Published : 18 Jun 2018 02:31 PM
Last Updated : 18 Jun 2018 02:31 PM
நாட்டை வல்லரசாக்குவது குறித்து மார்தட்டிப் பேசும் தலைவர்களுக்கு நல்லரசு தரும் எண்ணமும் திராணியும் இல்லை. செய்தித்தாள்களை ஆக்கிரமிக்கும் வல்லுறவுச் செய்திகள் அதைத்தான் நமக்கு வெட்டவெளிச்சமாக்குகின்றன. பெண்ணுக்கு எதிராக இழைக்கப்படும் ஒவ்வோர் அநீதியின் போதும் நாம் மறக்காமல் மெழுகுவர்த்தி ஏந்தி ஊர்வலம் போகிறோம், கண்டனக் கூட்டம் நடத்துகிறோம். பிறகு அவரவர் வேலையைப் பார்க்கப் புறப்பட்டுவிடுகிறோம்.
அதன்பின், பாதிக்கப்பட்ட பெண்களின் வேதனை அவர்களுடையதாக மட்டும் காலம் முழுவதும் தொடர்ந்தபடி இருக்கும். ‘மாதரம்’ எனும் மூன்று நிமிடக் குறும்படம், வல்லுறவுக்கு உள்ளாக்கப்படும் பெண்களின் வேதனையைச் சொல்கிறது. பெண்கள் மீது நிகழ்த்தப்படும் வல்லுறவுக்கு எதிராக, நம் சமூகத்தில் ஓர் அடித்தளத்தை அமைக்க முயல்கிறது.
இந்தக் குறும்படத்தின் இயக்குநர் அஜித் அசோக், கோயம்புத்தூரைச் சேர்ந்தவர். இந்த மூன்று நிமிடக் குறும்படத்தின் நாயகி, ஜோதி கிசஞ்சே ஆஜ்ஜே. 24 வயதாகும் இவரது உயரம் 23 அங்குலம். இன்றைய தேதியில் உலகில் வாழும் மிகவும் குள்ளமான பெண் அவர்தான். ஐந்து கிராம் அளவுக்கு மேல் அவரால் சாப்பிட முடியாது. நடப்பதும் சிரமம். காற்று கொஞ்சம் பலமாக வீசினாலே போதும், கீழே விழுந்துவிடுவார். உடல் வலிமையற்று இருந்தாலும், அவரது மனம் வலிமையாகவே உள்ளது. அவரது வாழ்க்கையே அதற்குச் சான்று. நாக்பூரைப் பூர்வீகமாகக்கொண்ட ஜோதி, தொழிலதிபராகவும் தொலைக்காட்சி நட்சத்திரமாகவும் முத்திரை பதித்துப் பரபரப்பாகச் சுழல்கிறார்.
பலி கொடுக்கப்படும் உடல்
ஜோதி நாயகியாக நடித்த ‘மாதரம்’ என்ன சொல்கிறது? ஆதரவற்ற குள்ளமான பெண்ணான ஜோதிக்குப் பக்கத்து வீட்டுப் பெண்ணே துணை. அவர் அளிக்கும் ஊக்கத்தில், இரண்டு குழந்தைகளைத் தத்தெடுத்து வளர்க்கிறார். காலம் இனிதாகக் கழிகிறது. இரண்டு வயதுக்குள் அவரை உயரத்தில் மிஞ்சி வளரும் குழந்தைகள், விரைவில் பதின்பருவத்தை அடைகிறார்கள். அது ஒரு துரதிர்ஷ்டமான இரவு. வெளியே மழை கொட்டுகிறது. அவர்கள் வீட்டில் இரண்டு பேர் அத்துமீறி நுழைகிறார்கள். அழுக்குத்துணி போடும் கூடையினுள் ஜோதி சிறை பிடிக்கப்படுகிறார்.
பயத்தில் குழந்தைகள் அலறி அழுகிறார்கள். தப்பித்து ஓடுங்கள் என்று குழந்தைகளிடம் ஜோதி கதறுகிறார். குழந்தைகள் அந்தப் பக்கத்து வீட்டுப் பெண்ணின் துணையுடன் ஓடுகிறார்கள். துரத்துபவர்களிடமிருந்து தப்பியோட வழியில்லாமல் போகிறது. அந்நிலையில், குழந்தைகளை மறைவாகப் பதுங்கவைத்து, அந்தக் கொடூரர்களுக்குத் தனது உடலைப் பக்கத்து வீட்டுப் பெண் இரையாக்குகிறார். பிரசவ வலியில் கதறும் அந்தப் பெண்ணின் குரலோடு இணையும் குழந்தையின் வீறிடலோடு திரை இருள்கிறது.
நாம் கல்வியறிவில் முன்னேறிவிட்டோம், பொருளாதாரத்தில் வளர்ச்சியடைந்து விட்டோம் என்பது போன்ற தற்பெருமைகளை வாய்கிழியப் பேசுகிறோம். அந்தத் தற்பெருமை பேச்சின் வசீகர ஒலியில், சீரழிக்கப்படும் பெண்களின் அழுக்குரல் நம் காதுகளை எட்டாமலேயே போகிறது. அதைத்தான் ‘மாதரம்’ குறும்படமும் சொல்கிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT