Published : 26 Aug 2018 09:45 AM
Last Updated : 26 Aug 2018 09:45 AM
பிரம்மாண்டமாகப் படமெடுக்கும் இயக்குநர்கள் முதல் ‘இருட்டு அறையில்’ குறைந்த பட்ஜெட்டில் படமெடுக்கும் இயக்குநர்கள்வரை தமிழ்த் திரைப்படங்களில் மாற்றுப் பாலினத்தவரைக் கேலி, கிண்டல் செய்யும் காட்சிகளைப் பலரும் காட்டியிருக்கின்றனர்.
அதேநேரம் சில இயக்குநர்கள் மாற்றுப் பாலினத்தவரை மிகவும் மரியாதைக்கு உரியவர்களாகவும் தங்களின் உரிமைகளுக்காகப் போராடுபவர்களாகவும் தனித்தன்மை மிக்கவர்களாகவும் காட்சிப்படுத்தியிருக்கின்றனர்.
இந்த அடிப்படையில் சந்தோஷ் சிவன் 2005-ல் எடுத்த `நவரசா’ திருநங்கைகளின் உள்ளப் போராட்டத்தைப் பதிவுசெய்த முதல் படம் எனலாம். சிங்கப்பூர், கொரியா, தைவான், பிரேசில், பிரான்ஸ் என உலகம் முழுவதும் நடந்த பல சர்வதேசத் திரைப்பட விழாக்களில் திரையிடப்பட்டது.
‘மொனாகோ சர்வதேசத் திரைப்பட விழா’வில் சிறந்த துணை நடிகருக்கான விருதை இதில் நடித்த பாப் டார்லிங்குக்கும் ஏஞ்சல் இண்டிபென்டன்ட் ஸ்பிரிட் விருதைப் படத்தின் இயக்குநர் சந்தோஷ் சிவனுக்கும் பெற்றுத் தந்தது. 2005-ம் ஆண்டுக்கான சிறந்த பிராந்தியப் படமாகத் தேர்ந்தெடுக்கப்பட்டு வெள்ளித் தாமரை விருதையும் பெற்றது.
திருநங்கைகள் குறித்த புரிதலைச் சமூகத்தில் விதைக்கும் வகையில் 2011-ல் விஜயபத்மா இயக்கத்தில் வெளிவந்தது ‘நர்த்தகி’. ஒரு திருநங்கையின் வாழ்வில் நடக்கும் சம்பவங்களை அடியொட்டி எடுக்கப்பட்ட இந்தத் திரைப்படத்தில் இந்தியாவிலேயே முதன் முதலாக திருநங்கை கல்கி சுப்பிரமணியம் நடித்து அந்தப் பாத்திரத்துக்கு நியாயம்சேர்த்தார். ஆண், பெண்ணுக்கிடையேயான காதலைப் பேசிய படங்களுள் ஓர் ஆணுக்கும் திருநங்கைக்கும் இடையேயான காதலை அந்தப் படம் பேசியது.
சமூகத்தில் மாற்றுப் பாலினத்தவர் குறித்த புரிதல் அதிகரிக்க அதிகரிக்க, திருநங்கைகளை நல்ல விதமாகத் திரையில் காட்ட வேண்டும் என்னும் பொறுப்போடு பலரும் திரைப்படங்களை எடுத்தனர். மிஷ்கின், சீனு ராமசாமி போன்ற இயக்குநர்கள் திருநங்கைகளை மதிப்பாகத் திரையில் காட்டினர்.
புரட்டிப்போட்ட விபத்து
ராகவா லாரன்ஸ் எடுத்த `காஞ்சனா’ பட்டிதொட்டி எங்கும் திருநங்கைகள் குறித்த நல்ல அபிப்ராயத்தை ஏற்படுத்தியது. சரத்குமார் அந்தப் படத்தில் திருநங்கையாக ஏற்றிருந்த வேடமும் அர்ப்பணிப்பான அந்தப் பாத்திரப் படைப்பும் பெரிதும் பேசப்பட்டன. அதே படத்தில் அவரின் வளர்ப்பு மகளாக நடித்தவர் திருநங்கை ப்ரியா காஞ்சனா.
