Published : 22 Jul 2018 10:40 AM
Last Updated : 22 Jul 2018 10:40 AM
பிறந்தோம், இருந்தோம், மறைந்தோம் என்று வாழ்வதில் வர்ஷாவுக்கு உடன்பாடில்லை. தனக்காக மட்டுமல்ல; பிறருக்காகவும் வாழ வேண்டும் என்பதை லட்சியமாகக் கொண்டிருக்கிறார்.
வர்ஷாவுடைய அப்பா கிஷோர் தேஷ்வானி, ஜோத்பூரைச் சேர்ந்தவர். அம்மா ராணி, புனேயைச் சேர்ந்தவர். வர்ஷா பிறந்தது, வளர்ந்தது எல்லாம் புரசைவாக்கத்தில்தான். சிறு வயது முதலே பிறருக்கு உதவுவதில் வர்ஷாவுக்கு விருப்பம். பள்ளியில் படித்தபோது செஞ்சிலுவைச் சங்கத்தில் உறுப்பினராக இருந்திருக்கிறார்.
சேவையால் வளர்ந்த நேசம்
“ஸ்கூல் படிக்கிறப்பவே ராயப்பேட்டை ஆஸ்பத்திரிக்குப் போய் அங்க இருக்க நோயாளிகளிடம் ஆறுதலாப் பேசுவேன். பிரெட் வாங்கிட்டுப்போய்த் தருவேன். அவங்களோட பேசிய அந்த நாட்கள் எனக்குள் ஈரத்தையும் சக மனிதர்களின் மீதான நேசத்தையும் வளர்த்தன” என்று வர்ஷா சொல்கிறார்.
திருமணம், குழந்தை என்று வர்ஷாவின் குடும்பம் விரிந்தாலும் சமூக அக்கறை குறையவில்லை. ஏழு ஆண்டுகளுக்கு முந்தைய ஒரு தீபாவளி அவரது வாழ்க்கையை மாற்றியமைத்தது.
“ஒவ்வொரு தீபாவளியின்போதும் சென்னை மாநகரம் புகைமூட்டத்தில் மூழ்கிடும். தீபாவளிக்கு மறுநாள் மலைபோல் பட்டாசுக் காகிதங்கள் குவிந்திருக்கும். நமக்கும் அது பழகிவிட்டது. பட்டாசின் சத்தத்தால் பயந்து ஓடும் பறவைகளைப் பற்றி யாருக்கும் கவலையில்லை. அந்தப் புகையால் குழந்தைகளுக்கும் முதியவர்களுக்கும் ஏற்படும் பாதிப்பு குறித்த விழிப்புணர்வும் பலருக்கும் இல்லை.
கொண்டாட்டம் என்ற பெயரில் நம் ஆரோக்கியத்தை நாமே கெடுத்துக்கொள்கிறோம்” என்று சொல்லும் வர்ஷா, சூழல் மாசுக்கு எப்படி முற்றுப்புள்ளி வைப்பது என யோசித்தார். அந்த யோசனையின் விளைவாக உருவானதுதான் ‘பார்ன் டூ வின்’ எனும் அமைப்பு.
தான் ஏற்படுத்த விரும்பிய மாற்றத்தைக் குழந்தைகளிடமிருந்து அவர் தொடங்கினார். குழந்தைகளைக் கொண்டு, ‘சிந்தி மாடல் பள்ளி’யில் அவர் தொடங்கிய ‘நோ கிராக்கர்ஸ்’ எனும் இயக்கம் நல்ல வரவேற்பைப் பெற்றது. அந்த இயக்கத்தில் இணைந்த பள்ளிக் குழந்தைகள், பட்டாசு வெடிப்பதில்லை எனும் கொள்கையைத் தங்கள் அபார்ட்மென்டிலும் தெருவிலும் இன்று பரப்பிக்கொண்டிருக்கிறார்கள்.
பாண்டிச்சேரியில் இது குறித்து விழிப்புணர்வு நடைப்பயணத்தையும் ‘பார்ன் டூ வின்’ நடத்தியுள்ளது. அதில் 3000-க்கும் அதிகமானோர் கலந்துகொண்டனர். அந்த நடைப்பயணத்துக்கு பாண்டிச்சேரி ஆளுநர் கிரண்பேடி ஆதரவளித்ததைத் தன் முயற்சிக்குக் கிடைந்த உந்துசக்தியாக வர்ஷா குறிப்பிடுகிறார்.
உலகைப் பேணுவோம்
“பிறகு குழந்தைகளைக்கொண்டே ‘RISE4RICE' எனும் இயக்கத்தைத் தொடங்கினோம். தற்போது, பெண்களின் உடல்நலம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக ‘HE4SHE' எனும் இயக்கத்தைத் தொடங்கியுள்ளோம்” என்கிறார் வர்ஷா. பிளாஸ்டிக் பைகளால் உண்டாகும் தீமை குறித்த விழிப்புணர்வைப் பள்ளிக் குழந்தைகளின் மூலம் வர்ஷா ஏற்படுத்திவருகிறார்.
தங்கள் வீடுகளில் இருந்தும் சுற்றி வசிப்பவர்களிடம் இருந்தும் துணிப்பைகளைச் சேகரித்து அருகில் இருக்கும் சந்தையில் உள்ள கடைகளுக்குக் குழந்தைகள் கொடுக்கிறார்கள். “உலகை நலமாகப் பேணினால்தான் உலகம் நம்மைப் பேணும்” என்று சொல்வதோடுஅதைத் தன் செயலிலும் வர்ஷா வெளிப்படுத்துகிறார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT