Published : 08 Jul 2018 10:45 AM
Last Updated : 08 Jul 2018 10:45 AM

வானவில் பெண்கள்: மாற்றத்துக்கு மீனாட்சி

ல்லூரிப் படிப்பை முடித்தோமா வேலைக்குச் சேர்ந்தோமா என்று தன் கனவைச் சுருக்குவதில் மீனாட்சிக்கு விருப்பம் இல்லை. அதுதான் அவருக்கு நாடகக் கலைஞர், பறை - சிலம்பம் பயிற்சியாளர், மாதவிடாய் சுகாதாரப் பிரச்சாரகர், ரேடியோ ஜாக்கி எனப் பலமுகங்களைக் கொடுத்துள்ளது. சென்னை பச்சையப்பன் கல்லூரியில் ஆங்கில இலக்கியத் துறையில் ஆராய்ச்சியில் ஈடுபட்டுவரும் மீனாட்சி, தான் விளையும் பயிர் என்பதை முளையிலேயே நிரூபித்தவர். விழுப்புரத்தைச் சேர்ந்த இவர் பள்ளி, கல்லூரி நாட்களில் பல போட்டிகளில் பங்கேற்று வெற்றிபெற்றாலும் படிப்பிலும் சிறப்பான இடத்தைப் பிடித்தார்.

பார்வையை விசாலமாக்கிய சென்னை

சென்னை கல்லூரியில் தங்கள் மகளைப் படிக்க வைக்க மீனாட்சியின் பெற்றோர் தயங்க, அடம் பிடித்துப் பட்டம் முடித்தார் மீனாட்சி.

“சென்னை வந்த பிறகு என் பார்வை விசாலமாச்சு. பல்கலைக்கழகப் பேராசிரியர் அழகர் சார்தான் சமூகத்தைப் பத்தித் தெரிந்துகொள்ளும் ஆர்வத்தை ஏற்படுத்தினார். அப்போ ‘நிமிர்வு’ கலையகம் சார்பில் நடந்த ஓராண்டு பறையாட்டப் பயிற்சியில் சேர்ந்து பயிற்சி எடுத்துக்கிட்டேன்” என்று சொல்லும் மீனாட்சிக்கு, அந்தப் பயிற்சியில் சேர்வதே பெரும்பாடாக இருந்திருக்கிறது.

08CHLRD_MEENA (2)

“நான் பறையடிக்கக் கத்துக்கக் கூடாதுன்னு வீட்ல கடுமையான எதிர்ப்பு. தமிழர்களோட பாரம்பரிய கலையைக் கத்துக்கறதுல என்ன தப்பு?” என்று கேட்பவர், பறையாட்டப் பயிற்சிக்காகப் பெற்றோரிடம் பணம் கேட்கவில்லை. நண்பர்களின் உதவியால் சில அகாடமிகளில் சுயமுன்னேற்ற வகுப்புகள் எடுப்பதைப் பகுதிநேர வேலையாகச் செய்தார். “அப்படிக் கிடைச்ச பணத்துல பறை, சிலம்பாட்டம் கத்துக்கிட்டேன்” என்கிறார் மீனாட்சி.

ஆங்கில இலக்கியம் படிக்கும் மாணவர்களுக்கு நாடக நடிப்பும் பாடத்திட்டத்தின் ஒரு பகுதி என்பதால் மீனாட்சியும் நாடகங்களில் நடிக்கக் கற்றுக்கொண்டார்.

நாடகத்தால் உண்டான மாற்றம்

சென்னைப் பல்கலைக்கழகத்தில் படித்துக்கொண்டிருந்தபோது, ‘தாகம்’ எனும் தன்னார்வத் தொண்டு நிறுவனத்தின் அறிமுகம் மீனாட்சிக்குக் கிடைத்தது. அதன் பிறகு, அந்த அமைப்பில் இணைந்து பல கலைநிகழ்ச்சிகளில் கலந்துகொண்டார். பொது இடங்களிலும் பள்ளி, கல்லூரிகளிலும் பெண்களின் பிரச்சினைகள், மாதவிடாய் சுகாதாரம் போன்றவை குறித்து விழிப்புணர்வுப் பிரச்சாரங்களையும் அவர் மேற்கொண்டுள்ளார்.

தற்போது தாகம் தொண்டு நிறுவனத்தின் முக்கியப் பொறுப்பில் இருக்கும் மீனாட்சி, குடிசைப் பகுதியில் வசிக்கும் குழந்தைகளுக்குப் பறையாட்டம், சிலம்பம், வீதி நாடகம் ஆகியவற்றைக் கற்றுத் தருகிறார். “ஒரு முறை குழந்தைகள் மீதான பாலியல் வன்முறை குறித்த ஒரு நாடகத்தை நாங்க ஏற்பாடு செஞ்சிருந்தோம். நாடகத்தைப் பார்த்து அந்தப் பகுதி மக்கள் கண்கலங்கிட்டாங்க. நாடகத்தில் நாங்க சொன்ன விஷயங்களைக் கேட்டு அவங்க வீட்டுப் பெண் குழந்தைகளை நல்லா படிக்க வைப்போம்னு சொன்னாங்க.

ஒரு நாடகத்தின் மூலம் இப்படியொரு மாற்றத்தைக் கொண்டுவர முடியும்னு அப்போதான் புரிஞ்சுது” என்று சொல்லும் மீனாட்சி, மூன்று ஆண்டுகளாக சென்னை அகில இந்திய வானொலியில் பகுதிநேரத் தொகுப்பாளராகப் பணியாற்றிவருகிறார்.

இவர்களின் ‘தாகம்’ அமைப்பு சார்பில் மே 28 உலக மாதவிடாய் சுகாதார நாளன்று மாதவிடாய்க்காக ஒரு பாடலைத் தயாரித்துள்ளது. ‘Menstrual Anthem’ என்ற அந்தப் பாடலை அவர்கள் குழுவினரே எழுதியும் பாடியும் உள்ளனர்.

“ஸ்கூல்ல படிச்சப்ப நாட்டு நலப் பணிகள் மூலமாதான் சமுதாயத்துக்குத் தொண்டு செய்ய முடியும்னு நினைச்சிருந்தேன். ஆனால், கலை என்னை வேறொரு இடத்துக்குக் கொண்டு வந்திருக்கு” என்று சொல்லும் மீனாட்சிக்கு ஒரு கலைக்கூடத்தைத் தொடங்க வேண்டும் என்பதுதான் ஆசை.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x