Published : 01 Jul 2018 12:16 PM
Last Updated : 01 Jul 2018 12:16 PM
இ ந்தியா போன்ற மக்கள்தொகை மிகுந்த நாடுகளில் குழந்தைக் கடத்தல் மிகச் சாதாரணமாகிவிட்டது. ஆண்டுதோறும் பல்லாயிரக்கணக்கான குழந்தைகள் கடத்தப்படுவதாகப் புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. பெரும்பாலானவர்கள், பெற்றோரால் தவறவிடப்பட்டவர்கள் அல்லது வீட்டிலிருந்து கோபத்தில் வெளியேறியவர்கள். இப்படிக் குடும்பத்தைவிட்டுப் பிரிந்த குழந்தைகள் மீண்டும் குடும்பத்தினருடன் இணைவது மிகவும் குறைவு.
இப்படிக் காணாமல்போன குழந்தைகளை மீட்டு அவர்களுடைய பெற்றோரிடம் ஒப்படைக்கும் பணியை இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக ஒரு ரயில்வே போலீஸ் அதிகாரி செய்துவருகிறார். இரண்டு ஆண்டுகளில் 900-க்கும் அதிகமான குழந்தைகளை மீட்பது சவாலான காரியம். ஆனால், மும்பை சத்ரபதி சிவாஜி ரயில் நிலையத்தில் பணியாற்றும் துணை ஆய்வாளர் ரேகா மிஸ்ரா அதைச் சாதித்திருக்கிறார்.
சேவைக்குக் கிடைத்த அங்கீகாரம்
உத்தரப்பிரதேசம், அலகாபாத்தைப் பூர்வீகமாகக்கொண்ட ரேகா மிஸ்ரா, 2014-ல் ரயில்வே பாதுகாப்புப் படையில் வேலைக்குச் சேர்ந்தார். மும்பை சத்ரபதி சிவாஜி ரயில் நிலையத்தில் 2015-ல் பொறுப்பேற்றுக்கொண்டார். தன் அன்றாடப் பணிகளுக்கிடையே, ரயில் நிலையத்தில் ஆதரவின்றித் தவிக்கும் குழந்தைகளை மீட்டு அவர்களுக்குத் தேவையான உதவிகளை வழங்குவார்.
பொதுவாகக் காலை எட்டு மணிக்கெல்லாம் பரபரப்பாகச் செயல்படத் தொடங்கும் நேரத்திலேயே மும்பை சத்ரபதி சிவாஜி ரயில் நிலையத்துக்கு வந்துவிடும் ரேகா, இரவு எட்டு மணிக்கு மேல்தான் வீடு திரும்புகிறார். 2016-ல் ஆண்டில் மட்டும் சுமார் 434 குழந்தைகளை மீட்டு அவர்களது குடும்பத்தினரிடம் ஒப்படைத்த ரேகா, 2017-ல் 500க்கும் மேற்பட்ட குழந்தைகளைக் காப்பாற்றியிருக்கிறார்.
இரண்டே ஆண்டுகளில் 950-க்கும் அதிகமான குழந்தைகளை மீட்டு ரயில்வே துறைக்கு பெருமை சேர்த்த ரேகா மிஸ்ராவைக் கவுரவிக்கும் விதமாக சி.பி.எஸ்.இ. பத்தாம் வகுப்புப் பாடப் புத்தகத்தில் அவரைப் பற்றிய பாடத்தை மகாராஷ்டிர அரசு சேர்த்திருக்கிறது. ரேகாவின் இந்த மீட்புப் பணிகளுக்கு அவருடைய குழுவினர் உறுதுணையாக இருக்கின்றனர்.
அன்பான அணுகுமுறை
இரண்டு ஆண்டு மீட்புப் பணி ரேகாவின் செயல்பாட்டையும் அணுகுமுறையையும் செம்மையாக்கியிருக்கிறது. ரயில் நிலையத்தில் இருக்கும் குழந்தைகளின் உடல் மொழி, உதவிக்காக ஏங்குவது, பசியில் வாடுவது போன்ற நுட்பமான உணர்வுகளை மிக எளிதில் அவர் கண்டுகொள்கிறார். அதனால் ஆதரவற்ற நிலையில் இருக்கும் குழந்தைகளை அவரால் அடையாளம் காண முடிகிறது. பல நேரம் மொழி முக்கியப் பிரச்சினையாக இருந்தாலும், தான் காட்டும் அன்பின் மூலம் சம்பந்தப்பட்ட குழந்தையின் மனத்தில் இடம்பிடித்து விடுகிறார் ரேகா.
