Published : 01 Jul 2018 12:25 PM
Last Updated : 01 Jul 2018 12:25 PM
பொம்பளப் பிள்ளைங்களுக்கு எதுக்கு விளையாட்டு? வீட்டுக்கு வெளிய நீங்க ஏன் விளையாடணும்? வீட்டுக்குப் போய் உங்க அம்மாவுக்குச் சமையலில் உதவுங்க. போய், ஒழுங்காகப் படிங்க - விளையாடத் துடிக்கும் பெண்கள் மீது இது போன்ற கேள்விகளும் ஆலோசனைகளும் இன்றும் திணிக்கப்படுகின்றன. சமூகத்தின் மனங்களில் மட்டுமல்ல; விளையாட்டு மைதானத்திலும் பெண்கள் விளையாடுவதற்கு இடமில்லை.
மைதானமே போர்க்களம்
அப்படியே பெண்கள் விளையாடுவதற்கு இடம் கிடைத்தால், அங்கு அவர்களால் விளையாட முடியாது என்பதே நிதர்சனம். கேளிக்கைக்காகவோ வெறும் விளையாட்டுக்காகவோ பந்தை அவர்கள் உதைத்தால்கூட, ஏளனப் பார்வையாலும் எள்ளல் சொற்களாலும் உதைக்கப்பட்டு மைதானத்துக்கு வெளியே விரட்டப்படுகிறார்கள்.
இளம் பெண்களான பா, அஃப்ரின், ஃபர்ஹின், ஜோதி, நீது, திஸா, அனிதா, ஷோங்கிரோ, ஜல்பனா ஆகியோர் கால்பந்தின் மேல் தீராத காதல் கொண்டவர்கள். வெவ்வேறு மொழி பேசும், வெவ்வேறு கலாச்சாரத்தைச் சார்ந்தவர்கள். நம் நாட்டின் பல்வேறு பகுதிகளில் வசித்தும்கூட அவர்கள் கால்பந்து விளையாடத் தொடங்கியபோது ஒரே மாதிரியான பிரச்சினையையே சந்தித்தனர். ஒரு பெண் எப்படி விளையாடலாம் என்பதல்ல அந்தப் பிரச்சினை, பெண்கள் கால்பந்து விளையாடுவதற்கான தளமே இல்லை என்பதுதான் அவர்கள் சந்தித்த ஒரே பிரச்சினை.
அவர்களது அனுபவங்கள் எல்லாம் ஒரே மாதிரியான குரலில் பரிதாபகரமாக ஒலிக்கின்றன. அவர்களின் கதைகள் எல்லாம் ஒரே கதையின் வெவ்வேறு வடிவங்களே. ஆண்களால் தெருக்களில்கூட எளிதில் விளையாட முடியும். ஆனால், பெண்களின் நிலை அப்படியல்ல. பெண்கள் விளையாடச் செல்வது போருக்குச் செல்வதைப் போல இருக்கிறது.
தடை தாண்டிய பயணம்
கோவாவில் நடைபெற்ற ‘டிஸ்கவர் ஃபுட்பால்’ நிகழ்ச்சியில் இவர்கள் அனைவரும் சந்தித்தனர். அவர்கள் சந்திப்பது அதுதான் முதன்முறை. ஆனால், அவர்கள் கடந்துவந்த பாதையும் அந்தப் பாதையில் அவர்கள் பெற்ற அனுபவங்களும் அது அவர்களுக்குக் கற்றுக்கொடுத்த பாடங்களும் ஒன்றாக இருந்ததை அந்தச் சந்திப்பின்போது தெரிந்துகொண்டனர்.
அஃப்ரீனும் அவரது குழுவில் இருக்கும் 40-க்கும் மேற்பட்ட பெண்களும் மும்பராவைச் சுற்றி இருக்கும் பகுதிகளைச் சேர்ந்தவர்கள். கால்பந்து விளையாடும் தங்கள் உரிமையை நிலைநாட்டுவதற்காகவும் தடையின்றி விளையாடுவதற்காகவும் அவர்கள் ஒன்றிணைந்து 2012-ல் ‘பார்சாம் கலெக்டிவ்’ எனும் அமைப்பை ஏற்படுத்தினார்கள். ஆண்களின் ஏளனப் பேச்சுகளையும் சீண்டல்களையும் விசில்களையும் தகாத பார்வைகளையும் மீறி அவர்கள் விளையாடினார்கள். அவர்களுடைய சகோதரர்களாலோ பெற்றோராலோ உதைத்து இழுத்துச் செல்லப்பட்டு வீட்டில் பல நேரம் அவர்கள் அடைக்கப்பட்டுள்ளனர்.
கால்பந்தின் மீதான காதலாலும் எதிர்ப்புகளைச் சந்தித்துக் களைத்துப்போனதாலும் ஊரில் உள்ள பெரியவர்களையும் தலைவர்களையும் அவர்கள் சந்தித்துப் பேசினர். நீண்ட போரட்டத்துக்குப் பிறகே அவர்கள் விளையாடுவதற்கு அனுமதி கிடைத்தது. அதன்பின் விளையாடுவதை இன்றுவரை அவர்கள் நிறுத்தவே இல்லை. இப்போது ஒட்டுமொத்த மும்பராவும் அவர்களின் கால்பந்து அணியை நினைத்துப் பெருமைப்படுகிறது.
“நாங்கள் எதையும் சாதிக்க விரும்பவில்லை. வாரத்துக்கு ஒரு முறையோ இரண்டு முறையோ வெறுமனே விளையாடத்தான் விரும்பினோம். ஆனால், மைதானத்துக்குள் நுழையவே முடியாதபடி அவமானப்படுத்தப்பட்டோம். அதன் பிறகுதான் பெண்களுக்கு எனத் தனி மைதானம் கேட்டு நாங்கள் போராட்டத்தில் ஈடுபட்டோம்” என்கிறார் டெல்லியைச் சேர்ந்த ஜோதி. அந்தப் போராட்டத்தில் ஜோதியின் குழுவினர் வெற்றிபெற்றனர். இப்போது இந்திய மகளிர் கால்பந்து அணியில் இருக்கும் ஜோதி உலகெங்கும் சென்று விளையாடிவருகிறார்.
பெண்ணுக்குப் பெண்ணே உதவி
ஜோதியும் அவருடைய நண்பர்களும் டெல்லி மகளிர் கால்பந்து முன்னேற்றச் சங்கத்தை அமைத்தனர். அவர்கள் டெல்லி சரோஜினி நகர் மார்க்கெட்டுக்கு அருகில் இருக்கும் நகராட்சிப் பள்ளி மைதானத்தில் பெண்கள் ஆறு நாட்கள் கால்பந்து விளையாடுவதற்கு அனுமதி வாங்கிக் கொடுத்துள்ளனர்.
பெங்களூருவைச் சேர்ந்த நவநீதாவின் பாதை சற்று வித்தியாசமானது. “தனக்காக மட்டும் விளையாடுவது சுயநலம். பிறர் விளையாடுவதற்கும் உதவுவது மகிழ்ச்சியையும் திருப்தியையும் அளிக்கிறது” என்கிறார் நவநீதா. மூன்று ஆண்டுகளுக்கு முன்பு கால்பந்தின் மீதான தன் காதலைக் கண்டுகொண்ட அவர், ‘டிரீம் எ டிரீம்’ எனும் தொண்டு நிறுவனத்தில் இணைந்தார்.
ஆந்திராவில் உள்ள மல்காகங்கிரி கிராமத்தில் ஆசிரியராகப் பணிபுரியும் ஜால்பனாவும் நவநீதாவைப் போன்றே பிறருக்குப் பயிற்சியளிப்பதில் மகிழ்ச்சியடைகிறார்.
சமூகத்தின் அடித்தட்டில் வாழும் புறக்கணிக்கப்பட்ட பெண் குழந்தைகளுக்கு அவர் பயிற்சியளிக்கிறார். விளையாட்டு அந்தக் குழந்தைகளுக்கு ஆறுதலையும் தைரியத்தையும் அளிப்பதாக அவர் சொல்கிறார். தாங்கள் எதிர்கொண்ட தடைகளைத் தகர்த்தெறிந்த அவர்கள், இன்று மற்ற பெண்களுக்கு எதிரான தடைகளையும் தகர்த்தெறிய கரம்கோத்திருக்கின்றனர். ‘எங்கள் உடல், எங்கள் விளையாட்டு, எங்கள் உரிமை’ என்ற முழக்கத்துடன் வருங்கால வீரர்களுக்கு வலுவான பாதை அமைக்கின்றனர். பெண்ணுக்குப் பெண்ணே உதவி என்பதற்கு இவர்களின் எழுச்சிமிகு வெற்றியே சான்று.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT