Published : 26 Aug 2018 09:45 AM
Last Updated : 26 Aug 2018 09:45 AM
தமிழ்க் கவிதையில் பெண் இருப்பு நிலை குறித்த பிரச்சினைகள் 80களின் இறுதியில்தான் திடமாக வெளிப்படத் தொடங்கியன. அதுவரை பெண் நிலை குறித்த கவிதைகளை ஒரு கரிசனை என்ற பார்வையுடன் ஆண் கவிஞர்கள்தாம் எழுதிக்கொண்டிருந்தார்கள்.
தொண்ணூறுகளில் எழுந்த புதிய பெண் எழுச்சி தமிழ்க் கவிதையையும் பாதித்தது. அதுவரை ஒரு ஆபரணத்தைப் போலிருந்த சமூக ஒழுக்கங்களை கவிதை இளவரசிகள் கேள்விக்குள்ளாக்கினர். அந்த இளவரசிகளுள் ஒருவர் கனிமொழி கருணாநிதி.
சொல்லப்பட்ட அடையாளங்கள்
பெண் என்னும் அடையாளம் உள்ளும் புறமுமாக நிகழ்த்தக்கூடிய பாதிப்புகள்தாம் கனிமொழியின் பெரும்பாலான கவிதைகளின் பாடுபொருள்கள். இந்தக் கவிதைகள் இந்தக் கட்டுப்பாட்டுக்கு எதிராகக் கொடி பிடிக்கவில்லை; மாறாக, அந்த நிலையை சுய எள்ளலாகக் கடக்க முயல்கின்றன.
‘புதுயுகப் பெண்கள் நாங்கள்
கேள்விகள் கேட்போம்
கொடி பிடிப்போம்
கோஷம் போடுவோம்
வலித்துக் கதறுவோம்
புன்னகையோடு கீழ்ப்படிவோம்’
என்கிறது அவரது ஒரு கவிதை. சில கவிதைகளில் சிறு பிள்ளைகளின் விளையாட்டுப் பேச்சைப் போல் இதைச் சுட்டிச் செல்கின்றன. இந்தக் கவிதைகள் எல்லாம் பெண்ணின் மீதான பொது நம்பிக்கையை ஆதாரமாக எடுத்துக்கொண்டு அதற்கு எதிரான எதிர்ப் பண்பாட்டு அரசியலை முன்வைக்கின்றன. பிறந்ததி லிருந்து மாறிவரும் பெண்ணின் உறவுநிலைகள், எப்படிச் சுமையாக அவளது தோளில் இறங்குகின்றன என்பதையும் கவிதைகள் வழியாகச் சொல்கிறார்.
பெண் என்னும் தனி மனுஷியின் அடையாளமே ஒரு புனைவு என ஒரு கவிதையில் சொல்கிறார். இந்தக் கவிதையின் தொடர்ச்சியாகக் கடவுளர், வீட்டார், உறவுகள் எல்லாம் பெண் என்னும் சொல்லப்பட்ட அடையாளத்தை உருவாக்க எடுத்துக் கொள்ளும் பிரயத்தனங்கள் பலவற்றைக் கவிதைகள் வழியாக கனிமொழி சொல்கிறார்.
இந்தக் கவிதைகளின் தொடர்ச்சியாக அவரது அம்மா குறித்த கவிதைகளைப் பார்க்க முடியும். அவரது கருவறை வாசனைக்காக ஏங்கும் மகளாக கனிமொழி தன்னைக் கவிதைக் குள் சிருஷ்டிக்கிறார். தனது கவிதைகள் பேசும் பெண்ணுக்கான உருவாக அம்மாவை கனிமொழி உருவகித்துப் பார்க்கிறார் எனலாம். அம்மாவின் வாசனையைக் கவிதைகளுக்குள் திரும்பத் திரும்ப பிடிக்க முயல்கிறார். குடும்ப அமைப்பு பெண் மீது பிரயோகிக்கும் வன்முறையைச் சொல்லும் ஒரு கவிதையில் அம்மாவையும் அதில் பங்காளி ஆக்கியிருக்கிறார்.
கனிமொழியின் கவிதையின் இன்னொரு அம்சம் அது திடமாக முன்வைக்கும் அரசியல். பெண்ணின் பிரச்சினைகளைப் பேசுவதன் வழியாக அவர் பகுத்தறிவு அரசியலையும் பேசுகிறார். புராணக் கதைகளில் பெண் சித்தரிக்கப்பட்டதை மறுபரிசீலனைக்கு உட்படுத்திப் பார்க்கிறார்.
‘என்னாடு போனாலும்
தென்னாடுடைய சிவனுக்கு
மாதவிலக்குள்ள பெண்கள் மட்டும் ஆவதே இல்லை’
என்கிறது அவரது ஒரு கவிதை. பக்தி நிலையங்கள் தங்கள் விதிமுறைகளைத் தளர்த்திவரும் நவீன யுகத்தில் பெண்கள் மீதான கட்டுப்பாடுகள் மட்டு தளர்த்தப்படவில்லை என்பதை இந்தக் கவிதை சுட்டுகிறது. முன்பைக் காட்டிலும் மதவாத அவநம்பிக்கைகள் தீர்க்கம் பெற்றுவரும் இன்றைய காலகட்டத்தில் இந்தக் கவிதை முக்கியத்துவம் மிக்கதாகிறது. அதேபோல இன்னொரு கவிதையில் பகுத்தறிவு வாதத்தையும் கேள்வி கேட்கிறது. ‘சிறகுகள் முறிக்காத வரை நானும் பகுத்தறிவுவாதிதான்’ என்கிறது ஒரு கவிதை.