குழந்தைகளைக் காப்பகத்தில் விட்டாலும், பெற்றோருடன் அனுப்பும்வரை சில குழந்தைகளை ரேகா அவ்வப்போது சந்தித்துப் பேசுவதும் வாடிக்கையாகிவிட்டது. “குழந்தைகள் நலக் காப்பகத்தில் ஒப்படைத்ததோடு கடமை முடிந்துவிட்டதாக நினைக்கக் கூடாது” என்று சொல்லும் ரேகா, அவர்கள் குழந்தைத் தொழிலாளர்களாக மாற்றப்படவோ, விருப்பமின்றி அங்கிருந்து வெளியேறவோ கூடாது என்பதிலும் அக்கறையோடு செயல்படுகிறார்.
ரேகாவின் குழுவினர், குழந்தையின் ஒளிப்படத்தைச் சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு, அவர்களுடைய பெற்றோரைக் கண்டறியும் முயற்சியில் ஈடுபடுகின்றனர். ஆனால், வெறும் 10 சதவீதக் குழந்தைகளே, அவர்களின் குடும்பத்தினருடன் மீண்டும் இணைய முடிகிறது என்று வேதனையாகக் கூறுகிறார் ரேகா மிஸ்ரா.
பொதுவாக, 13 முதல் 16 வயதுடையவர்கள்தான் வீட்டில் கோபித்துக்கொண்டு வெளியேறிவிடுவதாகச் சொல்லும் ரேகா, அப்படி வருபவர்களில் பெரும்பாலானவர்கள் மும்பை சத்ரபதி ரயில் நிலையத்தில் தஞ்சமடைகின்றனர் என்றும் சொல்கிறார். ஃபேஸ்புக் நண்பர்களைச் சந்தித்து உதவி கேட்கவோ தங்களுக்கு விருப்பமான நட்சத்திரத்தை நேரில் பார்க்க வேண்டும் என்பதற்காகவோ அவர்கள் மும்பைக்கு வருகிறார்கள் என்று கூறும் ரேகா, அவர்கள் குழந்தைக் கடத்தல் கும்பலின் கையில் சிக்காமல் காப்பாற்றி, பெற்றோரிடம் ஒப்படைப்பதில் ஆத்மார்த்தமான நிம்மதி கிடைப்பதாக நெகிழ்கிறார்.
மொழி கடந்த அக்கறை
சென்னையில் இருந்து கடத்தப்பட்ட மூன்று பெண்களை ரேகா மிஸ்ரா மீட்டிருக்கிறார். மும்பை ரயில் நிலையத்தில் மிகவும் அச்சத்துடன் நின்றிருந்த அந்தப் பெண்களுக்கு உதவி தேவைப்படுகிறது என்பதை ரேகா உணர்ந்தார். ஆனால், அந்தப் பெண்களுக்கு இந்தி தெரியாததால் சில சிக்கல்கள் இருந்தன. தமிழில் மட்டுமே பேசத் தெரிந்த அவர்களை, அவர்களுடைய பெற்றோரிடம் ஒப்படைக்கச் சிரமப்பட்டார் ரேகா. அவர்கள் எதற்காகக் கடத்தப்பட்டார்கள் என்பதை மொழிபெயர்ப்பாளர் உதவியோடு அறிந்துகொண்டார். பிறகு தமிழகத்தில் அவர்களுடைய பெற்றோர் கொடுத்திருந்த புகார் குறித்து கண்டறிந்து, அவர்களைக் குடும்பத்தினரோடு சேர்த்துவைத்தார்.
ரேகா மிஸ்ரா குறித்துப் பாடப் புத்தகத்தில் படிக்கும் மாணவர்கள், எதிர்காலத்தில் அவரைப் போலவே சமூக அக்கறையோடு செயல்படுவார்கள் எனத் தாங்கள் நம்புவதாக ரயில்வே வாரிய அதிகாரிகள் கூறியிருக்கின்றனர். ஆனால், ரேகா எதைப் பற்றியும் பெரிதாக அலட்டிக்கொள்ளாமல் தனது சேவையைத் தொடர்கிறார். எந்தக் குழந்தையும் தனது பால்ய வாழ்க்கையைத் தொலைத்துவிடக் கூடாது என்பதில் ரேகா உறுதியுடன் இருக்கிறார். காணாமல்போன தங்கள் குழந்தையை மீண்டும் சந்திக்கும் பெற்றோரின் கண்களில் மின்னும் நம்பிக்கையும் மகிழ்ச்சியும் தனக்கு உத்வேகத்தையும் மன திருப்தியையும் அளிப்பதாக ரேகா மிஸ்ரா சொல்கிறார். அதுதான் குழந்தைக் கடத்தலுக்கு எதிராக அவரைத் துடிப்புடன் செயல்படவைக்கிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT