Published : 22 Jul 2018 10:40 AM
Last Updated : 22 Jul 2018 10:40 AM
பள்ளிகள்தாம் சமூகத்தின் வேற்றுமைகளைக் களைந்து சமத்துவப் பாடம் சொல்லும் இடமாக இருந்துவருகின்றன. ஆனால், திருப்பூர் மாவட்டம் அவினாசி அருகே திருமலைக்கவுண்டன்பாளையம் அரசு உயர்நிலைப் பள்ளிக்குள் புகுந்த தீண்டாமைக் கொடுமை ஒட்டுமொத்த சமூகத்தையே தலைகுனியவைத்துள்ளது.
அருந்ததியர் சமூகத்தைச் சேர்ந்த பாப்பாள் (42) ஏழ்மையான குடும்பத்தைச் சேர்ந்தவர். ஒச்சாம்பாளையம் அரசுப் பள்ளியில் அவர் சமையலராகப் பணியாற்றிவந்தார். கடந்த 16-ம் தேதி திருமலைக்கவுண்டன்பாளையம் உயர்நிலைப் பள்ளிக்குப் பணியிட மாற்றம் செய்யப்பட்டார். திருமலைக்கவுண்டன் பாளையம்தான் பாப்பாளின் சொந்தவூர். சொந்த ஊரில் உள்ள அரசு உயர்நிலைப் பள்ளியில் சமையலர் பணி கிடைத்தது அவருக்கு மிகவும் மகிழ்ச்சியை அளித்தது.
பிளஸ் 1 படிக்கும் மகனையும் 10-ம் வகுப்பு படிக்கும் மகளையும் அருகில் இருந்து கவனித்து அனுப்ப முடியாமல், இத்தனை நாள் மிகுந்த சிரமத்துடனே வேலைக்குச் சென்று வந்துள்ளார். இந்தப் பணிமாற்றலால் குழந்தைகளோடு நேரம் செலவிட முடியும் என்று நினைத்து மகிழ்ந்தார். ஆனால், ஆதிக்கச் சாதியினர் அவரது அந்த நினைப்புக்குத் தீவைத்துக் கனவைக் கருக்கிவிட்டனர்.
பாப்பாள் தங்கள் ஊரில் வேலை செய்யக் கூடாதெனச் சாதியைக் காரணம் காட்டி, உள்ளூரில் உள்ள ஆதிக்கச் சாதியினர் கடுமையாக எதிர்த்தனர். பெரும் போராட்டத்துக்குப் பிறகுதான் முதல் நாள் அவர் பள்ளிக்குச் சென்றார். அன்று பள்ளியில் சமைத்துக்கொண்டிருந்த பாப்பாளைச் சாதி வெறியர்கள் தடுத்து நிறுத்தினர். அவர் சமைக்க வைத்திருந்த பாத்திரங்களை அவரிடமிருந்து பிடுங்கித் தங்களது சாதி வெறியின் உச்சத்தை வெளிப்படுத்தினர்.
உள்ளூர்வாசிகளின் இந்தச் செயல் பாப்பாளை நிலைகுலையவைத்தது. செய்வதறியாமல் கண்ணீர் மல்க பாப்பாள் பள்ளியில் முறையிட்டார். பள்ளி நிர்வாகமோ, வட்ட வளர்ச்சி அலுவலரைக் கைகாட்டிவிட்டுப் பிரச்சினையிலிருந்து சாமர்த்தியமாக நழுவிக்கொண்டது. வட்ட வளர்ச்சி அலுவலரும் நமக்கேன் வம்பு என பாப்பாள் ஏற்கெனவே பணியாற்றிய ஒச்சாபாளையம் ஆதிதிராவிடர் காலனியில் உள்ள பள்ளிக்கே மீண்டும் அவரைப் பணியிட மாற்றம் செய்து மிகவும் பொறுப்பாக (!) நடந்துகொண்டார்.
