Published : 03 Aug 2014 10:00 AM
Last Updated : 03 Aug 2014 10:00 AM

வன்முறையில் இருந்து குழந்தைகளைக் காப்போம்

பெங்களூரில் ஆறு வயதுக் குழந்தை மீதான பாலியல் வன்முறைச் சம்பவம் அனைவரது நெஞ்சங்களையும் துடிதுடிக்க வைத்துள்ளது. ஆனால் அந்த வன்முறை நடைபெற்றுக் கிட்டதட்ட, ஒரு வாரம் கழித்தே அந்தச் சிறுமியின் பெற்றோருக்குத் தெரிய வந்திருக்கிறது என்பது வேதனையின் உச்சம். அந்தக் குழந்தை படிக்கும் பள்ளியின் ஆசிரியரும்கூட இதைப் பற்றிப் பெற்றோருக்குத் தெரியப்படுத்தாதது மிக அதிர்ச்சியானது.

குழந்தைகள் வீட்டைத் தவிர அதிக நேரத்தைச் செலவழிக்கும் பள்ளிகளில், இது போன்ற சம்பவம் நடப்பதை நினைத்து நாம் அனைவரும் வெட்கித் தலைகுனிய வேண்டும். பள்ளியும் தன் பெயரைக் காப்பற்றிக்கொள்ள இந்தக் குரூரமான சம்பவத்தை அறிந்தும், அறியாததுபோல் இருந்தது பெற்றோர்களின் நம்பிக்கையைக் குலைக்கும் செயல்.

தற்காப்பு அவசியம்

ஒன்றாம் வகுப்பு படிக்கும் 6 வயதுச் சிறுமி தனக்கு நடந்த கொடுமையை உடனே பெற்றோரிடம் சொல்லத் தவறியது அவளின் பள்ளி ஆசிரியர் மற்றும் தாய், தந்தையின் அறியாமையையே காட்டுகிறது. ஒரு குழந்தை பேசத் தொடங்கிய நாள் முதலே, இது போன்ற சம்பவங்களிலிருந்து காத்துகொள்ளும் முறைகளைக் குழந்தைக்குப் புரியும் விதத்தில் எடுத்துரைப்பது பெற்றோரின் முக்கியக் கடமை. பாலியல் உறுப்புகள் பற்றியும் அதைப் பாதுகாக்கும் முறை, பிறரின் அத்துமீறலைத் தடுக்கச் செய்ய வேண்டியவை என்ன என்பதைப் பாடத்துடன் சொல்லித் தர வேண்டியது ஒரு ஆசிரியரின் கடமை.

ஐந்து வயதுக் குழந்தைக்கு எதற்கு பாலியல் சம்பந்தமான போதனை? அது எதிர்மறை விளைவை ஏற்படுத்தும் என்று பலரும் நினைக்கிறார்கள். ஆண், பெண் என யாராக இருந்தாலும் அவர்களின் உடல் அமைப்பு சம்பந்தபட்ட தேவையான விஷயங்களைக் கற்றுத் தருவது காலத்தின் கட்டாயம். அதேபோல் தெரிந்தவரோ, தெரியாதவரோ தவறாக நடந்துகொண்டால் அதைப் பற்றி அச்சமின்றிப் பெற்றோரிடமோ அல்லது நம்பிக்கையான ஆசிரியரிடமோ உடனே சொல்லிவிடும் தைரியத்தை ஏற்படுத்துவது மிக முக்கியம்.

மூட நம்பிக்கைகளும் உண்மைகளும்

இந்தியாவில், குழந்தைகள் மீதான பாலியல் வன்முறை பற்றி இருந்துவரும் சில மூட நம்பிக்கைகள் மற்றும் தவறான முடிவுகள் பற்றிப் பார்ப்போம் :

நம்பிக்கை 1 : குழந்தைகள் மீதான பாலியல் வன்முறை ஓர் அரிய நிகழ்வு.

உண்மை: சுமார் 40% முதல் 50% பேர் குழந்தையாக இருந்தபோது ஏதோ ஒரு விதத்தில் பாலியல் வன்முறைக்கு உட்பட்டதாக ஆய்வுகள் சொல்கின்றன.

நம்பிக்கை 2 : குழந்தைகள் மீதான பாலியல் வன்முறை மேலைநாடுகளில்தான் நிகழும்.

உண்மை: உலகில் குழந்தைகள் மீதான அத்துமீறல் இல்லாத நாடே இல்லை என்று ஆராய்ச்சிகள் மூலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

நம்பிக்கை 3 : இந்தியாவில் குழந்தைகள் மீதான பாலியல் வன்முறை ஏழைகள் வாழும் குடிசைப் பகுதிகளில் மட்டும் நிகழும்.

உண்மை: எல்லா வகைக் குடும்பத்தைச் சேர்ந்தக் குழந்தைகளும் இதில் பாதிக்கப்படுக்கிறார்கள். பெங்களூரில் நடந்த சம்பவம் மேல்தட்டுக் குழந்தைகள் படிக்கும் பள்ளி.

நம்பிக்கை 4 : பாலியல் வன்முறை பெண் குழந்தைகளுக்கு மட்டுமே நிகழும்

உண்மை: 12 வயது வரை பெண், ஆண் இருபாலருமே இதில் பாதிக்கப்படுகிறார்கள். அந்த வயதுக்கு மேலுள்ள பெண்கள் அதிகம் பாதிக்கப்படுகிறார்கள்.

நம்பிக்கை 5: பிரச்சினை உள்ள குடும்பங்களில்தான் குழந்தைகள் பாலியல் வன்முறைக்கு உள்ளாகிறார்கள்.

உண்மை: எல்லா விதமான குடும்பங்களைச் சேர்ந்த குழந்தைகளும் வன்முறைக்கு ஆளாகின்றனர். ஆனால் பிரச்சினையுள்ள குடும்பங்களை விட, மற்றவர்கள் பாதிக்கப்பட்ட குழந்தையை இதிலிருந்து சுலபமாக வெளியே கொண்டுவந்துவிடுகின்றனர்.

நம்பிக்கை 6: குழந்தைகள் மீதான பாலியல் வன்முறையில் ஈடுபடுபவன் ஒரு குற்றவாளி அல்லது அறிமுகமில்லாத நபர்.

உண்மை: இந்தத் தவறை இழைப்பவன் நம்மைப் போலச் சாதாரண மனிதன்தான். பெரும்பாலான சமயத்தில் மனைவி, குழந்தை என்று குடும்பத்துடன் இயல்பான வாழ்க்கை வாழ்பவனே இந்தத் தவறைப் புரிகிறான்.

நம்பிக்கை 7: பாலியல் வன்முறையில் ஈடுபடுகிறவன் குழந்தைக்குப் பரிச்சயமில்லாதவன்.

உண்மை: இது ஆபத்தான நம்பிக்கை. 70% வழக்குகளில் குழந்தைக்கு நேரடியாகப் பரிச்சயமான நபரே இத்தவறைப் புரிகிறார். 20% வழக்குகளில் குடும்ப நண்பர் அல்லது உறவுக்காரரே இதில் ஈடுபடுகிறார் என்பது கசப்பான உண்மை.

நம்பிக்கை 8: குழந்தை மீதான பாலியல் வன்கொடுமையைக் காவல்துறையில் பதிவுசெய்வது அந்தக் குழந்தையின் எதிர்காலத்தைப் பாதிக்கும்

உண்மை: இது பற்றி புகார் அளிக்காவிட்டால் குற்றவாளி அதே தவறை வேறு ஒரு குழந்தையிடம் செய்வதற்கான சாத்தியக்கூறுகள் அதிகம்.

அவசியமான பயிற்சி

ஒரு தாயைவிடச் சிறந்த நபர் குழந்தையின் வாழ்வில் யாரும் இல்லை. நல்லது, கெட்டது என்று பார்த்துப் பார்த்துக் கற்றுக்கொடுக்கும் தாய், தன் குழந்தைக்கு நான்கு வயது முதலே சொல்லித் தர வேண்டிய பாடம் பாலியல் வன்முறையைத் தடுப்பது எப்படி? பாதிக்கப்பட்டால் செய்ய வேண்டிய வழிமுறைகள் என்ன போன்றவைதான். இதே முறையை ஒரு ஆசிரியரும் தன் வகுப்புகளில் குழந்தைகளுக்குப் புரியும் வண்ணம் கற்றுத்தர முடியும்.

