Last Updated : 22 Jul, 2018 10:40 AM

 

Published : 22 Jul 2018 10:40 AM
Last Updated : 22 Jul 2018 10:40 AM

பெண்கள் 360: மல்லுக்கட்டும் பெண்கள்

மல்லுக்கட்டும் பெண்கள்

பாகிஸ்தானியர்கள் வரும் 25-ம் தேதி தங்களது அடுத்த அரசைத் தேர்ந்தெடுக்க இருக்கிறார்கள். இந்தத் தேர்தலில் எப்போதும் இல்லாத அளவு அதிக அளவிலான பெண்கள் போட்டியிடுகிறார்கள். 272 நாடாளுமன்றத் தொகுதிகளைக் கொண்ட பாகிஸ்தான் தேர்தலில், 171 பெண்கள் போட்டியிடுகிறார்கள்.  ஆணாதிக்கம் கொண்ட பழங்குடிப் பகுதியில் முதன்முறையாக அலி பேகம் என்ற பெண் போட்டியிடுகிறார். மேலும், இந்தத் தேர்தலில் ஐந்து திருநங்கைகள் போட்டியிடுகிறார்கள். 2013-ல்  நடைபெற்ற தேர்தலில் திருநங்கைகள் போட்டியிட அனுமதிக்கப்பட்டார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

என் உடலில் முடி உண்டு

பெண்களின் உடல் முடியற்று இருக்க வேண்டும்; பெண்களின் உடலில் முடி இருந்தால் அவர்கள் வெட்கப்பட வேண்டும் என்பது போன்ற கருத்துகள் பெண்களின் மீது திணிக்கப்படுகின்றன. திரைப்படங்களிலும் விளம்பரங்களிலும் முடியற்ற வழுவழுப்பான சருமத்துடனேயே பெண்கள் காட்டப்படுகிறார்கள். இந்நிலையில் அமெரிக்காவில் இருக்கும் பில்லி எனும் ரேஸர் தயாரிப்பு நிறுவனம் சமீபத்தில் வெளியிட்ட விளம்பரம் வரவேற்பைப் பெற்றுள்ளது. அதில் பெண்கள் தங்கள் உடலில் உள்ள முடியை ஷேவ் செய்வது காட்டப்படுகிறது. பெண்களின் கால், கழுத்து, வயிற்றில் உள்ள முடிகள் நெருக்கமாகக் காட்டப்பட்டுள்ளதைப் பல பெண்கள் சமூக வலைத்தளத்தில் பாராட்டியுள்ளனர். உடல் முடி குறித்து இன்னும் நேர்மறையாக நினைக்க, இந்த விளம்பரம் உதவுவதாக இதை ஆதரிக்கும் பெண்கள் கூறுகின்றனர்.

தந்தையுமானவள்

குழந்தையின் பிறப்புச் சான்றிதழில் தந்தையின் பெயர் கண்டிப்பாக இடம் பெற வேண்டும் என்பது கட்டாயம் அல்ல என்ற வரலாற்றுச் சிறப்புமிக்கத் தீர்ப்பை சென்னை உயர் நீதிமன்றம் வழங்கியிருக்கிறது. மணமுறிவுக்குப் பின், செயற்கை முறையில் கருத்தரித்து ஒரு பெண் குழந்தையை மதுமிதா ரமேஷ் பெற்றுக்கொண்டார். அந்தக் குழந்தைக்குப் பிறப்புச் சான்றிதழை அளித்த திருச்சி மாநகராட்சி, தந்தை என்ற பகுதியில் பிரசவத்தின்போது மதுமிதாவுக்கு உதவியாக இருந்த அவருடைய நண்பர் மனீஷ் மதன்பால் மீனா என்பவரின் பெயரைச் சேர்த்து விட்டது. இதை எதிர்த்து திருச்சி மாநகராட்சிக்கு எதிராக அவர் தொடுத்த வழக்கில் இந்தத் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

சபரிமலையில் பெண்கள்

சபரிமலைக் கோயிலுக்குள் பெண்கள் நுழைய விதிக்கப்பட்டிருந்த தடையை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த விவகாரம் உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி தீபக் மிஸ்ராவின் முன் விசாரணைக்கு வந்தது. பெண்கள் கோயிலுக்குள் நுழையத் தடைவிதிப்பது இந்திய அரசியலமைப்பு சட்டத்துக்கு எதிரானது என அப்போது அவர் கருத்து தெரிவித்தார். சபரிமலை ஐயப்பன் கோயிலில் வழிபடுவதற்கு ஆண்களைப் போல் பெண்களுக்கும் உரிமை உண்டு. பெண்களுக்கென்று பிரார்த்தனை செய்யத் தனியாகச் சட்டம் இயற்ற முடியாது. இறைவழிபாடு என்பது ஆண்களுக்கும் பெண்களுக்கும் பொதுவானது என்று அவர் அழுத்தமாகத் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x