Published : 23 Mar 2025 10:14 AM
Last Updated : 23 Mar 2025 10:14 AM
என் பெயர் இந்திராணி. திருப்பூர் மாவட்டம், அவிநாசி வட்டம், இராமநாதபுரம் ஊராட்சியில் வசித்து வரும் நான், ஒன்பதாம் வகுப்பு வரை படித்துள்ளேன். என் குடும்பச் சூழ்நிலை காரணமாக மேற்கொண்டு படிக்க முடியாமல் என் சொந்த நிலத்தில் விவசாயம் செய்துவந்தேன். எங்கள் பகுதியில் செயல்படும் சாந்தி மகளிர் சுய உதவிக் குழுவில் உறுப்பினராக உள்ளதுடன், வாழ்ந்து கட்டுவோம் திட்டத்தின் மூலம் உருவாக்கப்பட்ட 60 உறுப்பினர்களைக் கொண்ட இராமநாதபுரம் உழவர் உற்பத்தியாளர் குழுவிலும் உறுப்பினராக உள்ளேன். இந்த உழவர் உற்பத்தியாளர் குழுவைத் தொடங்க, தொடக்க நிதியாக ரூ.75,000 வாழ்ந்து காட்டுவோம் திட்டத்தின் கீழ் வழங்கப்பட்டது.
வாழ்ந்து காட்டுவோம் திட்டத்தின் வழிகாட்டுதலில் இராமாநாதபுரம் ஊராட்சி அளவிலான கூட்டமைப்பின் சார்பில் நரியம்பள்ளி கிராமத்தில் சமுதாயப் பயிற்றுநர் கலாமணி, நாட்டுக்கோழி வளர்ப்பு குறித்த பயிற்சியை வழங்கினார். என்னுடன் சேர்ந்து எங்கள் உழவர் குழுவைச் சேர்ந்த 30 பேர் பயிற்சி பெற்றனர். பாதுகாப்பான முறையில் நாட்டுக்கோழி வளர்ப்பு, நோய்த்தொற்றுகளைச் சரிசெய்யும் வழிமுறைகள், குஞ்சு பொறிக்கும் முறை போன்றவை குறித்துப் பயிற்சி அளிக்கப்பட்டது.
நான் கற்றுக்கொண்டதை எங்கள் குழுவில் உள்ள உறுப்பினர்களுக்கும் கற்றுக்கொடுத்தேன். எங்கள் தோட்டத்தில் நாட்டுக்கோழி வளர்த்து, நாட்டுக்கோழி உற்பத்தியில் எவரும் எட்டாத உயரத்தை அடைந்த இரும்புப் பெண்மணி என்று பெருமிதத்துடன் மகிழ்ச்சி அடைகிறேன். CFS பயிற்சிக்கு வழிகாட்டியாக இருக்கும் இராமநாதபுரம் உழவர் உற்பத்தியாளர் குழுவுக்கும் இப்படி ஒரு வாய்ப்பை அளித்துப் பயிற்சி பெற ஏற்பாடு செய்துகொடுத்த வாழ்ந்து காட்டுவோம் திட்டத்துக்கும் நன்றி!
மண்பாண்டத்தால் மலரும் வாழ்க்கை!: திருவாரூர் மாவட்டம், ஆலங்காடு ஊராட்சி, முத்துப் பேட்டை வட்டத்தில் மண்பாண்டம் செய்யக்கூடிய 20 பெண்கள் இணைந்து ‘ஸ்ரீவினாயகா மண்பாண்டங்கள் தொழில்குழு’ என்கிற பெயரில் 2014 முதல் சிறப்பாகச் செயல்பட்டுவருகிறோம். நாங்கள் அனைவரும் மகளிர் சுய உதவிக்குழுவில் உறுப்பினர்களாக இருக்கிறோம்.
எங்கள் தொழில் குழு மூலம் பொம்மைகள், பூந்தொட்டி வகைகள், பைப் வைத்த தண்ணீர் பானைகள், அடுப்பு வகைகள், விளையாட்டுப் பொம்மைகள், கும்பாபிஷேகப் பானைகள் உள்ளிட்ட பல்வேறு பொருள்களைத் தயாரித்து விற்பனை செய்துவருகிறோம். திருவிழா நாள்களில் உற்பத்தியும் விற்பனையும் அதிகரிக்கும்.
மூலப்பொருள்களுக்குச் சராசரியாக ரூ. 5.5 லட்சம் செலவாகிறது. இதில் ஆண்டுக்கு ரூ. 3,70,000 லாபமாகக் கிடைக்கிறது. இந்தக் குழுவின் மூலம் 40 குடும்பங்கள் பயன்பெற்று வருகின்றன. கரோனா ஊரடங்குக் காலத்தில் விற்பனையின்றி இருந்தபோது, இந்தத் தொழில் குழுவை மாவட்டச் செயல் அலுவலர் வாழ்ந்து காட்டுவோம் திட்டம் மூலம் நேரடியாகக் கள ஆய்வு செய்தார். அதைத் தொடர்ந்து திட்ட விதிமுறைகளுக்கு உள்பட்டு வாழ்ந்து காட்டுவோம் திட்டத்தின் மூலம் கோவிட்-19 சிறப்பு நிதி மூலம் ரூ1,50,000 தொடக்க நிதி வழங்கப்பட்டது.
இணை மானியத் திட்டம்: வாழ்ந்து காட்டுவோம் திட்டத்தின் மூலம் 30% மானியத்துடன் ரூ. 5,00,000 வங்கி இணைப்பும் பெறப்பட்டது. இந்நிதி மூலம் தொழிலை மேம்படுத்த உதவும் மூலப்பொருள்களையும் இதரப் பொருள்களையும் வாங்கினோம். இதனால், மாதம் ரூ.40,000 வரை வருமானம் ஈட்டி எங்களின் வாழ்வாதாரம் மேம்பட்டுவருகிறது. வாழ்ந்து காட்டுவோம் திட்டத்தின் மூலம் உரிய காலத்தில் கிடைத்த உதவி, எங்கள் தொழில் குழுவை மீட்டு மீண்டும் தொழில் செய்ய பெரும் உதவியாக அமைந்தது. | இந்தத் திட்டம் குறித்த மேலதிக தகவல்களுக்கு: 1800 599 1600/155 330
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT
Be the first person to comment