Last Updated : 08 Jul, 2018 10:45 AM

 

Published : 08 Jul 2018 10:45 AM
Last Updated : 08 Jul 2018 10:45 AM

பெண்கள் 360: கடவுள் தந்த பரிசு

 

ஸ்

னோலின் என்றால் ‘கடவுள் தந்த பரிசு’ என்று பொருள். ஸ்னோலின் என்பதைவிட ‘வாயில் சுடப்பட்டு இறந்த மாணவி’ என்றால்தான் பலருக்கும் தெரியும். 18 வயதே நிரம்பிய மாணவி, தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை எதிர்ப்புப் போராட்டத்தின்போது நடந்த துப்பாக்கிச் சூட்டில் கொல்லப்பட்டார். அவர் எழுதிய கவிதைகள், ‘ஸ்னோலின் நாட்குறிப்புகள்’ என்ற பெயரில் புத்தகமாக வெளியிடப்பட்டுள்ளன. ஸ்னோலினின் உயிர் புத்தகத்தின் ஒவ்வொரு வரியிலும் கலந்திருப்பதால் புத்தகம் உயிர்ப்புடன் வெளிவந்திருக்கிறது.

snowlin

ஸ்னோலின் நாட்குறிப்புகள்

வெளியீடு: பாரதி புத்தகாலயம்

7, இளங்கோ சாலை, தேனாம்பேட்டை, சென்னை - 600 018

தொலைபேசி: 044 - 2433 2924.

 

எல்லையற்றநினைவுகள்

பெக்கி விட்சன், நாசாவின் விண்வெளி வீராங்கனை. 58 வயதாகும் இவர், அதிக நாட்கள் விண்வெளியில் பணிபுரிந்தவர் என்ற சாதனைக்குச் சொந்தக்காரர். விண்வெளியில் 665 நாட்களுக்கு அவர் பணிபுரிந்துள்ளார். பத்து முறை விண்வெளி நடைப்பயணம் (ஸ்பேஸ் வாக்) சென்றுள்ளார்.

2009 முதல் 2012 வரை விண்வெளி வீரர்களின் தலைவராக இருந்துள்ளார். விண்வெளி நிலையத்தின் தலைவராக இரண்டு முறை இருந்துள்ளார். அவரது மூன்று சர்வதேச விண்வெளிப் பயணங்களும் சாதனைப் பயணங்களே. சென்ற மாதம் ஓய்வுபெற்ற அவரது பயண நினைவுகள் இந்த உலகின் எல்லைக்கு அப்பாற்பட்டவை.

துயரத்தை மீறிய வெற்றி

இந்தியாவையே உலுக்கிய ‘மது’வின் மரணத்தை அவ்வளவு சீக்கிரம் யாரும் மறந்துவிட முடியாது. மதுவின் கொலை கொடூரமானது. உணவைத் திருடியிருப்பார் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் பொதுமக்களால் அவர் அடித்துக் கொல்லப்பட்டார். இந்நிலையில் கேரளக் காவல்துறையில் கடந்த திங்களன்று பழங்குடி இனத்தைச் சார்ந்த சந்திரிகா காவலராக நியமிக்கப்பட்டார். பிப்ரவரியில் நடந்த தகுதித் தேர்வில் அவர் கலந்துகொள்வதாக இல்லை. 16 வயது முதலே தச்சு வேலைக்குச் சென்று குடும்பத்தைக் காப்பாற்றிய அவருடைய சகோதரர் மது, தேர்வுக்கு முந்தைய நாள் கொலை செய்யப்பட்டிருந்தார். சுற்றத்தினரின் வற்புறுத்தலால் தாள முடியாத துயரத்துடனே தகுதித் தேர்வில் சந்திரிகா கலந்துகொண்டார். “நான் காவலராக வேண்டும் என்பது என் சகோதரரின் கனவு. இப்போது அதை நிறைவேற்றிவிட்டேன்” எனக் கண்ணீர் ததும்ப சந்திரிகா சொல்கிறார்.

விண்ணில் பறந்த முதல் பெண்

பெண்களின் மன உறுதிக்கும் சாதனைகளுக்கும் எல்லை இல்லை என்பதை நிரூபித்தவர் ஏமி ஜான்சன். விமானம் ஓட்ட வேண்டும் என்பது ஏமியின் சிறுவயது கனவு. அந்தக் கனவு காதலாக மாற, ஒரு பழைய விமானத்தை வாங்கிப் பறந்தார். 1930-ல் இங்கிலாந்தில் இருந்து ஆஸ்திரேலியாவுக்குத் தனியாகப் பறந்தது அவரது முதல் சாதனை. அதன்பின் பல நீண்டதூர சாதனைப் பயணங்களை மேற்கொண்டார். தனது கடைசிப் பயணத்தின்போது தேம்ஸ் நதியில் மூழ்கினார். ஏமியைக் கவுரவிக்கும்விதமாக, அவரது 115-வது பிறந்த நாளின் போது சிறப்பு டூடுலை கூகுள் வெளியிட்டது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x