Last Updated : 04 Aug, 2018 06:31 PM

 

Published : 04 Aug 2018 06:31 PM
Last Updated : 04 Aug 2018 06:31 PM

வண்ணங்கள் ஏழு 16: மங்கலான தாஜ்மகால்!

நன்கு படித்து, நல்ல வேலையில் இருக்கும் சிவந்த நிறமுள்ள ஒல்லியான உடல்வாகு கொண்ட பெண் தேவை என்பது போன்ற விளம்பரங்களுக்கு நடுவில் மும்பையைச் சேர்ந்த பத்மா தன் மகனுக்காகக் கொடுத்திருந்த விளம்பரம் பலரது ரத்த அழுத்தத்தை அதிகரித்தது.

2015-ல் வெளிவந்த அந்த விளம்பரம் இதுதான்:

“தன்னார்வத் தொண்டு நிறுவனத்தில் பணிபுரியும் என் மகன் ஹரீஷ் அய்யருக்கு 25 முதல் 40 வயதுள்ள,  நல்ல வருமானம் ஈட்டக் கூடிய, விலங்குகள் மீது அன்பு செலுத்தும் சைவ உணவுப் பழக்கம் கொண்ட மணமகன் தேவை. ஜாதி தடையில்லை (அய்யருக்கு முன்னுரிமை)” தன்பாலின உறவாளரான மணமகனுக்கு அதே இன மணமகன் தேவை என்று அவருடைய தாயே விளம்பரம் செய்திருந்ததைப் பாராட்டியும் விமர்சித்தும் நிறைய விவாதங்கள் அப்போது நடந்தன.

விமர்சனங்களுக்காக பத்மா பெரிதாக அலட்டிக்கொள்ளவில்லை. “தன்பாலின உறவில் நாட்டமுள்ள மகனைப் பெற்றவள் என்ற வகையில்தான் விளம்பரம் கொடுத்தேன். மற்ற பெற்றோருக்குத் தங்களுடைய மகன் மீது எத்தகைய கவலை இருக்குமோ  எனக்கும் அதே கவலைதான். எனக்கும் வயதாகிக்கொண்டிருக்கிறது. என் வாழ்க்கை முடிவதற்குள் மகனுக்குத் திருமணம் செய்துவைக்க ஆசைப்படுகிறேன். இதில் என்ன தவறு? ” எனக் கேட்டார்.

இந்தத் தாய்க்கு இருக்கும் புரிதலின் பலம் நம் நாட்டில் இருக்கும் எல்லோருக்கும் இருந்தால்,  எவ்வளவு நன்றாக இருக்கும்! இந்த ஏக்கத்தோடே தன்பால் ஈர்ப்புள்ள யுவராஜ், தன் காதல் வாழ்க்கையைப் பற்றியும் மாற்றுப் பாலினச் சமூகத்துக்காகச் செய்துவரும் பணிகளைப் பற்றியும் பகிர்ந்துகொள்கிறார்.

புரியவைத்த அறிவியல்

“விதவிதமான உயிரினங்கள் அமைதியாக வாழ்ந்துகொண்டிருக்கும் இந்த உலகத்தில் நானும் ஓர் ஓரத்தில் வாழ்ந்துவிட்டுப் போகத்தான் ஆசை. என் 25 வருட வாழ்க்கையில் நான் யார் என்பதை அறிந்துகொள்வதற்கே சரிபாதி ஆண்டுகளைச் செலவழித்துவிட்டேன். அதுவும் ஆன்மிக வழியில் அல்ல, அறிவியல் வழியில்” என்று சொல்லும் யுவராஜ், தான் தன்பால் ஈர்ப்பாளர் என்பதைப் பெருமிதத்துடன் அறிவிக்கிறார். சைக்கோ தெரபி, சைக்கியாட்ரிஸ்ட்களுடன் பல கட்ட ஆலோசனைகள் என்று முட்டி மோதி, தான் நிச்சயமாகத் தன்பால் ஈர்ப்புள்ளவன் என்பதை அவர் புரிந்துகொண்டார்.

பதின் பருவத்தில் இருந்தபோது அம்மாவை இழந்துவிட்டார். அந்த சோகம் அவரை முழுமையாக ஆட்கொண்டது. “அவங்க என் மீது காட்டிய அன்பை, நானும் சாதி, மதம், இனம், மொழி, நிறம், பாலினம் கடந்து எல்லோர் மீதும் காட்டத் தொடங்கினேன். பிளஸ் டூ படித்த போதே என் ஈர்ப்பு ஆணின் மீதுதான் என்னும் புரிதல் தொடங்கியது. குழப்பத்துக்கான விடையை இணைய உலகம் கொடுத்தது” என்கிறார் யுவராஜ்.

யுனெஸ்கோ ஆய்வு

தன்னைப் போன்றவர்களை ஒருங்கிணைக் கும் சமூக வலைத்தளங்கள், தன்னார்வ அமைப்புகளில் தொடர்ந்து ஈடுபட்டதன் மூலம் யுவராஜின் நட்பு வட்டம் விரிந்தது. ‘சென்னை தோஸ்த்’ தன்னார்வ அமைப்பின் சார்பாக நடந்த ‘சென்னை ரெயின்போ ஃபிலிம் ஃபெஸ்டிவ’லை இணை இயக்குநராக இருந்து நடத்தினார். இந்த அமைப்பின் மூலமாகப் பல பள்ளி, கல்லூரி மாணவர்களுடன் கலந்துரையாடும் வாய்ப்பும் அவருக்குக் கிடைத்தது.

அந்த அமைப்பிலிருந்து விலகியபின் தனிப்பட்ட முறையில் தன்னை அணுகுபவர்களின் சந்தேகங்களைத் தீர்த்துவருகிறார். கடந்த ஆண்டு யுனெஸ்கோ அமைப்புக்காக சென்னை, அதைச் சுற்றியுள்ள புறநகர் பகுதிகளில் இருக்கும் பள்ளிகளில்  என்னென்ன காரணங்களுக்காக மாணவர்கள் படிப்பைப் பாதியில் கைவிடுகிறார்கள் என்ற ஆய்வில் இவர் ஈடுபட்டார்.

“இடைநிற்றல் பிரச்சினைக்கு  மற்ற காரணங்களோடு மாணவர்களின் பாலின அடையாளம் குறித்து சக மாணவர்களின் கேலி, கிண்டல், சீண்டல் போன்றவையும் காரணமாக இருப்பதை அறிந்தோம். நல்ல தொடுதல், தவறான தொடுதல் எதுவென்று குழந்தைகளுக்குச் சொல்லித் தருவதோடு, பாலின மாற்றம் தொடர்பான புரிதலையும் மாணவர்களிடையே கொண்டுவர வேண்டும்.

பாலின அடையாளம் குறித்த புரிதலைப் பள்ளிக் குழந்தைகளிடம் விதைத்தால், அவர்கள் பெரியவர்களாகும்போது தெளிவாக இருப்பார்கள்” என்கிறார் யுவராஜ். இப்படிச் செய்வதால் பாலின அடையாளங்களோடு வெளிப்படுபவர்களைப் புரிந்துகொள்ளும் சமூகம் இயல்பாக மலரும் என்பது யுவராஜின் சிந்தனையாக இருக்கிறது.

மங்கலாகத் தெரிந்த தாஜ்மகால்

யுவராஜையும் காதல் கடந்து போயிருக்கிறது. லண்டனிலிருந்து உறவினர்களைப் பார்க்க வந்திருந்த ஒருவருடன் இவருக்குக் காதல் அரும்பியது. அவரைத் தன் வீட்டில் இருப்பவர்களுக்கு அறிமுகம் செய்து வைத்தார். மாமல்லபுரம், புதுச்சேரி என்று இவர்கள் இருவரும் சுற்றாத இடங்களே இல்லை.

“இரண்டு வாரங்கள் போனதே தெரியவில்லை. என் பிறந்த நாளுக்கு முன்னதாக டெல்லிக்கு விமானத்தில் அழைத்துச் சென்றான். அங்கிருந்து ஆக்ராவுக்குப் போய் அவனுடைய கையைப் பிடித்தபடி தாஜ்மகால் முன் நின்றபோது காதலாகிக் கசிந்துருகி கண்ணீர் மல்கியதில் தாஜ்மகால் மங்கலாகத் தெரிந்தது.

தன்னுடன் லண்டனுக்கு வந்துவிடும்படி சொன்னான். சூழ்நிலை சரியில்லாததால் என்னால் போக முடியாத நிலை. இப்போது அவனுடைய பார்ட்னரோடு இருக்கிறான். அவனுக்கென்று ஒரு குடும்பம் இருக்கிறது. ஸ்கைபில் அவ்வப்போது பேசிக்கொள்வதோடு சரி” என்று புன்னகைக்கிறார் யுவராஜ்.

மரபின் தொடர்ச்சி

தங்களைப் போன்ற தன்பால் ஈர்ப்பாளர் களைச் சிலர் மேலை நாட்டினரின் வார்ப்பாகப் பார்ப்பதையும் தாங்கள் முறையற்ற வாழ்க்கை வாழ்வதாக நினைப்பதையும் வேதனையோடு யுவராஜ் குறிப்பிடுகிறார். “நானும் ஆசாரமான குடும்பத்தைச் சேர்ந்தவன்தான். வேதம் படித்திருக்கிறேன். தர்ம சாஸ்திரங்களிலும் நம் புராணங்களிலுமே மாற்றுப் பாலினத்தவர் பற்றிய குறிப்புகள் இருக்கின்றன. வால்மீகி ராமாயணத்தில் வான் மார்க்கமாக அனுமன் பறந்துசெல்லும்போது, இரண்டு பெண்கள் முத்தமிட்டுக் கொண்டிருக்கும் காட்சி வருகிறது.

மகாபாரதத்தில் சிகண்டி பாத்திரப் படைப்பு அப்படியானதுதான். காமசூத்திரத்தில் வரும் அபராஷ்டிகா எனும் வார்த்தை ஒரே பாலினத்தவரின் உறவு நிலையைக் குறிப்பிடுகிறது. ரிக் வேதத்தில் தன்பால் உறவு குறித்த, ‘விக்ருதி ஹேவம் பிக்ருதி’ எனும் வார்த்தைகளின் விளக்கம், இயற்கைக்கு மாறானவை எனக் குறிப்பிடப்படுபவையும் இயற்கையானவைதான். கி.மு. 600-ல் எழுதப்பட்ட மருத்துவ நூலான ‘சுஸ்ருத ஸம்ஹிதா’வில் மாற்றுப் பாலினத்தவர் பற்றிய குறிப்புகள் உள்ளன.

 ‘நீ யூதனும் இல்லை. கிரேக்கனும் இல்லை. நீ அடிமையும் இல்லை. சுதந்திரமானவனும் இல்லை. நீ ஆணும் இல்லை. பெண்ணும் இல்லை. நீங்கள் எப்படியிருந்தாலும் இயேசுவின் முன்பாக எல்லோரும் ஒன்றே’ என்று பைபிள் சொல்கிறது. நாங்கள் ஏதோ வேற்றுக் கிரகத்தில் இருந்து குதித்தவர்கள் அல்ல. இந்த மண்ணிலும் எங்களுக்கான மரபின் வேர்கள் இருக்கின்றன. அதன் தொடர்ச்சிதான் நாங்கள்.

மருத்துவ அறிவியலும் தன்பால் ஈர்ப்பு என்பதை ஒரு நோயாகவோ குறையாகவோ பார்க்கக் கூடாது என்கிறது. இந்தப் புரிதலோடு எங்களையும் வாழ விடுங்கள் என்பதுதான் பொதுச் சமூகத்தின்முன் நாங்கள் வைக்கும் வேண்டுகோள்” என்கிறார் யுவராஜ்.

‘இயல்’பான குறும்படம்

‘ரீல் டிசையர்’ஸின் சென்னை சர்வதேச குயர் ஃபிலிம் ஃபெஸ்டிவல் கடந்த வாரம் மூன்று நாட்களுக்கு கதே இன்ஸ்டிடியூட்டில் நடந்தது. 17 நாடுகளிலிருந்து பரிந்துரைக்கப்பட்ட 120 குறும்படங்கள், ஆவணப் படங்கள் ஆகியவற்றிலிருந்து 32 படங்கள் திரையிடப்பட்டன.

vannangal 2jpg100 

இதில் 12 நிமிட குறும்படமான ‘இயல்’ பலரின் கவனத்தை ஈர்த்தது. ‘ரேஜிங் புல் ஆக்டர்ஸ் ஸ்டூடியோ’வின் தயாரிப்பான இந்தப் படத்தை இயக்கியிருப்பவர் அந்த ஸ்டூடியோவிலேயே படித்த சந்தோஷ். எதிர்பாலின ஈர்ப்புள்ள ஒருவருக்கு முதன்முதலாகத் தன்பாலின ஈர்ப்புள்ள வர்களின் உலகம் அறிமுகமாகிறது.

அதை அவர் எதிர்கொள்ளும் விதத்தையும் தன்பாலின ஈர்ப்புள்ளவரின் தன்னம்பிக்கையையும் பொட்டில் அடித்ததுபோல் பேசுகிறது இந்தப் படம்.     

(புரிந்துகொள்ள முயல்வோம்)
கட்டுரையாளரைத் தொடர்புகொள்ள: ravikumar.cv@thehindutamil.co.in

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x