Last Updated : 29 Jul, 2018 09:46 AM

 

Published : 29 Jul 2018 09:46 AM
Last Updated : 29 Jul 2018 09:46 AM

பார்வை: கர்ப்பிணிக்கு இடம் கொடுப்போமா?

பேருந்து அல்லது ரயிலில் பயணிக்கும்போது கர்ப்பிணிகள் நின்றுகொண்டிருந்தால், நீங்கள் உங்களின் இருக்கையை அவருக்காக விட்டுக்கொடுப்பீர்களா?

பெரும்பாலானவர்களின் பதில் ஆமாம் என்பதாகத்தான் இருக்கும். ஆனால், கூட்ட நெரிசலில் சிக்கித் தவிக்கும்போது, இருக்கும் இடத்தை விட்டுக்கொடுக்க பலருக்கும் மனம் வராது.

இந்தியா போன்ற மக்கள் தொகை அதிகமுள்ள நாடுகளில் மட்டுமல்ல, பிரிட்டன் போன்ற வளர்ந்த நாடுகளில் வசிக்கும் மக்களின்  மனநிலையும் இப்படித்தான் இருக்கிறது என்ற உண்மையை அண்மையில் நடத்தப்பட்ட ஆய்வு ஒன்று வெளிக்கொண்டுவந்திருக்கிறது.

லண்டன் உள்ளிட்ட பிரிட்டனின் முக்கிய நகரங்களில் Mama Mio என்ற நிறுவனம் ஆய்வு நடத்தியது.  கர்ப்பிணிகளுக்குப் பொதுப் போக்குவரத்தில் என்ன மாதிரியான அனுபவம் கிடைக்கிறது, அவர்கள் மனிதாபிமானத்துடன் நடத்தப்படுகிறார்களா என்பது போன்றவற்றை அந்த ஆய்வு முக்கியப் பொருளாக எடுத்துக்கொண்டது.

ஏன் விட்டுத்தர வேண்டும்?

பெரும்பாலானவர்களிடம் கேட்கப்பட்ட பொதுவான கேள்வி, ‘பேருந்து அல்லது ரயிலில் கூட்ட நெரிசல் அதிகமுள்ள நேரத்தில் கர்ப்பிணி ஒருவர் உட்கார இடம் இல்லாமல் தவித்தால், நீங்கள் உங்கள் இருக்கையை அவருக்காக விட்டுக்கொடுப்பீர்களா’ என்பதுதான். அதற்கு பிரிட்டன் மக்கள் தெரிவித்த பதில் அனைவரையும் ஆச்சரியப்படுத்தியது. கிட்டத்தட்ட 2 ஆயிரம் பேரில், 2 சதவீதத்தினர் மட்டுமே, கர்ப்பிணிப் பெண்ணுக்காகத் தங்கள் இருக்கையை விட்டுக்கொடுப்போம் எனப் பதிலளித்திருக்கிறார்கள்.

சுமார் 25 சதவீதத்தினர் கர்ப்பிணிப் பெண்ணுக்கு இடம் தர மனமில்லை என வெளிப்படையாகவே கூறியிருக்கிறார்கள். கர்ப்பிணிப் பெண் நிற்க முடியாமல் அவதிப்படும்பட்சத்தில் அவருக்குத் தங்களின் இருக்கையை விட்டுக்கொடுப்போம் என 30 சதவீதத்தினர் கூறியிருக்கிறார்கள். இவை அனைத்தையும் மிஞ்சும் வகையில், சுமார் 30 சதவீதத்தினர் கர்ப்பிணிப் பெண்ணின் நலனுக்காக நாங்கள் எதற்கு எங்கள் இருக்கையை விட்டுத்தர வேண்டும் எனக் கேட்டு அதிர்ச்சி அளித்திருக்கிறார்கள்.

இந்த ஆய்வில் தெரிவிக்கப்பட்ட தகவலால் அதிர்ச்சியடைந்த லண்டனைச் சேர்ந்த தன்னார்வலரும் வலைப்பூ எழுத்தாளருமான அன்னா ஒயிட்ஹவுஸ், உண்மை நிலவரத்தை உலகுக்கு அறிவிக்க, அவற்றை வீடியோவாகப் பதிவுசெய்ய நினைத்தார். இரண்டு குழந்தைகளின் தாயான இவர், இந்த ஆய்வுக்காகக் கர்ப்பிணியைப் போல் நடிக்க முடிவு செய்தார். பயணிகள் அதிகமாகச் செல்லக்கூடிய நேரத்தில் ரயில்களில் பயணித்தார்.

எந்தவித எதிர்பார்ப்பும் இல்லாமல் நின்றுகொண்டு, கர்ப்பிணிக்கே உரிய சோர்வையும் அசதியையும் வெளிப்படுத்தினார்.  சிலர் அவருக்காகத் தங்களது இருக்கைகளை விட்டுக்கொடுத்தனர். ஆனால், பலரும் அன்னாவைக் கண்டுகொள்ளவே இல்லை என்பது ஆய்வு முடிவின்  உண்மைத்தன்மையை உறுதிப்படுத்தியது.

யாரையும் கவனிப்பதில்லை

சிலரிடம் தனது நிலை குறித்துச் சொன்ன  அன்னா, “உங்களுடைய இருக்கையை எனக்குத் தர முடியுமா?” என வாய் விட்டுக் கேட்ட பிறகே இடம் கிடைத்தது. ஆனால், பெரும்பாலானோர் செல்போன் அல்லது லேப்டாப் போன்றவற்றில் கவனம் செலுத்தியபடியும் யார் என்ன செய்துகொண்டிருக்கிறார்கள் என்பதைப் பற்றி எந்தக் கவலையும் இல்லாமலும் இருந்தனர். அதனால் கர்ப்பிணிகள் நின்றுகொண்டிருந்தாலும், அவர்கள் கண்டுகொள்ளப்படுவது இல்லை என்று தனது அனுபவத்தை வலைப்பூவில் அன்னா பதிவிட்டுள்ளார்.

இதற்குத் தீர்வுகாணும் விதமாக, குழந்தையை வயிற்றில் சுமக்கும் பெண், அதைப் பற்றி மற்றவர்களுக்குத் தெரிவிக்கும் வகையில், Baby on board என்ற வாசகம் பொறிக்கப்பட்ட பேட்ஜை அணிந்துகொண்டு பொதுப் போக்குவரத்தில் பயணிக்கலாம் என அறிவுறுத்துகின்றனர். இதுபோன்ற பேட்ஜை அணிந்து செல்லும் பெண்களுக்குக் கூடுதல் கவனம் கிடைப்பதால், அவர்களுக்கான இடமும் உறுதி செய்யப்படுகிறது என அன்னா சொல்கிறார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x