விசனத்தின் குரல்
நவீனத்துவத்துடன் தொடர்கொண்டுள்ளவை கனிமொழியின் கவிதைகள். ஆனால், அவற்றுள் சில நகரமயமாக்கலை விமர்சிக்கின்றன. இது ஒரு முரணான அம்சம். எதிர்ப்பண்பாட்டு நிலையில் அவரது கவிதை அதைச் சுவீகரித்திருக்க வேண்டும். ஆனால், அவை அதன் குறைபாடுகளை விமர்சிக்கின்றன. இந்தக் கவிதைகளில் அவரது குரல் விசனத்துடன் வெளிப்படுகிறது. அது நகரமயமாக்கலால் மலிந்துவரும் மனிதத்துவத்தைச் சித்தரிக்கிறது. இந்த இடத்தில் கனிமொழியின் கவிதைகள் ஓரினத்தின் பண்பாட்டை ஓர்மைப்படுத்துகின்றன.
ஆண்/பெண் உறவு குறித்த முரண்களை யும் இவரது கவிதைகள் சித்தரிக்கின்றன. இரு தனி மனிதர்களுக்கு இடையிலான வாழ்க்கையின், புரிதலின் தேவையைச் சில கவிதைகள் உணர்த்துகின்றன. ஒரு குடும்ப உறவுக்குள் இருக்கும் ஆண், பெண் நிலைகள், ஒருவர் மற்றொருவரைக் குறித்து வரையறுத்துள்ள ‘அளவுகோல்’ குறித்து கனிமொழியின் ஒரு கவிதை சொல்கிறது. ஆளுக்கொரு அளவுகோல் மட்டுமல்ல. இருவருக்கும் எனத் தனியாக ஒரு அளவுகோலும் இருக்கிறது. இப்படியான அளவுகோல்களுக்கு இடையில் சுழலும் வாழ்க்கையை அந்தக் கவிதை சித்தரிக்கிறது.
தமிழ்ப் புதுக்கவிதைப் போக்கில் நிகழ்ந்த இரு வேறு கவிதை இயக்கங்களுக்கு இடையி லான வேறுபாட்டுடன் ஒப்பிடத்தகுந்தவை கனிமொழியின் கவிதைகள். அவரது கவிதை மொழிக்குத் தனிமை இருட்டும் உண்டு. பகலின் பிரகாசமும் உண்டு. இந்த இரு தன்மைகளையும் அவரது கவிதைகளின் காண முடியும்.
தன் இருப்பு நிலை சார்ந்த கவிதைகளையும் கனிமொழி எழுதியிருக்கிறார். தான் மறந்த சமூகத் தளத்திலும் கவிதைகள் எழுதியிருக்கிறார். ஆனால், கவிதைகளைத் திட்டமாக அவர் உருவாக்கவில்லை எனக் கூறலாம். கவிதையின், பாடுபொருளின் மீதுதான் தனது கவிதைகளைக் கட்டுகிறார்.
அதனால் கவிதைக்கான வடிவைப் பிரயத்தனத்துடன் அவர் கையாளவில்லை. உவமை, உருவகம் போன்ற கவிதை அலங்காரங்கள் கனிமொழியின் கவிதைகளில் மிகப் பரவலாகக் கையாளப் படவில்லை. மிக எளிய பொதுப் பயன்பாட்டுச் சொற்களைக் கொண்டுதான் கவிதை சொல்ல முயன்றிருக்கிறார். அவற்றுக்குக் கற்பனைச் சுமையை ஏற்றுவதைவிட இயல்பின் எளிமையைச் சூட்டியுள்ளார். இது எளிய வாசகர் நுழைவுக்கான சாத்தியத்தை அளிக்கும்.
பெரிய அறிவியல் மறுமலர்ச்சி நிகழ்ந்த இந்த நூற்றாண்டிலும் பல நிலையிலும் பெண் இனத்துக்கு எதிரான ஒடுக்குமுறை முன்பைவிட வலுப்பெற்றுள்ளது. மதத்தின் பெயரால் நடத்தப்பட்ட இதை இப்போது அரசியலாகவும் நிலை நிறுத்த முயற்சி மேற்கொள்ளப்பட்டுவருகிறது. இந்தப் பின்னணியில் வைத்துப் பார்க்கும்போது கனிமொழியின் கவிதைகள், மறந்துவிட்ட பகுத்தறிவுப் பண்பாட்டை மீட்கும் தற்கால முயற்சி எனலாம்.
அப்பா சொன்னாரென
பள்ளிக்குச் சென்றேன்
தலைசீவினேன், சில
நண்பர்களைத் தவிர்த்தேன்,
சட்டைபோட்டுக்கொண்டேன்,
பல்துலக்கினேன், வழிபட்டேன்,
கல்யாணம் கட்டிக்கொண்டேன்,
காத்திருக்கிறேன்
என்முறை வருமென்று.
கனிமொழி கருணாநிதி, மாநிலங்களவை உறுப்பினர். பத்திரிகையாளராகப் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். திமுக மகளிரணிச் செயலாளராகவும் உள்ளார். ‘கருக்கும் மருதாணி’ ‘அகத்திணை’ ‘கருவறை வாசனை’ ஆகிய கவிதைத் தொகுப்புகள் காலச்சுவடு வெளியீடாக வந்துள்ளன. ‘சிகரங்களில் உறைகிறது காலம்’ தொகுப்பு வ.உ.சி. பதிப்பக வெளியீடாக வந்துள்ளது. இவை தவிர ‘பார்வைகள்’ உள்ளிட்ட கட்டுரைத் தொகுப்புகளும் வெளியாகியுள்ளன. |
(பாதைகள் நீளும்)
கட்டுரையாளரைத் தொடர்புகொள்ள: jeyakumar.r@thehindutamil.co.in
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT