்ளி, கல்லூரிகளில் மாணவர்களுக்கு மாற்றுப் பாலினத்தவர் குறித்த விழிப்புணர்வை அளித்துவருகிறார்.

இஸ்லாமியக் குடும்பத்தில் பிறந்த இவருக்கு, அரும்பு மீசை முளைக்கும் முன்னே தாவணி போடும் ஆசை முளைத்தது. வீட்டில் சொன்னால் நிராகரித்துவிடுவார்களோ என்ற பயத்தால் தனக்குள் துளிர்த்த மாற்றத்தை மறைத்தார்.

வேலையில்லாத பட்டதாரி

கல்லூரிப் படிப்பு முடித்து இளம் வயதில் அடியெடுத்து வைத்தபோதும் தனக்குள் நிகழ்ந்த ஹார்மோன் மாற்றங்களால் விழித்துக்கொண்ட பெண்மையை அடக்கிவைக்க படாத பாடுபட்டார். தன் நிலைமை வெளியே தெரிந்தால் ஏற்கெனவே வேலையில்லாப் பட்டதாரியாக இருக்கும் தனக்கு வேறு சில பட்டப் பெயர்களும் சேர்ந்துகொள்ளுமோ எனப் பயந்தார். நல்ல வேலை கிடைக்கும்வரை தன் பாலின அடையாளத்தை வெளிப்படுத்தக் கூடாது என்ற முடிவில் உறுதியாக இருந்தார்.

கேரளத்தில் இருபதுக்கும் மேற்பட்ட நிறுவனங்களில் வேலைக்காக விண்ணப்பித்தார். எல்லா இடங்களிலும் நேர்காணலுக்குப் பின், திருநங்கைக்கு வேலை கொடுப்பதில்லை என்ற பதிலே கிடைத்தது. சில இடங்களில் வேலைக்குச் சேர்ந்த பிறகு அவரது இயல்பான தோற்றத்தைக் காரணமாக வைத்து வெளியேற்றப்பட்டார்.

பிறகு திருவனந்தபுரத்தில் ஒரு பன்னாட்டு நிறுவனத்தில் மனித வளத் துறையில் விண்ணப்பித்தார். பலகட்டத் தேர்வுகளைக் கண்டு, மனிதவளத் துறையின் தலைமை அதிகாரியுடன் நேர்காணல். அவர், “நீங்கள் பெண்தானே..?” என்று சந்தேகத்துடன் கேட்டபோது, நிச்சயம் இந்த வேலை கிடைத்துவிடும் என்று அவருக்குத் தோன்றியது. ஆனால், வேலையை உறுதிசெய்துகொள்ள, தன்னைப் பற்றிய உண்மையைச் சொல்லியிருக்கிறார்.

“வேலைக்குச் சென்று ஆறு மாதங்களுக்குப் பிறகு பொறுத்தது போதும்னு பொங்கி எழுந்தேன். அங்கிருக்கும் எல்ஜிபிடி குழுவில் உறுப்பினரானேன். அவங்களோட ஆதரவால் பால்மாற்று அறுவை சிகிச்சை செய்துக்கிட்டேன். பெண்ணா பிறந்தால், பிரசவ வலியை அனுபவிக்கணும்னு சொல்லுவாங்க. உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை செய்தபோது அந்த மாதிரி நூறு பிரசவவலியை ஒரே நேரத்தில் அனுபவிக்கிற மாதிரி இருந்தது.

இப்போ சாராவாக நான் முழுமையான பெண்ணா மாறியிருக்கேன். திருமண ஆசையும் வந்திருக்கு. என்னால் ஒரு குழந்தைக்குத் தாயாக முடியாதுங்கற உண்மை என்னைக் கொல்லுது. இருந்தாலும் நான் உயிர்வாழணும்” என்று சொல்லும் சாராவின் இளமைக் காலம் எல்லாத் திருநங்கைகளும் எதிர்கொள்ளும் அவதிகளுடன்தான் தொடங்கியது.

ஜிம்முக்குப் போ

படிக்கும் காலத்திலேயே அவருக்கு மாணவிகள்தான் அதிகம் நண்பர்களாக இருந்தனர். அவர்களோடுதான் விளையாடுவார். அதைப் பார்க்கும் மாணவர்கள் சாராவிடம் கடுமையாக நடந்துகொள்வார்கள். கேலி, கிண்டல் செய்வார்கள். வெளியில் சொல்ல முடியாத வார்த்தைகளால் திட்டியிருக்கிறார்கள். அதைக் கேட்டுப் பல நேரம் சாரா அழுதிருக்கிறார். பள்ளியில் இப்படி என்றால், வீட்டில் வேறு மாதிரியான கொடுமைகளை எதிர்கொண்டார். “இந்தெந்த உணவை அதிகம் சாப்பிடு.

பையன்களோடு விளையாடு. ஜிம்முக்குப் போன்னு இப்படி நிறைய வற்புறுத்தல்கள். இதையெல்லாம் சகிச்சிக்கிட்டுத்தான் இளமைப் பருவம் முடிந்தது. ஒருவழியாப் படிப்பை முடித்தேன். உள்ளூரில் கொஞ்ச நாள் வேலை பார்த்தபின், பெண்ணாக மாறும் என்னோட எண்ணத்துக்குச் செயல்வடிவம் கொடுக்கத் தொடங்கினேன். அதுக்கு வீட்டில் பலத்த எதிர்ப்பு கிளம்பியதால், வீட்டை விட்டு வெளியேறினேன்” என்கிறார் சாரா.

ஊருவிட்டு ஊரு போய்

அபுதாபிக்குச் சென்று அங்கு ஒரு பள்ளியில் மனிதவளப் பிரிவு அதிகாரியாகப் பணியாற்றினார். இரண்டு ஆண்டுகள் கழித்து சொந்த ஊருக்குத் திரும்பினார். இந்த இடைவெளியில் வீட்டில் இருப்பவர்கள் தன்னுடைய முடிவை வரவேற்பார்கள் என சாரா நினைத்தார். ஆனால், வீட்டில் இருப்பவர்களும் உறவினர்களும் சாரா திருநங்கையாக மாறுவதை எதிர்த்தனர்.

மீண்டும் அபுதாபிக்கே சென்றுவிடச் சொல்லி அவரை வற்புறுத்தினர். மீண்டும் வீட்டிலிருந்து வெளியேறி, தன் நண்பரின் வீட்டிலிருந்து வேலை தேட ஆரம்பித்தார். பல நிறுவனங்களில் சேர்வதற்கான தகுதி இருந்தும் திருநங்கை என்பதால் அவருக்குப் பணி வாய்ப்பு மறுக்கப்பட்டது.

முதல் மனிதவள அதிகாரி

நிறைய போராட்டங்களுக்குப் பிறகு திருவனந்தபுரத்திலேயே யுஎஸ்டி குளோபல் என்னும் ஒரு பன்னாட்டு நிறுவனத்தில் திருநங்கை என்ற அடையாளத்துடனே மனித வள அதிகாரிப் பணியை சாராவுக்கு வழங்கினார்கள். இந்தியாவில் ஒரு பன்னாட்டு நிறுவனத்தில் மனிதவளத் துறையில் பணியாற்றும் முதல் திருநங்கை என்று ஊடகங்கள் அதைச் செய்தியாக வெளியிட்டன.

“இதெல்லாம், ஒருபக்கம் மகிழ்ச்சியாக இருந்தாலும் இன்னொரு பக்கம் இந்தப் புகழாலேயே எனக்குத் தங்க இடம் கிடைக்கவில்லை. என் நிலையைப் பார்த்த அந்த நிறுவனம் என்னை அவர்களின் இடத்திலேயே தங்க அனுமதித்தது. ஆறு மாதங்கள் நான் சேர்த்துவைத்த பணத்தைக் கொண்டு சிகிச்சைக்குத் தயாரானேன். 45 நாட்கள் எனக்கு மருத்துவ விடுப்பை அந்த நிறுவனம் அளித்தது. சிகிச்சைக்குப் பிறகு அம்மாதான் என்னை ஆதரித்து என்னுடன் இருக்கிறார். ஏறக்குறைய ஒரு வருடத்துக்கும் அதிகமாக அந்த நிறுவனத்தில் பணிபுரிந்தேன்.

அப்போதுதான் சென்னையிலிருந்து ஃபோர்டு நிறுவனத்திலிருந்து மனிதவளத் துறையில் அதிகாரியாக ஒரு வாய்ப்பு வந்தது. இங்கு என்னை ஒரு பெண்ணாகத்தான் எல்லோரும் மதிக்கிறார்கள். மிகவும் அன்பாகப் பழகுகிறார்கள். என் அம்மாவுடன் அமைதியாக வாழ்கிறேன். அம்மாவின் அன்பு போதும். சாதி, மதம், இனம், மொழி தடையில்லாமல் என்னைப் புரிந்துகொண்டு ஏற்றுக்கொள்ளும் துணை எனக்குக் கிடைத்தப்பின், ஒரு குழந்தையைத் தத்தெடுத்து வளர்க்கும் எண்ணம் இருக்கிறது.

குறைந்தது பத்து குழந்தைகளுக்குக் கல்வி உதவியை வழங்கும் எண்ணமும் இருக்கிறது” என்று சொல்லும் சாரா, நெருக்கடிகளைச் சமாளித்தால்தான் வாழ்க்கையில் வெற்றிபெற முடியும் என்கிறார். “வானவில்லில் ஒரேயொரு நிறம்தான் இருக்க வேண்டும் என்று அடம்பிடிக்க முடியாது. பன்மைத்துவம் என்பது இயற்கையானது. இந்தப் புரிதலைச் சமூகத்தில் ஏற்படுத்த வேண்டிய பொறுப்பு மாற்றுப் பாலின சமூகத்துக்கும் உண்டு” என்கிறார்.

நம்பிக்கை தந்த சென்னை

ஒரு மாதத் தேடலுக்குப் பிறகும் கேரளத்தில் சாரா ஷேக்காவுக்கு  வீடு கிடைக்கவில்லை. சென்னையில் அவர் பணிபுரியும் இடத்துக்குச் சிறிது தொலைவில் ஒரே நாளில் வீடு கிடைத்ததைப் பற்றி நெகிழ்ச்சியுடன் கூறினார்.

“நான் ஒரு திருநங்கை. எனக்கு இருக்கும் ஒரே உறவு என்  அம்மாதான். என்னைப் பற்றி கூகுளில் தயவுசெய்து பாருங்கள்” என்று வீட்டு உரிமையாளரிடம் கூறியிருக்கிறார். சாராவைப் பற்றி இணையத்தில் காணப்பட்ட செய்திகளைப் படித்த வீட்டு உரிமையாளர் சசி பாகவத் சிங், “சாரா உங்களுக்கு வாடகைக்கு வீடு கொடுக்கும் உதவியையாவது என்னால் செய்ய முடிந்ததே என்பதை நினைத்துச் சந்தோஷப்படுகிறேன்” என்றாராம்.

(புரிந்துகொள்ள முயல்வோம்)
கட்டுரையாளரைத் தொடர்புகொள்ள: ravikumar.cv@thehindutamil.co.in

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x