Published : 15 Jul 2018 10:05 AM
Last Updated : 15 Jul 2018 10:05 AM
நம்பிக்கையே வாழ்வு
‘கா
தலர் தினம்’ படத்தின் நாயகி சோனாலி பிந்த்ரேயை எளிதில் மறக்க முடியாது. ‘சற்றும் எதிர்பார்க்காத தருணத்தில் வாழ்க்கை நம் மீது தாங்க முடியாத அதிர்ச்சியைத் தூக்கிப் போடுகிறது. எனக்கு முற்றிய நிலையில் புற்றுநோய் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது’ என்று அவர் ட்வீட் செய்திருந்தார். நாடு முழுவதுமிருந்து பிரார்த்தனைகள் குவிந்தன. ‘உங்களுடைய அன்பு எனக்கு நெகிழ்ச்சியையும் நம்பிக்கையையும் தருகிறது.
கருணையற்ற குற்றம்
செ
ன்னை முகலிவாக்கத்தில் ஏழு வயதுக் குழந்தையை வல்லுறவு செய்து கொலைசெய்த குற்றத்துக்காக 27 வயது தஷ்வந்துக்கு மரணதண்டனை விதிக்கப்பட்டிருந்தது. சென்னை உயர் நீதிமன்றம் அந்தத் தண்டனையை இந்த வாரம் உறுதி செய்தது. ‘குற்றவாளியின் மனிதத் தன்மையற்ற கொடூரச் செயலை விவரிக்க வார்த்தைகளே இல்லை. கருணைக்கும் பரிதாபத்துக்கும் எள்ளவுக்குக்கூட இவர் தகுதியற்றவர். இறந்த குழந்தையின் உடலை இவர் கையாண்ட விதம், அந்தக் குழந்தைக்கு அவர் இழைத்த கொடூரத்தைவிடக் குரூரமாக இருந்தது. மரண தண்டனைகூட இவருக்குக் குறைந்தபட்ச தண்டனைதான்’ என்று அந்தத் தீர்ப்பை அளித்த நீதியரசர் விமலா தெரிவித்துள்ளார்.
தங்கம்வென்ற தீபா
தீ
பா கர்மாகர் இந்தியாவின் முன்னணி ஜிம்னாஸ்டிக் வீராங்கனை. ரியோ ஒலிம்பிக் போட்டியில் வெண்கலப் பதக்கத்தை அவர் நூலிழையில் தவறவிட்டார். காலில் ஏற்பட்ட காயத்தால் இரண்டு ஆண்டுகளாக ஜிம்னாஸ்டிக் போட்டிகளிலிருந்து விலகியிருந்தார். நீண்ட இடைவெளிக்குப் பின் துருக்கியில் மெர்ஸின் நகரில் நடைபெற்ற ‘மெர்ஸின் உலக சேலஞ்ச் கப்’ போட்டியில் பங்கேற்றார். தகுதிச் சுற்றில் சற்றுச் சிரமத்துடன் 11.85 புள்ளிகளை மட்டுமே பெற்றார். ஆனால், அதற்குப் பிறகு அவர் வெளிப்படுத்திய ஆட்டத்தில் நளினமும் நுணுக்கமும் நிறைந்திருந்தன. இறுதியில் 14.5 புள்ளிகள் பெற்று அவர் தங்கப்பதக்கம் வென்றார். தீபாவின் அடுத்த இலக்கு ஆசிய விளையாட்டுப் போட்டியில் தங்கம் வெல்வது.
இசையின் அரசி
பா
டகரும் கிடாரிஸ்ட்டுமான மரியா இசபெல், ஈக்வெடார் நாட்டைச் சேர்ந்தவர். அவரது உணர்வுபூர்வமான பாடல்கள் அந்நாட்டு மக்களின் அன்றைய உணர்வுகளை இன்றும் உயிர்ப்புடன் வைத்துள்ளன. 1904-ல் குக்கிராமத்தில் அவர் பிறந்தார். அவருடைய மாமா அவருக்கு கிடார் வாசிக்கக் கற்றுக்கொடுத்தார். மரியாவின் திறமையால் கவரப்பட்ட ரஃபேல் அவரைத் தன் குழுவில் சேர்த்துள்ளார்.
1935 முதல் மரியா தனியாகப் பாடத் தொடங்கியுள்ளார். அவரது பாடல்கள் முழுவதிலும் மகிழ்வும் துயரமும் ஒன்றோடொன்று பின்னிப் பிணைந்திருக்கும். வானொலியில் அவர் பாடிய பாடல்கள் அன்றைய காலகட்டத்து ரசிகர்களைக் கிறங்கடித்தன. அவரது 114 வயதைக் கொண்டாடும் விதமாக கூகுள் கடந்த திங்கள் அன்று சிறப்பு டூடுலை வெளியிட்டது.
நடன ஆயுதம்
17 வயது நிரம்பிய மேதேஹ் ஹோஜப்ரி ஈரானைச் சேர்ந்தவர். அவர் ஆடியதற்காக, அதுவும் படுக்கையறையில் ஆடியதற்காக ஈரானிய அரசு அவரைக் கைது செய்தது. ஈரானிய அரசின் இந்த முறையற்ற செயல் அங்குள்ள பெண்களைக் கோபப்படுத்தியது. பொங்கியெழுந்த பெண்கள் அந்தக் கைதுக்கு எதிராகத் தாங்களும் ஆடி, அந்த வீடியோவைச் சமூக வலைத்தளங்களில் பதிவேற்றிவருகிறார்கள். DancingIsNotACrime, DanceToFreedom போன்ற ஹேஷ்டேக்குகள் அங்கு இப்போது வைரலாகிவருகின்றன. பெண்கள் நினைத்தால் நடனமும் ஆயுதமே.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT