Published : 29 Jul 2018 09:44 AM
Last Updated : 29 Jul 2018 09:44 AM

களம் புதிது: மரங்களின் தோழி

முன்பெல்லாம் குழந்தைகள் சுட்டிக்காட்டி இது என்ன மரம் என்று கேட்டுவந்தனர்.

இது மாமரம், இது வேப்ப மரம், இது ஆலமரம் எனக் குழந்தைகளுக்கு மரங்களைக் காட்டி உணர்த்திய காலம் ஒன்று இருந்தது. இன்று அவற்றைப் புத்தகங்களின் வாயிலாகத்தான் சுட்டிக்காட்ட வேண்டிய சூழல் உள்ளது. சென்னை போன்ற நகரங்களில் மரங்களின் எண்ணிக்கை வெகுவாகக் குறைந்துவிட்டது.

வெயிலுக்கு ஒதுங்குவதற்கு மரங்களுக்குப் பதில் பிளாஸ்டிக் கூரையைத் தேடும் நிலையே இன்று நமக்கு உள்ளது. மும்பை, டெல்லி போன்ற பெருநகரங்களுடன் ஒப்பிடும்போது சென்னை மிகவும் குறைவான பசுமை நிலப்பரப்பைக் கொண்டுள்ளது. பொதுமக்களின் உடல்நலனுக்குப் பசுமையற்ற இந்தச் சூழல் மிகுந்த ஊறு விளைவிப்பதாக உள்ளது.

மர அகராதி

பசுமையை மீட்டெடுக்கச் சென்னை வண்டலூர் உயிரியல் பூங்காவின் இணை இயக்குநரான சுதா ராமன் ஒரு மாற்று வழியைக் கண்டுபிடித்துள்ளார். தொழில்நுட்பத்தின் உதவியுடன் Tamilnadu Treepedia app எனும் செயலியை அவர் உருவாக்கியுள்ளார். அது வெளிவந்த சில நாட்களிலேயே பொதுமக்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. அந்தச் செயலியில் 150 நாட்டு மரங்கள் (Native trees) குறித்த தகவல்கள் உள்ளன.

நமக்குத் தெரியாத மொழியின் சொற்களை அகராதியில் பார்த்துத் தெரிந்துகொள்வது போல, நமக்குத் தெரியாத ஒரு மரத்தின் பெயரையும் அதன் பயனையும் இந்தச் செயலியின் மூலம் தெரிந்துகொள்ளலாம். தமிழிலும் ஆங்கிலத்திலும் இந்தச் செயலி உருவாக்கப்பட்டுள்ளதை இதன் தனிச்சிறப்பு எனலாம்.

“தகவல்களைத் தெரிந்துகொள்ள இப்போது யாரும் பேப்பரையும் புத்தகத்தையும் நம்பியிருக்கவில்லை, செல்போனைதான் நம்பி உள்ளோம். செல்போன் மூலமாகத்தான் நிறைய செய்திகளை நாம் தெரிந்துகொள்கிறோம். இந்தச் செயலியை நான் உருவாக்கியதற்கான காரணமும் அதுவே’ என்கிறார் சுதா.

இந்தச் செயலியை செல்போன்களில் இலவசமாகப் பதிவிறக்கம் செய்துகொள்ள முடியும். இதுவரை பத்தாயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் இதைத் தரவிறக்கம் செய்துள்ளனர். கூகுள் ப்ளே ஸ்டோரில் 4.8 என்ற ரேட்டிங்கை இந்தச் செயலி பெற்றுள்ளது. இந்தச் செயலியை ஒரு முறை தரவிறக்கம் செய்துவிட்டால், மீண்டும் அதைப் பயன்படுத்த இணையதள வசதி தேவையில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

மரத்தின் ஆத்திச்சூடி

பொதுவாக, அடுக்குமாடிக் குடியிருப்புகளிலும் நிறுவனங்களிலும் ஆழமாக வேர் விடும் மரங்களுக்கு மாற்றாக எதற்கும் பயன்படாத மரங்களை வளர்ப்பார்கள். அதற்குப் பதிலாக மூங்கில் போன்ற மரங்களை வளர்க்கலாமே என்பது போன்ற தகவல்களை இந்தச் செயலி அங்கு வசிப்பவர்களுக்கு வழங்குகிறது. வீட்டில் சிறிய தோட்டம் வைக்க நினைப்பவர்களோ விவசாயிகளோ, யாராக இருந்தாலும், அவர்களுடைய இடத்தில் என்ன மாதிரியான மரங்களையும் செடிகளையும் வளர்க்கலாம் என்றும் அதற்கான வழிமுறைகளையும் இந்தச் செயலி வழங்குகிறது.

இந்தச் செயலியில் ஒவ்வொரு மரத்தினுடைய பெயரும் அதனுடைய தாவரவியல் பெயரும் உள்ளன. எந்த வகையான மண்ணில் எந்த மரம் செழித்து வளரும், என்ன உரம் இட வேண்டும், மரங்களுக்கிடையே எவ்வளவு இடைவெளி விட வேண்டும், தமிழகத்தில் எந்தப் பகுதியில் அந்த மரம் அதிகமாக வளர்கிறது என்பது  போன்ற தகவல்கள் அதில் உள்ளன. பொதுவாக, நாட்டு மரங்களைப் பற்றி வாய்வழித் தகவல்கள்தாம் ஏராளமாக உள்ளன. அவற்றை ஆவணப்படுத்தும் முயற்சியின் ஒருபகுதியாக, அந்தத் தகவல்களை உள்ளடக்கி இந்தச் செயலியை உருவாக்கியுள்ளார் சுதா ராமன்.

பசுமையில் செழிந்த இளமை

சுதா ராமன் உயிரிப் பொறியியல் படித்துள்ளார். வண்டலூர் உயிரியல் பூங்காவில் பணியாற்றத் தொடங்கும் முன்பு தனியார் ஐ.டி. துறையில் பணிபுரிந்துள்ளார். “என் வீடு நெய்வேலியில் இருந்தது. எங்கள் வீட்டைச் சுற்றி ஏராளமான மரங்கள் இருக்கும். வீட்டைச் சுற்றி மாமரம், செம்பருத்திச் செடி, காகிதபூ செடி போன்றவை இருக்கும். இயற்கையான சூழலில்தான் என்னுடைய இளமை நாட்கள் கழிந்தன. அப்பாவின் பணி இடமாற்றம் காரணமாக புதுச்சேரி, டேராடூன் போன்ற இடங்களுக்கு நாங்கள் சென்றோம்.

அங்கும் மரங்களும் பசுமையும் நிரம்பி வழிந்தன. ஒருகட்டத்தில் மரங்கள் என்னுடைய நண்பர்களாக மாறிவிட்டன. ஐ.டி. துறையில் வேலை கிடைத்த பின்னும், எனக்கு மரங்கள்மீதான ஆர்வம் குறையவில்லை. எங்கே சென்றாலும் அங்குள்ள மரங்கள் என்னமாதிரியான வகை, அவை எப்படி வளர்கின்றன என்பதைப் பார்வையிடுவேன். வனத்துறையில் சேர வேண்டும் என்ற ஆசையும் எனக்கு அப்போது தோன்றியது. இதையடுத்து நான் பார்த்து வந்த ஐ.டி வேலையைத் துறந்து யூபிஎஸ்சி தேர்வு எழுதித் தேர்ச்சி பெற்றேன்” என்கிறார் அவர்.

தேர்வில் தேர்ச்சிபெற்ற சுதா ராமன் டேராடூனில் உள்ள இந்திரா காந்தி தேசிய வனக்கல்வி நிறுவனத்தில் இரண்டு ஆண்டுகள் பயிற்சி பெற்றுள்ளார். “மரங்களுக்காக ஒரு செயலியை உருவாக்க வேண்டும் என என்னுடைய பயிற்சி காலத்திலேயே முடிவுசெய்தேன். முதலில் சிறிய அளவில் இந்தச் செயலியை உருவாக்கினேன். இதற்கு என்னுடைய பொறியியல் அறிவு உதவியது. வண்டலூர் உயிரியல் பூங்காவில் இணைந்த பின், வனத்துறையினரின் உதவியோடும் தமிழக அரசின் உதவியோடும் இப்போது இந்தச் செயலியைக் கொண்டு வந்துள்ளேன்” என்கிறார் அவர்.

விவசாயிகளுக்கு உதவும் ‘ஆப்’

மரங்களைப் பற்றித் தகவல்களைச் சேகரித்து இந்தச் செயலியில் இணைப்பதற்காகத் தமிழகத்தின் பெரும்பாலான மாவட்ட விவசாயிகளிடம் நேரடியாகக் கள ஆய்வு மேற்கொண்டுள்ளனர். பாரம்பரியமான நாட்டு மரங்கள் குறித்த தகவல்களைச் சேகரிப்பது மிகவும் சவாலானது. விவசாயிகள் தெரிவித்த செய்திகளையும் அறிவியல்பூர்வமான தகவல்களையும் இணைத்து இந்தச் செயலி வடிவமைக்கப் பட்டுள்ளது. ‘விவசாயிகளின் தேவையைப் பிரதானமாகக்கொண்டே இந்தச் செயலியை உருவாக்கியுள்ளோம்.

கட்டில், மர நாற்காலி, கதவு போன்ற பலகைக்காகச் செய்யப்படும் மரங்கள், பழங்களை வழங்கும் மரங்கள், ஆடு, மாடு போன்ற கால்நடைகளுக்கு இலை தழைகளை வழங்கும் மரங்கள், குறுகிய காலத்தில் வளரும் தன்மை கொண்ட மரங்கள் எனப் பல்வேறு மரங்களை இந்தச் செயலியில் இணைத்துள்ளோம்” என்கிறார் அவர். இந்தச் செயலியில் கொடுக்கப்பட்டுள்ள தகவல்களைத் தவிர்த்து வேறு சந்தேகங்கள் இருந்தால் அதை அந்தந்த மாவட்டத்தில் உள்ள வன விரிவாக்க மையத்தை அணுகி விவசாயிகள் தெரிந்துகொள்ளலாம்” என்று சுதா ராமன் சொல்கிறார்.

வாகனப் புகையால் உருவாகும் மாசை வடிகட்டி நமக்குத் தூய்மையான காற்றை வழங்கும் தன்மை மரங்களுக்கு உண்டு. அதனால்தான் மரங்கள் அடர்த்தியாக உள்ள பகுதிகளில் தூய்மையான காற்று கிடைக்கிறது. வீடுகள், தொழிற்சாலை, அலுவலகம் போன்ற இடங்களில் அழகுக்காக மரம் வளர்ப்பதை விட ஆரோக்கியத்தை முன்னிறுத்தி மரம் வளர்ப்பதே இன்றைய தேவை என்பதை உணர்த்துகிறார் சுதா ராமன்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x