Last Updated : 18 Aug, 2018 06:06 PM

 

Published : 18 Aug 2018 06:06 PM
Last Updated : 18 Aug 2018 06:06 PM

ஆடும் களம் 17: நீச்சலில் புலிப் பாய்ச்சல்!

ஒலிம்பிக் போட்டிகளில் வழக்கமான விளையாட்டுப் பிரிவுகளைத் தவிர மற்ற பிரிவுகளில் இந்திய வீராங்கனைகளின் பெயர்களைக் காண்பதே அரிது. நீச்சல் போட்டிகளில் இந்திய வீராங்கனைகள் யாருமே பங்கேற்க மாட்டார்களா என்ற ஏக்கம் நீண்ட காலமாகவே இருந்துவந்தது. புத்தாயிரம் ஆண்டின் தொடக்கத்தில் நடந்த சிட்னி ஒலிம்பிக்கில்தான் அந்த ஏமாற்றம் நீங்கியது. சிட்னி ஒலிம்பிக்கில் நீச்சல் போட்டியில் முதன்முதலாக இந்திய வீராங்கனையின் பெயரும் இடம்பெற்றது. அவர், நிஷா மில்லட் (Nisha Millet).

கர்நாடகாவைப் பூர்விகமாகக் கொண்ட நிஷாவின் குடும்பம் சென்னையில் வாழ்ந்து வந்தது. நிஷாவுக்கு ஐந்து வயதானபோதே அவரை நீச்சல் வீராங்கனையாக்குவது என்ற முடிவுக்கு அவருடைய பெற்றோர் வந்துவிட்டார்கள். ஆனால், நிஷாவுக்கோ தண்ணீரைக் கண்டாலே ஒவ்வாமை. தண்ணீரில் கால்வைக்கவே பயப்படுவார்.

ஆனால், தண்ணீர் மீதான பயத்தை அவருடைய தந்தைதான் நீக்கினார். சென்னை ஷெனாய் நகரில் உள்ள ஒரு நீச்சல் கிளப்பில் நிஷாவைச் சேர்த்தார். நீச்சல் பயிற்சிக்கும் மகளை அனுப்பினார். கண்டிப்பான ஒரு பயிற்சியாளரிடம் இருந்துதான் நிஷாவின் நீச்சல் வாழ்க்கை தொடங்கியது. அந்தக் கண்டிப்பும் நீச்சல் மீது அவருடைய பெற்றோர் காட்டிய ஈடுபாடும் விரைவாகவே அவரை நீச்சல் வீராங்கனையாக்கின.

சென்னையில் தொடக்கம்

பத்து வயதிலேயே மாநில அளவிலான நீச்சல் போட்டியில் களமிறங்க ஆரம்பித்து விட்டார் நிஷா. 1992-ல் சென்னையில் மாநில அளவிலான நீச்சல் போட்டி நடைபெற்றது. 50 மீ ஃபிரீஸ்டைல் பிரிவில் பங்கேற்ற நிஷா, தங்கப் பதக்கம் வென்றார். நீச்சலில் அவர் பெற்ற முதல் பதக்கம் இதுதான். 1994-ல் தேசிய சப்-ஜூனியர் பிரிவில் இடம்பிடித்த நிஷாவுக்கு, அந்த ஆண்டு மறக்க முடியாததாக அமைந்தது. தேசிய சப்-ஜூனியர் பிரிவில் அனைத்க வகையான ஃபிரீஸ்டைல் நீச்சல் போட்டிகளிலும் தங்கப் பதக்கங்களை அள்ளினார்.

அதே ஆண்டில் ஹாங்காங்கில் நடந்த வயதுவாரியான ஆசிய நீச்சல் சாம்பியன்ஷிப் போட்டியில் நிஷா தங்கப் பதக்கம் வென்று முத்திரை பதித்தார். அவர் பெற்ற முதல் சர்வதேசப் பதக்கமும் இதுதான். இந்தத் தொடர் வெற்றி, அவரைத் தேசிய அளவில் பிரபலமாக்கியது. தேசிய அணியிலும் அவரது இடத்தை உறுதிசெய்தது. ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்பதற்கான பயிற்சியிலும் நிஷாவுக்கு இடம் கிடைத்தது.

முத்திரை பதித்த ஆண்டு

1996-ல் அட்லாண்டா ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்பதற்கான முயற்சியில் நிஷா தீவிரம் காட்டிவந்தார். அப்போது அவருக்கு 16 வயதுதான். ஆனாலும், ஒலிம்பிக்கில் பங்கேற்கத் தீவிர ஆர்வம் காட்டினார். தீவிரமாக முயன்றும் ஒலிம்பிக் தகுதிச் சுற்றில் பங்கேற்க நிஷாவுக்கு வாய்ப்புக் கிடைக்கவில்லை. ஆனாலும், அவர் சோர்வடையவில்லை. அடுத்த ஒலிம்பிக்கில் பங்கேற்பதை இலக்காகக் கொண்டு போட்டிகளில் பங்கேற்கத் தொடங்கினார்.

aadum 2jpg

1999-ல் தேசிய அளவில் 14 தங்கப் பதக்கங்களை வென்று அசத்தினார். இந்தியத் தடகள வரலாற்றில் ஒரே ஆண்டில் இத்தனை தங்கப் பதக்கங்களைப் பெற்ற ஒரே பெண் என்ற சாதனைக்கும் சொந்தக்காரரானார். 1998-ல் பாங்காங்கில் நடந்த ஆசியப் போட்டி, 1999-ல் பெர்த் நகரில் நடைபெற்ற உலக நீச்சல் சாம்பியன்ஷிப் போட்டி ஆகியவற்றில் பதக்கம் வெல்லாவிட்டாலும் சர்வதேச அனுபவத்தை வளர்த்துக்கொண்டார்.