அதிகமான வசனங்களோ காட்சிகளோ அந்தப் படத்தில் அவருக்கு இல்லாவிட்டாலும், போராடி மருத்துவராகும் அவரது பாத்திரம் நிறையப் பேரின் மனதிலும் அழுத்தமாகப் பதிந்தது. அடுத்தடுத்து அவரைத் திரையில் பார்க்கலாம் என்று எதிர்பார்த்திருந்த நிலையில், அதன் பின் அவர் காணாமல் போய்விட்டார். சூழ்நிலைகளால் வாழ்க்கையில் ஏற்படும் ஏற்றத் தாழ்வுகள் ஏற்கெனவே பாதிக்கப்பட்டிருக்கும் திருநங்கைகளின் வாழ்க்கையிலும் பிரதிபலிக்கத்தான் செய்கிறது.
“அந்தப் படத்தில் நடித்து முடித்ததும், படம் வெளியாவதற்கு முன்பாகவே எனக்கு ஒரு விபத்து நடந்தது. ஏறக்குறைய 2 ஆண்டுகள் படுத்த படுக்கையாக இருந்தேன். அதன் பின் புனேவுக்குச் சென்று எங்கள் குடும்பத்தில் பெரியவருக்கு உதவியாக இருந்தேன். மூன்று மாதங்களுக்கு முன்பாகத்தான் சென்னைக்கு வந்தேன். மீண்டும் திரைப்படங்களில் நடிப்பதற்குப் பலரிடமும் வாய்ப்பு கேட்டு வருகிறேன்” என்கிறார் ப்ரியா காஞ்சனா.
`பேரன்பு’ கொடுத்த திருப்பம்
மலையாள விளம்பர மாடலான அஞ்சலி அமீர், தமிழ், மலையாளம் என இரண்டு மொழிகளில் இயக்குநர் ராம் எடுத்த `பேரன்பு’ திரைப்படத்தில் மம்மூட்டிக்கு ஜோடியாகவும் நடித்திருக்கிறார். ஒரு திருநங்கையை, திருநங்கை பாத்திரமாகவே காட்டிக்கொண்டிருந்த திரையுலகத்தில், ஒரு திருநங்கையைப் பெண்ணாக, ஒரு பிரபல நடிகருக்கு இணையராக காட்சிப்படுத்தியிருப்பது ஒரு முக்கிய நகர்வாகப் பார்க்கப்படுகிறது. இது அவருடைய திரை வாழ்க்கையில் எத்தகைய விளைவுகளை ஏற்படுத்தியிருக்கும்?
“மாடலிங் உலகிலும் சில படங்களிலும் இதற்கு முன் நடித்திருந்தாலும் ‘பேரன்பு’ படத்தில் நடித்தது ஒரு முக்கியமான திருப்பம்தான். அதற்குப் பிறகு, பத்தாவது படிக்கும் சிறுமியிலிருந்து 35 வயது வரையிலான ஒரு பெண்ணாக ஒரு தெலுங்குப் படத்தில் நடிக்கிறேன். `ஸ்வர்ண புருஷன்’ படத்தில் திருநங்கையாகவே நடித்திருக்கிறேன். இன்னொரு படத்தில் ஆறு வயது குழந்தைக்குத் தாயாக நடிக்கிறேன்” என்றார் அஞ்சலி அமீர்.
பெண்ணாக இருப்பது சுலபமல்ல
ஆறடி ஒரு அங்குலம் உயரம். முறையான உடற்பயிற்சியின் மூலம் கட்டுக்கோப்பான உடல் வாகு. 2006-ல் நடந்த மெகா மாடல் போட்டியில் இரண்டாவதாகத் தேர்வானார். இந்தத் தகுதிகளுடன் கூடிய கௌரவ் அரோராவை மிகச் சிறந்த ஆண் மாடலாகக் கொண்டாடியது விளம்பர உலகம்.
