Published : 15 Dec 2024 11:06 AM
Last Updated : 15 Dec 2024 11:06 AM

நானும் ஒரு முதலாளி | வாழ்ந்து காட்டுவோம்!

கைகூடிய கனவு: கலைவாணி, 34 வயதான இரு குழந்தைகளின் தாய், தனது திறமையை மேம்படுத்தி, தனது குடும்ப நிலையை அடுத்த கட்டத்திற்கு முன்னேற்ற விரும்பினார். ஆனால், குறிஞ்சிப்பாடி வட்டத்தில் உள்ள கல்குணம் கிராமத்தில் வேலைவாய்ப்புகள் குறைவு, கலைவாணி தனது கனவுகளை நனவாக்கும் வழிக்காகக் காத்திருந்தார்.

அப்போதுதான் ‘வாழ்ந்து காட்டுவோம்’ திட்டம் அவருக்கு அறிமுகமானது. அந்தத் திட்டத்தின் கீழ் செயல்படும் ‘சமுதாயத் திறன் பள்ளியில் (CSS) ஆரி எம்பிராய்டரி, தையல் பயிற்சிகளைப் பெற்றவர், தனது சுய தொழில் பயணத்தைத் தொடங்கினார். ரவிக்கை, சல்வார் தைத்தல், ஆரி எம்பிராய்டரி செய்து கொடுத்தல் எனக் கடுமையாக உழைத்து, மாதம் ரூ.20,000 வருமானம் பெறத் தொடங்கினார். இது அவரது குடும்ப நிதி நிலையை அடுத்த கட்டத்திற்கு உயர்த்தியது.

கலைவாணி தன்னைப் போலவே மற்ற பெண்களும் முன்னேறி, பொருளாதாரச் சுதந்திரம் அடைய ஊக்குவிக்க வேண்டும் என நினைத்தார். அதற்காக ‘A.K. Sakthi Success Tailoring and Aari Embroidery Training Centre’ என்கிற மையத்தைத் தொடங்கினார். இதன் மூலம், 30 பெண்கள் பயிற்சி பெற்று அவர்களில் பலர் சுயதொழில் முனைவோர்களாக உருவாகினர். இப்போது கலைவாணியின் மாத வருமானம் ரூ.35,000 ஆக உயர்ந்திருக்கிறது. அவர் தனது மையத்தில் பணியாளர் ஒருவரை மாதம் ரூ.8,000 ஊதியத்துக்குப் பணியமர்த்தும் அளவுக்கு முன்னேறியிருக்கிறார்.

‘வாழ்ந்து காட்டுவோம்’ திட்டத்தின் மூலம், தனது முயற்சி மற்றும் திறன்களை மேம்படுத்தியதன் மூலம், தனது குடும்ப வளர்ச்சிக்கும் சமூக வளர்ச்சிக்கும் முன்னுதாரணமாகத் திகழ்கிறார் கலைவாணி.

நானும் ஒரு முதலாளி: ஓர் ஆணின் வெற்றிக்குப் பின்னால் ஒரு பெண் இருப்பார் என்பார்கள். அதே போல, ஒவ்வொரு பெண்ணின் வெற்றிக்குப் பின்னாலும் ‘வாழ்ந்து காட்டுவோம்’ திட்டம் உள்ளது. அதற்கு உதாரணம் திருப்பூர் மாவட்டம், திருப்பூர் வட்டாரம், பெருமாநல்லூர் ஊராட்சியில் வசித்து வரும் சௌந்தர்யா. 12ஆம் வகுப்பு வரை படித்துள்ளார். இவருக்குத் திருமணமாகி ஆறு வருடங்கள் ஆகின்றன. ஒரு பெண் குழந்தை உள்ளது. இவரின் கணவர் டிரைவராகப் பணிபுரிகிறார்.

மாத வருமானம் ரூ.10,000. இந்தச் சம்பளத்தை வைத்துக்கொண்டு பொருளாதாரச் சவால்களைச் சந்திக்க முடியாமல் தவித்தபோது சௌந்தர்யாவுக்கு அருகிலுள்ள கார்மெண்ட்ஸ்க்கு வேலைக்குச் செல்லவேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது. தினமும் காலை 8.30 மணி முதல் இரவு 8.30 மணி வரை வேலை இருக்கும். 12 மணிநேரம் வேலை செய்தாலும் ஊதியம் குறைவு. தினமும் 12 மணி நேரம் வேலை செய்துவிட்டுக் குடும்பத்தையும் கவனித்துக்கொள்ள முடியவில்லை. என்றாலும், சௌந்தர்யா வேலைக்குச் செல்ல வேண்டிய ஒரு நிர்ப்பந்தம்.

இப்படிக் கஷ்டப்பட்டுக் கொண்டிருந்தபோது 'வாழ்ந்து காட்டுவோம்' திட்டத்தின் மூலமாக காளிபாளையம் ஊராட்சியில் பேக்கரி கேக் தயாரிக்கும் பயிற்சி 15 நாள்கள் நடைபெற உள்ளது எனத் தொழில்சார் சமூக வல்லுநர் மூலம் சௌந்தர்யாவுக்குத் தகவல் கிடைத்தது. அவரும் பயிற்சியில் பங்கேற்று வெற்றிகரமாகப் பயிற்சியை முடித்து கேக் தயாரிக்கும் முறையைக் கற்றுக்கொண்டார்.

அவரது கிராமம், நகரத்துக்கு மிக அருகில் உள்ளதால், அங்கு அதிகமான பேக்கரிகள் உள்ளன. அதைக் கவனத்தில் கொண்டு வீட்டில் இருந்தபடியே அருகிலுள்ள பேக்கரிகளுக்கும், ஆர்டரின் பேரில் அனைத்து விசேஷங்களுக்கும் கேக் தயாரித்து விற்பனை செய்யத் தொடங்கினார் சௌந்தர்யா. இதன் மூலம் மாதம் ரூ.6,000 முதல் ரூ.8,000 வரை வருமானம் கிடைக்கிறது. இதில் வரும் வருமானத்தை வைத்து ரூ.18,000 மதிப்பிலான கேக் செய்யத் தேவையான இயந்திரத்தை (OTG oven) வாங்கியிருக்கிறார்.

மேலும், செலவு போக மீதமுள்ள தொகையைத் தனது வங்கிக் கணக்கில் சேமித்து வைக்கிறார். “இப்போது எனது குடும்பத்தைக் கவனிக்க போதுமான நேரம் கிடைப்பதோடு, இந்த வருமானம் எங்கள் குடும்பப் பொருளாதாரத்தைச் சமாளிக்க என் கணவருக்கு ஒரு கைத்தாங்கலாக இருப்பதை நினைத்துப் பெருமைப்படுகிறேன். நானும் ஒரு முதலாளி என்கிற அடையாளத்துடன் தலைநிமிர்ந்து நிற்கிறேன். என் வெற்றிக்குப் பின்னால் உதவிகரமாக இருக்கும் ‘வாழ்ந்து காட்டுவோம்’ திட்டத்திற்கு எனது மனமார்ந்த நன்றி!” என்கிறார் சௌந்தர்யா, இந்தத் திட்டம் குறித்த மேலதிக தகவல்களுக்கு: 1800 599 1600 / 155 330

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x