Published : 30 Mar 2025 08:10 AM
Last Updated : 30 Mar 2025 08:10 AM
வாழ்ந்து காட்டுவோம் திட்டத்தின் மூலம் திருவள்ளூர் மாவட்டம், மீஞ்சூர் வட்டம், காட்டூர் ஊராட்சியில் அகல்யா ஊறுகாய் தொழில் குழு 12 உறுப்பினர்களைக் கொண்டு தொடங்கப்பட்டது. எங்கள் தொழில் குழு வங்கியில் நடப்புக் கணக்கு திறந்து முறையாகத் தொழிலுக்குத் தேவைப்படுகிற அரசு சார்ந்த பதிவுகள் அனைத்தையும் செய்து சிறப்பாகச் செயல்பட்டுவருகிறது.
எங்கள் தொழில் குழுவின் மூலம் அசைவ ஊறுகாய் வகைகளான இறால் ஊறுகாய், மீன் ஊறுகாய் போன்றவற்றைத் தயாரித்து விற்பனை செய்துவருகிறோம். வாழ்ந்து காட்டுவோம் திட்டத்தில் இணை மானிய நிதிக்கு விண்ணப்பித்து 30% மானியத்துடன் கூடிய நிதி ரூ. 3,00,000 வங்கி இணைப்புத் தொகை பெற்றுள்ளோம். இந்தத் தொகையின் மூலம் மிளகாய் அரவை இயந்திரம், இஞ்சி - பூண்டு அரைக்கும் இயந்திரங்கள், பேக்கிங் மிஷின், எடை இயந்திரம் போன்றவற்றைக் கொள்முதல் செய்து பயன்படுத்தி வருகிறோம்.
எங்கள் ஊறுகாய்களை ‘மருதம்’ என்கிற பெயரில் தயாரித்துவருகிறோம். நாங்கள் தயாரிக்கும் ஊறுகாய் வகைகளை அருகில் உள்ள கடைகள், சந்தைகள், சூப்பர் மார்க்கெட் போன்றவற்றில் விற்பனை செய்து வருகிறோம். மேலும், எங்கள் சந்தையை உயர்த்த பல்வேறு கல்லூரிகளில் நடைபெறும் சந்தைகளிலும் விற்பனை செய்துவருகிறோம். மாதம் ரூபாய் 25,000 வரை லாபம் ஈட்டி வருகிறோம். பெண்களின் சுய முன்னேற்றம், எங்கள் வாழ்வாதாரம் மற்றும் எங்களுக்குத் தேவையான பயிற்சிகளை வழங்கி எங்களைத் தொழில்முனைவோராக ஆக்கி உதவிய வாழ்ந்து காட்டுவோம் திட்டத்திற்கு நன்றி!
கூடையால் வளமான வாழ்வு: கோயம்புத்தூர் மாவட்டம் சர்க்கார் சாமக்குளம் ஒன்றியம், அத்திப்பாளையம் ஊராட்சியில் வாழ்ந்து காட்டுவோம் திட்டத்தின் மூலம் கூடைமுனைதல் தொழிலாளர்கள் இங்கே அதிகம் என்பது கண்டறியப்பட்டது. கூடை முனைந்து விற்பனை செய்யும் 10 பேரைக் கண்டறிந்து அவர்களை ஒன்றாக இணைத்துத் தொழில் குழுவில் உள்ள பயன்கள் பற்றி எடுத்துக் கூறி, தொழில் குழுவிற்கு வங்கிக் கணக்கு தொடங்கப்பட்டது. அத்திப்பாளையம் ஊராட்சியில் தேர்வு செய்யப்பட்ட 20 பேரைக் கொண்டு சமுதாயத் திறன் பள்ளி (கூடைமுனைதல் பயிற்சி) தொடங்கப்பட்டது.
இளைஞர்களுக்குச் சமுதாயத் திறன் பள்ளி பயிற்சி வழங்குவதன் மூலம் அவர்களின் தொழில் வாய்ப்பை அதிகாித்தல், சுய தொழில் ஆரம்பித்துத் தேவைகளை மேம்படுத்தி வருமானத்தை உயர்த்துதல், புதிய தொழில் முனைவோரை உருவாக்குதல் ஆகிய நோக்கங்களுடன் தமிழ்நாடு வாழ்ந்து காட்டுவோம் திட்டத்தின் மூலம் சமுதாயத் திறன் பள்ளி தொடங்கப்பட்டது. பாடத்திட்டம் மற்றும் காலத்திட்டம் மதிப்பீடு மற்றும் சான்றிதழ் வழங்குதல் எனப் பல நிகழ்வுகளை உள்ளடக்கியது இந்தச் சமுதாயத் திறன் பள்ளி. இறுதியாக,பயிற்சியில் கலந்துகொண்டவர்களுக்கு வேலைவாய்ப்பும் பெற்றுத் தருவதே இதன் நோக்கமாகும்.
கூடைமுனைதல் பயிற்சிக்குத் தேவையான நிதி ரூ.82,000 வாழ்ந்து காட்டுவோம் திட்டத்தின் மூலம் பெறப்பட்டது. கூடை பின்னுவதில் உள்ள நுணுக்கங்கள், இந்தத் திறன் மூலம் எவ்வாறு தொழில் நடத்த முடியும், இதனை எவ்வாறு சந்தைப்படுத்துவது போன்ற பல்வேறு விஷயங்கள், சமுதாயத் திறன் பள்ளி மூலம் கற்றுக்கொடுக்கப்பட்டது.
இப்பயிற்சி நாங்கள் சுயமாகத் தொழில் தொடங்க பெரிதும் உதவியது. இத்தகைய பயிற்சி அளித்த வாழ்ந்து காட்டுவோம் திட்டத்திற்கு நன்றி. | இந்தத் திட்டத்தின் மூலம் இவர்களைப் போல் நீங்களும் பயனடைய வேண்டுமா? - தொடர்பு எண்: 1800 599 1600 / 155 330
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT
Loading comments...