பயிற்சி முறை

முதலில் குழந்தையை அருகில் அமரவைத்து, உடல் அங்கங்கள் பற்றி விவரிக்க வேண்டும். முக்கியமாக மார்புப் பகுதி, கால்களுக்கு இடையே உள்ள பகுதி மற்றும் பின் பகுதி என ஒரு பொம்மை அல்லது சார்ட் படத்தைக் காட்டிக் கற்றுத்தர வேண்டும்.

இப்பகுதிகள் ஒருவருக்குச் சொந்தமான முக்கிய உறுப்பு என்றும் அதைத் தொடவோ, அது பற்றி பேசவோ யாருக்கும் உரிமை இல்லை என்றும் புரியவைக்க வேண்டும். குளிக்க வைக்கும்போது அம்மா, அப்பா அல்லது பாட்டி மட்டும் தொட அனுமதிக்கக் கற்றுத்தர வேண்டும்.

வீடு, பள்ளி, விளையாடும் இடம், ஆட்டோ அல்லது வேனில் வரும்போதும் இந்த உடல் பகுதிகளைக் கவனமாகப் பாதுகாக்க வேண்டும் என்பதைப் புரியும் மொழியில் சொல்வது பெற்றோரின் கடமை. அவ்வாறு எவரேனும் அந்தப் பகுதியைத் தொட முயன்றால், வேண்டாம் என உரக்கக் கத்தி அவரைத் தள்ளிவிட்டுவிட்டு அருகில் உள்ள தாய் அல்லது ஆசிரியரிடம் சென்றுவிடுவது நல்லது என்று பயிற்றுவிக்க வேண்டும்.

வேறு எங்காவது இச்சம்பவம் ஏற்பட்டால் வீட்டுக்கு வந்தவுடன் அதைப் பற்றிப் பெற்றோரிடம் உடனே சொல்லிவிட ஊக்கப்படுத்த வேண்டும். இதைப் பற்றிச் சொன்னால் பெற்றோரிடம் திட்டு விழும் என்று நம்பும் பெரும்பாலான குழந்தைகளுக்கு அது உண்மையல்ல என்பதைப் புரியவைப்பது மிக அவசியம்.

பள்ளி அல்லது வெளியிலிருந்து வரும் குழந்தையின் குணத்தில் மாறுபட்ட நடவடிக்கை, சோர்வு அல்லது வேறு மாற்றம் ஏதேனும் தென்பட்டால், பெற்றோர் அதை உடனே கவனித்து, விசாரித்து உண்மையைத் தெரிந்துகொள்ள முயல வேண்டும். தெரிந்த நபர் இக்குற்றத்தைச் செய்யும்போது வெளியில் சொல்லாமல் இருக்க குழந்தையை மிரட்டிவைப்பது சகஜம். அதைப் பற்றியும் தெளிவுபடுத்தி, பயமின்றி அம்மாவிடம் சொல்லும்படி கற்றுத்தர வேண்டும்.

வீட்டுப் பாடத்தைச் சரிவரச் செய்வது முதல் தேர்வுக்குத் தயார்செய்து நல்ல மதிப்பெண் எடுப்பதுவரை பார்த்துப் பார்த்துக் குழந்தைகள் அருகில் இருந்து உதவிடும் பெற்றோர், மேலே குறிப்பிட்ட பயிற்சிகளையும் முக்கியமாகக் கருதிச் செய்ய வேண்டும். மாதம் ஒரு முறையாவது இந்தப் பயிற்சியை அளித்து, இது குறித்த குழந்தைகளின் சந்தேகங்களைத் தீர்த்துவைக்க வேண்டும்.

குழந்தைகளிடம் மனம்விட்டுப் பேசி அவர்களுக்குப் பெற்றோர் மீதுள்ள பய உணர்வை நீக்கி, இது போலக் கசப்பான சம்பவங்களை மறைக்காமல் பகிர்ந்துகொள்ளும் தைரியத்தையும் நம்பிக்கையையும் தர வேண்டும். குழந்தையைப் பாலியல் பலாத்காரத்திலிருந்து காப்பாற்றப் பெற்றோர்கள் எல்லா முயற்சிகளையும் அவ்வப்போது எடுப்பது ஒன்றே, குழந்தைகளுக்குப் பாதுகாப்பான சூழ்நிலையை உருவாக்க உதவிகரமாக இருக்கும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x