ஒலிம்பிக் லட்சியம்

சர்வதேசப் போட்டி அனுபவத்தோடு ஒலிம்பிக்கில் பங்கேற்க வேண்டும் என்ற லட்சியத்தை அடைவதற்கான முயற்சியிலும் நிஷா ஈடுபாடு காட்டினார். இதற்காக நாள் பாராமல், நேரம் பாராமல் நீச்சல் குளமே கதி எனக் கிடந்தார். புத்தாயிரம் ஆண்டுக்கு முன்பாக எப்போதும் பயிற்சி, கடுமையான உழைப்பு, அதற்கேற்ற திட்டமிடல் என்றே அவரது அன்றாட நிகழ்வுகள் இருந்தன. ஒலிம்பிக் தகுதிச் சுற்று நடைபெறுவதற்கு முன்பு சுமார் ஐந்து மாதங்களுக்கு கடுமையான நீச்சல் பயிற்சியில் ஈடுபட்டார். தீவிரமான முயற்சிக்குப் பலன் கிடைத்தது.

தகுதிச் சுற்றில் வெற்றிக்கொடியைப் பறக்கவிட்டு சிட்னி ஒலிம்பிக்கில் பங்கேற்பதற்கான வாய்ப்பைப் பெற்றார் நிஷா. ஒலிம்பிக்கில் 200 மீ. ஃபிரீஸ்டைல் பிரிவில் பங்கேற்றார். ஒலிம்பிக்கில் நீச்சல் போட்டியில் பங்கேற்கும் முதல் இந்தியப் பெண் என்ற சிறப்பையும் பெற்றார். ஒலிம்பிக்கில் அரையிறுதி சுற்றுக்கு முன்னேறும் வாய்ப்பை நிஷா இழந்தாலும், ஒலிம்பிக்கில் பங்கேற்க வேண்டும் என்ற அவரது கனவு நனவானதை எண்ணி தேசமே பெருமையடைந்தது.

2004 ஏதென்ஸ் ஒலிம்பிக்கில் பதக்கம் வெல்ல வேண்டும் என்ற கனவுடன் மீண்டும் தனது முயற்சியைத் தொடர்ந்தார் நிஷா. 2003-ல் ஆப்ரோ-ஏசியன் சாம்பியன்ஷிப் போட்டியில் பேக்ஸ்ட்ரோக் பிரிவில் வெள்ளிப் பதக்கம் வென்று தன்னால் சாதிக்க முடியும் என்று தேசத்துக்கு நிரூபித்துக்காட்டினார். ஆனால், முதுகு வலிக்கு அவர் செய்துகொண்ட அறுவைச் சிகிச்சையும் வீட்டுப் பொருளாதாரமும் அவரது கனவை ஒட்டுமொத்தமாகச் சிதைத்தன.

ஒலிம்பிக்கில் தகுதிச் சுற்றில் பங்கேற்க முடியாமல் போனதால், அந்த விரக்தியில் தொழிற்முறை நீச்சல் போட்டியில் பங்கேற்பதிலிருந்து ஓய்வு பெற்றார். ஆனால், மற்ற நீச்சல் போட்டிகளில் பங்கேற்றார்.

சாதனை ராணி

2015 வரை நீடித்த நீச்சல் பயணத்தில் குறிப்பிடத்தக்க சாதனைகளையும் நிஷா படைத்திருக்கிறார். குறிப்பாக, தேசிய அளவில் 200 மீ. 400 மீ. ஃபிரீஸ்டைல் பிரிவுகளில் தனது திறமையை வெளிப்படுத்தி சிறந்த நீச்சல் வீராங்கனை என்ற பெயரை எடுத்திருக்கிறார். ஃபிரீஸ்டைல் பிரிவில் 100 மீ. தூரத்தை ஒரே நிமிடத்தில் நீந்திய ஒரே இந்தியப் பெண் என்ற சாதனைக்கும் இவரே சொந்தக்காரர்.

நீச்சலில் இவரது திறமையைப் பாராட்டி 1997, 1999-ம் ஆண்டுகளில் சிறந்த விளையாட்டு வீராங்கனை என்ற பிரதம மந்திரி விருதை மத்திய அரசிடமிருந்து பெற்றார். 2000-ல் அர்ஜூனா விருதையும் பெற்றார். தற்போது 36 வயதாகும் நிஷா மில்லட், கர்நாடகத்தில் நீச்சல் பயிற்சி மையங்களை அமைத்து பெண்கள், குழந்தைகளுக்கு நீச்சல் பயிற்சி அளித்துவருகிறார்.

(வருவார்கள் வெல்வார்கள்)
கட்டுரையாளரைத் தொடர்புகொள்ள: karthikeyan.di@thehindutamil.co.in

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x