பாப்பாள் 2006-ல் வேலைக்குச் சேர்ந்தார். அப்போதும் சாதி அடக்குமுறைக்கு ஆளாகியுள்ளார். தான் பிறந்த சாதியே காரணமாகக் கற்பிக்கப்பட்டு அவிநாசி வட்டம் கந்தாயிபாளையம், வையாபுரிக்கவுண்டன்புதூர் என அடுத்தடுத்து இட மாற்றம் செய்யப்பட்டார். அருந்ததியர் சமூகத்தைச் சேர்ந்தவர் என்ற ஒரே காரணத்துக்காக 12 ஆண்டுகள் எவ்வளவோ வேதனையையும் சொல்லொணாத் துயரையும் பாப்பாள் பொறுத்துக்கொண்டார். வேலைக்காக அன்றாடம் 16 கி.மீ. பயணித்துள்ளார். இவ்வளவு கஷ்டங்களையும் மீறித்தான் ஒச்சாயிபாளையம் ஆதிதிராவிடர் காலனியில் உள்ள பள்ளியில் வேலை பார்த்துள்ளார். அங்கு அவருக்குக் கிடைத்த சம்பளம் ரூ. 6500 மட்டுமே.
“எம் புள்ளைங்களகூடக் கண்டுக்காம சத்துணவு வேலைக்குப் போயிட்டுவந்தேன். எங்க வீட்டுக்காரரு விவசாயக் கூலிதான். ரெண்டு குழந்தைகளைப் படிக்க வச்சு ஆளாக்கணும். கடன் வேற வாங்கி இருந்ததால பிடித்தம் எல்லாம் போக நாலாயிரத்து சொச்சம்தான் கைக்கு வரும். இந்தப் பணத்தை வச்சுக்கிட்டு குடும்பம் நடத்த வேண்டிய நிலமை. திருமலைக்கவுண்டன்பாளையத்துல இருந்து ஒச்சாம்பாளையத்துக்குப் போயிட்டுவந்த கஷ்டம் இன்னையோட தீந்துடுச்சுன்னு நெனைச்சேன்.
எங்க ஊர் புள்ளைங்களுக்குச் சமைச்சுப் போடப்போறோம்னு சந்தோஷப்பட்டேன். ஆனா உள்ளூர்க்காரங்க, ‘சக்கிலிச்சு சமைச்சு எங்க புள்ளைங்க சாப்பிடுறதா’ன்னு தகராறு பண்றாங்க. சாதியைக் காட்டி கொடுமை பண்ணுவாங்கன்னு நெனைச்சுகூடப் பார்க்கல. நானும் மனுஷிதாங்க. இந்தச் சாதியில பொறந்தது எங்க தப்புங்களா?” என்று வேதனை மிகுந்த குரலில் பாப்பாள் கேட்கும்போது நாம் முன்னேறிய சமூகத்தில்தான் வாழ்ந்துகொண்டிருக்கிறோமா என்று சந்தேகமாக இருக்கிறது.
சட்டப்பேரவைத் தலைவர் ப.தனபாலின் அவினாசி தொகுதிக்குள்தான் இந்தப் பள்ளியும் வருகிறது. இந்த அநீதிக்கு எதிராகப் பல்வேறு அமைப்புகள் பெரிய அளவில் போராட்டத்தை முன்னெடுத்து நடத்தினர். இந்தப் போராட்டத்தின் விளைவாக, ஆதிக்கச் சாதியினருக்குப் பயந்து வட்ட வளர்ச்சி அலுவலர் செய்த பணியிட மாற்றம் தற்போது ரத்து செய்யப்பட்டுள்ளது.
திருமலைக்கவுண்டன்பாளையத்திலேயே பாப்பாள் பணியாற்றுவதற்கு சார் ஆட்சியர் ஸ்வரன்குமார் உத்தரவு பிறப்பித்துள்ளார். தான் புறக்கணிக்கப்பட்ட அதே ஊரில்தான் இனி பாப்பாள் தன் பணியைத் தொடரப் போகிறார். ஆனால், தன் பணிக்கு இடையூறோ அச்சுறுத்தலோ இருக்காது என்ற உத்திரவாதத்துக்கு யார் பொறுப்பு என்ற கேள்வி பாப்பாளின் கண்களில் தேங்கி நிற்கிறது.
இப்படி, சாதிரீதியான ஒடுக்குதலுக்கு ஆளாகும் முதல் பெண் பாப்பாள் அல்ல. அவரைப் போலவே பலரும் இதுபோன்ற ஒடுக்குமுறையை எதிர்கொண்டிருக்கிறார்கள். பட்டியலினத்தைச் சேர்ந்தவர் சமைத்ததைச் சாப்பிடாமல் புறக்கணித்த கதை தமிழகத்தில் எத்தனையோ உண்டு. ஆனால், தீண்டாமை ஒரு பெருங்குற்றம் எனச் சொல்லித்தரும் கல்வி நிலையத்திலும் அந்தக் கொடுமை தொடர்வதுதான் முரண்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT