Last Updated : 29 Jul, 2018 09:39 AM

 

Published : 29 Jul 2018 09:39 AM
Last Updated : 29 Jul 2018 09:39 AM

பெண்கள் 360: நம்பிக்கை மனிதர்கள்

நாடு முழுவதும் பெண்களுக்கு எதிரான வன்முறைகள் அதிகரித்துவிட்டன. பெண்கள் தனியாகச் செல்லவே பயப்படும் நிலை நாடெங்கும் நிலவுகிறது. இந்நிலையில், கேரளாவைச் சேர்ந்த கோபகுமாரும் சைஜூவும் நம்பிக்கை ஒளியைப் பாய்ச்சுகிறார்கள். கேரள அரசுப் போக்குவரத்துக்கழகத்தில், கோபக்குமார் ஒட்டுநராகவும் சைஜூ நடத்துநராகவும் உள்ளனர். நள்ளிரவில் அவர்கள் பேருந்தில் அதிரா ஜெயன் எனும் இளம் பெண் ஏறியுள்ளார்.

அதிகாலை 1.30 மணிக்கு அவர் இறங்கிய சங்கரமங்கலம், ஆள் அரவமற்று இருந்துள்ளது. அதிராவை அழைத்துச் செல்ல அவருடைய சகோதரர் வரும்வரை, பேருந்தும் அங்கேயே நின்றுள்ளது. பெண்கள் பாதுகாப்பு குறித்து நம்பிக்கையளிக்கும் இந்தச் சம்பவத்துக்குக் காரணமானவர்கள் கோபக்குமாரும் சைஜூவும் மட்டுமல்ல, அந்தப் பேருந்தில் இருந்த பயணிகளும்தாம்.

முடிச்சுகளில்  மறையும் வல்லுறவு

கணவனுக்குத் தேவைப்படும்போது எல்லாம் மனைவி பாலுறவுக்குத் தயாராக இருக்க வேண்டும் என்பது திருமணத்தின் பொருள் அல்ல என்று டெல்லி உயர் நீதிமன்றம் கூறியுள்ளது. ‘மனைவியின் விருப்பம் இல்லாமல் கணவன் வலுக்கட்டாயமாக உறவு கொண்டால் அதுவும் வல்லுறவே. திருமண உறவில் வல்லுறவு நிகழ்ந்தால் அதைத் தண்டனைக்குரியதாக மாற்றும் வகையில் சட்டத் திருத்தம் வேண்டும்’ என  டெல்லி உயர் நீதிமன்றத்தில் பொது நல மனு தாக்கல் செய்யப்பட்டது. மனுவை விசாரித்த டெல்லி உயர் நீதிமன்ற தற்காலிகத் தலைமை நீதிபதி கீதா மிட்டல், சி. ஹரி ஷங்கர் அடங்கிய அமர்வு இந்தக் கருத்தைத் தெரிவித்துள்ளது.

பாலின பேதத்தை வீழ்த்தியவர்

யூகோ ஃபூஜி, ஜப்பானைச் சேர்ந்த ஜூடோ வீராங்கனை. எதிராளியைத் தூக்கித் தரையில்  வீழ்த்த வேண்டியவர், பாலின பேதத்தைத் தரையோடு தரையாக வீழ்த்தியுள்ளார். 30 ஆண்டுகளுக்கு முன் அவர் பங்கேற்ற முதல் ஜூடோ   போட்டியில் ஒரு சிறுவனால் தூக்கி எறியப்பட்டார். ஜூடோவை மீண்டும் தான் பழகப் போவதில்லை என்று அப்போது அவர் முடிவெடுத்தார். ஆனால், இன்று பிரேசிலின் ஆண்கள் ஜூடோ பிரிவின் தலைமைப் பயிற்சியாளராக நியமிக்கப்பட்ட முதல் பெண் என்ற சாதனையை யூகோ படைத்துள்ளார். ஜூடோவில் பெண்கள் பிரிவிலேயே பெண் பயிற்சியாளர் நியமிக்கப்படுவது அரிது. இந்த நிலையில் ஆண்கள் பிரிவின் பயிற்சியாளராக யூகோ நியமிக்கப்பட்டுள்ளது நல்லதொரு மாற்றம்.

பாதுகாப்பில்லாத சென்னையில் விளையடமாட்டேன்

பெண்களுக்குப் பாதுகாப்பு இல்லாத நாடுகளின் பட்டியலில் இந்தியா முதலிடத்தில் இருப்பதாக தாம்சன் ராய்ட்டர்ஸ் நிறுவனம் வெளியிட்ட ஆய்வு முடிவை மத்திய அரசு மறுத்தது. ஆனால், நாடு முழுவதும் குழந்தைகளும் பெண்களும் தொடர்ந்து அச்சுறுத்தலுக்கு ஆளாகிவருவதைத்தான் அடுத்தடுத்து நடக்கும் சம்பவங்கள் உணர்த்துகின்றன. அதன் தொடர்ச்சியாக, சென்னையில் 11 வயது சிறுமியை 22-க்கும் மேற்பட்டோர் ஆறு மாதங்களாகப் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாக்கியது நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

இந்தியாவில் பெண்களுக்குப் பாதுகாப்பில்லாத சூழல் நிலவுவதைக் காரணம்காட்டி சுவிட்சர்லாந்தின் முன்னணி வீராங்கனையான அம்பர் அலின்கெக்ஸ், சென்னையில் தற்போது நடந்துவரும் உலக ஜூனியர் ஸ்குவாஷ் போட்டியில் பங்கேற்க முடியாது எனத் தெரிவித்துள்ளார். பெண்களுக்குப் பாதுகாப்பான நகரம், அமைதிப் பூங்கா என்பது போன்ற சென்னையின் பழம்பெருமைகள் எல்லாம் அவரது அந்த அறிவிப்பால் காற்றில் கரைந்துவிட்டன.

நாப்கினுக்கு ஏன் ஜிஎஸ்டி?

சர்மீனா, ஜவாஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் பிஎச்டி படித்துவருகிறார். சானிட்டரி நாப்கின்களுக்கு விதிக்கப்பட்ட ஜிஎஸ்டி வரியை எதிர்த்து டெல்லி உயர் நீதிமன்றத்தில் அவர் வழக்குத் தொடர்ந்திருந்தார். பொட்டு, குங்குமம், மஸ்காரா, கான்டம் போன்றவற்றுக்கு வரி விதிக்கப்படாதபோது, சானிட்டரி நாப்கினுக்கு மட்டும் ஜிஎஸ்டி  விதிக்கப்பட்டது ஏன் என்பதே 27 வயது சர்மீனாவின் கேள்வி. அந்த வழக்கை விசாரணைக்கு எடுத்துக்கொண்ட நீதிமன்றம், 31 உறுப்பினர்கள் இருக்கும் ஜிஎஸ்டி கவுன்சிலில் ஏன் ஒரு பெண்கூட இடம்பெறவில்லை எனக் கேள்வி எழுப்பியது.

மேலும், நாப்கின்களுக்கு ஜிஎஸ்டி வரி விதிக்கப்படுவதற்கு முன் பெண்கள், குழந்தைகள் நல அமைச்சகத்திடம் ஆலோசிக்கப்பட்டதா என்றும் நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். இந்நிலையில், சனிக்கிழமை கூடிய ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் சானிட்டரி நாப்கின்கள் மீதான வரியை ரத்து செய்வது என முடிவெடுக்கப்பட்டது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x