Last Updated : 04 Aug, 2018 06:33 PM

 

Published : 04 Aug 2018 06:33 PM
Last Updated : 04 Aug 2018 06:33 PM

பெண்கள் 360: துன்பியல் காவிய நாயகி

துன்பியல் காவிய நாயகி

நான்கு வயதிலேயே நடிக்கத் தொடங்கிவிட்ட மீனாகுமாரிக்கு நடிகை, பாடகி, கவிஞர் எனப் பன்முகங்கள் உண்டு. வருங்கால கணவருடனான காதல் உரையாடல்களால் களவாடப்பட்ட தூக்கம், திருமணத்துக்குப் பின் நோயாக மாறியது. அந்த நோய்க்கு மருந்தாகச் சிறிதளவு மது கொடுக்கப்பட, அதுவே அவரது உயிரைப் பறித்தது. அப்போது அவருக்கு 38 வயது.

2jpg

அவரது நடிப்பில் 1972-ல் வெளிவந்த  ‘பாகீஷா’ இந்தித் திரைப்படத்தின் வெற்றியைக் காண அவர் உயிருடன் இல்லை. ‘துன்பியல் காவியங்களின் அரசி’ என அழைக்கப்பட்ட அவரது வாழ்வும் துன்பியலாகவே முடிந்துபோனது பெரும் சோகமே. அவரது 85-வது பிறந்தநாளைக்  கொண்டாடும் விதமாகக் கடந்த புதன் அன்று சிறப்பு டூடுலை கூகுள் வெளியிட்டது.
 

பெண்கள் ஆளும் மெட்ரோ

சென்னை ஷெனாய் நகர் மெட்ரோ ரயில் நிலையமும் கோயம்பேடு மெட்ரோ ரயில் நிலையமும் முழுக்க முழுக்கப் பெண்களின் கட்டுப்பாட்டில் வந்துள்ளன. பயணச்சீட்டு, பயணிகளைக் கையாளுதல் உள்ளிட்ட அனைத்துப் பணிகளையும் அங்கே பெண்களே இனி மேற்கொள்கிறார்கள். அங்குள்ள சுகாதாரப் பணிகளையும் பெண் ஊழியர்களே மேற்கொள்வார்கள் என மெட்ரோ நிர்வாகம் கூறியுள்ளது.

மெட்ரோவை நிர்வகிப்பதில் பெண்கள் ஆண்களைவிடச் சிறந்தவர்களாக இருக்கிறார்கள் என மெட்ரோ  நிர்வாகம் தெரிவித்துள்ளது.  சென்னையின் அனைத்து மெட்ரோ ரயில் நிலையங்களும் பெண்களின் கட்டுப்பாட்டில் வரும் நாள் வெகுதொலைவில் இல்லை. பெண்களின் திறமைக்கும் பொறுமைக்கும் கிடைத்த அங்கீகாரம் என இதைச் சொல்லலாம்.

தண்ணீர் தண்ணீர்

உசிலம்பட்டி நகராட்சிக்கு உட்பட்ட கீழப்புதூர் பகுதியில் கடந்த சில நாட்களாக முற்றிலும் குடிநீர் வழங்கப்படவில்லை. இதனால் கடும் அவதிக்குள்ளான மக்கள், அது குறித்துப் பல முறை சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் மனு கொடுத்தனர். எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படாமல் அவை கிடப்பில் போடப்பட்டன. துணை முதல்வரின் ஊருக்கு அருகில் இருந்தும், பல்வேறு இன்னல்களுக்கு அவர்கள் ஆளாகிவருகின்றனர். தங்களின் அன்றாடத் தேவைக்கான தண்ணீரைச் சேகரிப்பதற்கு அவர்கள் தொலைதூரப் பகுதிகளுக்குச் செல்ல வேண்டியிருக்கிறது.

இதனால் ஆத்திரமடைந்த அந்தப் பகுதி பெண்கள் காலிக்குடங்களுடன்  மதுரை–தேனி சாலையில் சாலை மறியலில் ஈடுபட்டனர். அதே நாளில், கோவில்பட்டி மந்தித்தோப்பு பகுதியைச் சேர்ந்த பெண்கள் காலிக்குடங்களுடன் கோவில்பட்டி யூனியன் அலுவலகத்தை முற்றுகையிட்டனர். அங்கே கடந்த 20 நாட்களாகத் தண்ணீர் விநியோகிக்கப்படவில்லையாம். இதுபோன்ற பிரச்சினைகள் அடிப்படை வசதி சார்ந்த பிரச்சினைகளாக மட்டுமே பார்க்கப்படுகின்றன. இவற்றால் அதிகம் பாதிக்கப்படுவது பெண்கள்தாம்.

சிறை சென்று மீண்ட சிறுமி

பாலஸ்தீனத்தைச் சேர்ந்த தாமிமிக்கு 17 வயது. தன் வீட்டுக்குள் அத்துமீறி நுழைந்த இஸ்ரேல் ராணுவ வீரரின் கன்னத்தில் அறைந்ததற்காக எட்டு மாத சிறைத் தண்டனை அவருக்கு விதிக்கப்பட்டது. கடந்த வாரம் அவர் விடுதலை செய்யப்பட்டார். சிறையின் கசப்பான அனுபவங்களைத் தன்னால் விவரிக்க இயலாது என்று தாமிமி சொல்கிறார். சிறையில் சர்வதேசச் சட்டங்களைப் படித்துள்ளார்.

3jpgright

சர்வதேச நீதிமன்றத்தில் தன் நாட்டுக்காக வாதாடுவதே தனது லட்சியம் என்று இந்தச் சிறுமி சொல்கிறார். “பாதிக்கப் பட்டவளாக என்னைப் பார்க்காதீர்கள். நான் ஒரு சுதந்திரப் போராளி” என்று சொல்கிறார்.  “இன்னொரு வாழ்க்கை இருக்குமானால், அதில் கால்பந்து விளையாடுவேன்” என்று சொல்லும்போது மட்டும் அவருக்குள் ஒளிந்திருக்கும் குழந்தைத்தனம் எட்டிப்பார்க்கிறது.


தாய்க்கு மகள் கொடுத்த பரிசு

கடந்த செவ்வாய்க்கிழமை அன்று பெங்களூருவிலிருந்து மும்பைக்கு ஏர்-இந்தியா விமானத்தில் பயணித்தவர்களால் அந்தப் பயணத்தை எளிதில் மறக்க முடியாது. தரை இறங்கும் முன்பு, விமான கேப்டனின் அறிவிப்பு தொடங்கியது. வழக்கமான ஒன்றுதானே எனச் சலிப்புடன் பயணிகள் கேட்கத் தொடங்கினர்.

“இந்த விமானத்தின் மூத்த பணிப் பெண்ணான பூஜா, தனது 38 வருட சேவைக்குப் பிறகு இன்று தரை இறங்குகிறார். அவரது சேவையை இந்த விமானத்தில் எனது துணை பைலட்டாக இருக்கும் அவருடைய மகள் அஷ்ரிதா இனி தொடர்வார்” என கேப்டன் அறிவித்தார்.

பயணிகள் கைதட்டிப் பாராட்டினர். இருக்கைகள் நேராக இருக்கின்றனவா, ஜன்னல் கதவுகள் திறக்கப்பட்டு உள்ளனவா என்பது போன்றவற்றைச் சரிபார்த்துக்கொண்டிருந்த பூஜா, நாணத்தில் முகம் சிவந்தபடி தன் இருக்கைக்கு விரைந்தார்.

அவர் இருக்கையை அடையும்போது ‘காக்பிட்’டிலிருந்து வெளிவந்த அவருடைய மகள் கட்டியணைத்தது பயணிகளை நெகிழ்ச்சியடையச் செய்தது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x