முன்னணி ஃபேஷன் டிசைனர்களின் விருப்பத் தேர்வாகக் கொடிகட்டிப் பறந்தார் கௌரவ். 2016-ல் ‘லவ் கேம்ஸ்’, ‘ராஸ்: ரீபூட்’ போன்ற இந்திப் படங்களிலும் நாயகனாக நடித்தார். இந்தப் புகழோடு `ஸ்பிளிட்ஸ்வில்லா’ ரியாலிட்டி ஷோவில் பங்கெடுத்தார். அங்கு உடன் பங்கு பெற்ற தொலைக்காட்சி நடிகருடன் அவருக்கு நெருக்கம் ஏற்படுகிறது.
“சிறுவயதிலிருந்தே எனக்குள்ளிருக்கும் பெண்மையை உணர்ந்து வந்த எனக்கு, முதன் முதலாக அந்த நடிகருடனான அன்புதான் என்னைப் பெண்ணாக வெளிப்படுத்திக் கொள்வதற்குக் காரணமாக அமைந்தது. ஆனால், இந்த மாற்றத்தை அவர் விரும்பாததோடு, கேலி, கிண்டல் செய்யவும் தொடங்கிவிட்டதால், அந்த ஷோவிலிருந்து விலகிவிட்டேன். இப்போது நான் கௌரி அரோரா. பால் மாற்றத்துக்கான மருத்துவ சிகிச்சைகளைத் தொடங்கிவிட்டேன். குடும்பம், சமூகம் எதுவும் என்னுடைய இந்த மாற்றத்தை விரும்பவில்லை. ஆனால், எனக்குப் பிடித்திருக்கிறது. அதேநேரத்தில் பெண்ணாக இருப்பது அவ்வளவு ஒன்றும் சுலபமில்லை” என்று ஊடகங்களில் தன்னுடைய முடிவைப் பற்றிப் பேசியிருக்கிறார் கௌரி அரோரா.
கடந்த வாரம் சென்னை எழும்பூர் மியூசியம் அரங்கத்தில் ‘தி இந்து’ தியேட்டர் ஃபெஸ்டில் மும்பையைச் சேர்ந்த குழுவினரின் `ஒன் நைட் ஒன்லி’ நாடகம் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றது. மகாபாரதப் போரில் பாண்டவர்களுக்கு வெற்றி கிடைப்பதற்கு அரச குடும்பத்தைச் சேர்ந்த 32 பரிபூரண திறன்களுடன் கூடிய ஒருவரை காளிக்குப் பலி கொடுக்க வேண்டும் என்ற நிலை ஏற்படுகிறது. அர்ஜுனனின் மகன் அரவானைப் பலி கொடுப்பதற்கு அவனுடைய சம்மதத்தைப் பெறுகின்றனர். ஆனால், அதற்கு அரவான் வைக்கும் கோரிக்கை, பலி பீடத்துக்குச் செல்வதற்கு ஒரு நாள் முன்பு, ஒரு பெண்ணுடன் திருமணம் செய்துகொண்டு வாழ வேண்டும். ஒரே நாளில் கணவன் இறப்பான் என்று தெரிந்து, எந்தப் பெண் திருமணத்துக்குச் சம்மதிப்பாள்? கிருஷ்ணனே மோகினியாக அவதாரம் எடுத்து அரவானைத் திருமணம் செய்துகொள்கிறார். இந்த நாடகக் குழுவின் இயக்குநர் அமி மேத்தாவிடம் பேசிய போதுதான் தெரிந்தது, திருநங்கை ஒருவரும் அந்தக் குழுவில் இல்லை என்பதும் ஆண்களும் பெண்களுமே திருநங்கைகளாகத் தோன்றினர் என்றும். “ஆனால், அவர்களின் உதவியோடுதான் பயிற்சிகளைச் செய்தோம்” என்றார்.கௌரி அரோராவாக மாறிய கௌரவ் அரோராப்ரியா காஞ்சனாஅஞ்சலி அமீர் |
(புரிந்துகொள்ள முயல்வோம்)
கட்டுரையாளரைத் தொடர்புகொள்ள: ravikumar.cv@thehindutamil.co.in
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT