Published : 17 Jun 2018 11:15 AM
Last Updated : 17 Jun 2018 11:15 AM
“பி
ஹார்ல ‘லவுண்டா நாச்’னு ஒரு கலை வடிவம் இருக்கு. அதுல பெண்கள் கிடையாது. ஆண்களே பெண் வேடம் போட்டு நடிப்பாங்க. அந்தக் கலை, போஜ்பூரி மொழியிலதான் நடத்தப்படுது. சினிமா, டி.வி., இணையம்னு இருக்கிற இந்தக் காலத்துல, அந்தக் கலை கொஞ்சம் கொஞ்சமா மறைஞ்சுட்டுவருது. இருந்தாலும், அந்தக் கலையை விடாம சிலர் ‘பெர்ஃபார்ம்’ பண்ணிட்டு இருக்காங்க. அவங்கள்ல ஒருத்தர்தான் ராம் சந்திர மாஞ்சி. அவருக்கு 90 வயசு. அவரை மையமா வெச்சுதான் ‘நாச் பிக்காரி நாச்’னு சமீபத்துல ஒரு ஆவணப்படம் பண்ணியிருக்கோம். ராம் சந்திர மாஞ்சிக்கு, இந்த வருஷம் சங்கீத நாடக அகாடமி விருது கிடைச்சிருக்கு. இப்பதான் அந்தத் தகவல் கிடைச்சுது!”
- மகிழ்ச்சியான தகவலுடன் பேசத் தொடங்கினார் ஷில்பி குலாட்டி. இவர், தேசிய விருது பெற்ற ஆவணப்பட இயக்குநர். டெல்லி ஜவாஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் ஊடகவியல் துறை முனைவர் பட்ட ஆய்வு மாணவியாகவும் இருக்கிறார். இவரது சில படங்களை ‘மறுபக்கம்’ அமைப்பு கடந்த வாரம் சென்னையில் திரையிட்டது. அந்தத் திரையிடலுக்கு வந்திருந்தவருடன் சந்தித்து உரையாடியதிலிருந்து…
“எங்க குடும்பம் அகதிக் குடும்பம். பாகிஸ்தான்ல இருக்கற டேரா இஸ்மாயில் கான் பகுதிதான் எங்க பூர்வீகம். அந்தப் பகுதியைச் சார்ந்தவங்களை ‘டேராவாலி’ன்னு சொல்லுவாங்க. இந்தியா - பாகிஸ்தான் பிரிவினைக்குப் பிறகு என் தாத்தா டெல்லிக்கு வந்துட்டார். நான் பிறந்தது, வளர்ந்தது எல்லாமே டெல்லியிலதான். ஆனா, என்னோட வேர்கள் டேரா இஸ்மாயில் கான்லதான் இருக்கு!” என்று சொல்பவரின் முதல் ஆவணப்படம் (டேரே தூன் டெல்லி) அந்த டேராவாலிகளைப் பற்றியதுதான்.
நாடகம் தந்த பார்வை
பள்ளி, கல்லூரி நாட்களிலேயே இவருக்கு நாடகங்கள் மேல் ஆர்வம். டெல்லி லேடி ஸ்ரீராம் கல்லூரியில் ஆங்கில இலக்கியம் படித்தார். மேடை மற்றும் வீதி நாடகங்களில் நடித்தார். பெரும்பாலான பதின்பருவத்தினரைப் போல அடுத்து என்ன என்ற குழப்பம் ஷில்பிக்கும் இருந்தது. பிறகு கல்லூரி முடித்தவுடன் ‘பண்டீஸ்’ எனும் பெண்ணிய நாடகக் குழுவில் சேர்ந்தார்.
“1993-ல் ஆரம்பிக்கப்பட்ட அந்தக் குழுவில் 2007-ல் இருந்து இருக்கேன். குஜராத், காஷ்மீர் மாதிரி வன்முறை பாதிப்புக்கு உள்ளான பகுதிகள்ல இருக்கிற பெண்களுக்கு நாடகப் பயிற்சியளிப்போம். அப்போ அவங்ககிட்ட பேசினப்ப அவங்க உணர்வுகளைப் புரிஞ்சுக்க முடிஞ்சுது. அந்த மாதிரியான முயற்சிகள், அனுபவங்கள் மூலமா சமூகம், அரசியல் மீதான பார்வையும் சிந்தனையும் மாறுச்சு” என்கிறார் ஷில்பி.
பட்ட மேற்படிப்புக்காக மும்பையில் உள்ள டாடா இன்ஸ்டிடியூட் ஆஃப் சோஷியல் சயின்சஸ் நிறுவனத்தில் சேர்ந்தார்.
“அங்க மீடியா பத்தி படிச்சேன். திரைப்பட இயக்குநர்கள் பலரைச் சந்திக்கிற வாய்ப்பு கிடைச்சுது. நிறைய படங்கள் பார்த்தோம். சாலை, ஓட்டல், டீக்கடை மாதிரியான பொது இடங்கள்ல பெண்களுக்கு இருக்கிற சுதந்திரத்தைப் பத்தி ‘இன்சைட் அவுட்’னு மாணவர்களா இருந்தபோதே ஒரு ஆவணப்படம் எடுத்தோம். அந்தப் படத்தை எடுக்கிறதுக்கு ஷில்பா பட்கே என்பவர் எழுதுன ‘ஒய் லாய்ட்டர்?’ங்கிற புத்தகம்தான் அடிப்படையா இருந்துச்சு” என்பவரின், இரண்டாவது படம் தேசிய விருது பெற்றது.
“அந்தப் படத்தோட பேரு ‘கிஸ்ஸா – இ – பார்ஸி’. டாடா இன்ஸ்டிடியூட்ல என் தோழி திவ்யா, புராஜெக்ட் வொர்க்குக்காக பார்ஸி இனத்துல இருக்கிற பெண்களின் நிலை தொடர்பா நிறைய ஆய்வுகள் செஞ்சு வெச்சிருந்தாங்க. நாங்க ரெண்டு பேரும் அடுத்து என்ன படம் பண்ணலாம்னு யோசிச்சப்போ, அந்த ஆய்வையே கொஞ்சம் விரிவான படமாக்க முடிவு பண்ணோம். அந்தப் படத்துக்கு 62-வது தேசியத் திரைப்பட விழாவுல ‘சிறந்த இனவரைவியல்/மானுடவியல் திரைப்படத்துக்கான விருது’ கிடைச்சுது” என்பவர், மூன்றாவதாக பஞ்சாபில் போதை மருந்துக்கு அடிமையாகி மீண்டு வந்தவர்களைப் பற்றி ‘லாக் அண்ட் கீ’ எனும் படத்தை இயக்கினார்.
ஆவணப்படுத்தப்பட்ட ஆளுமை
“நம் நாடு முழுக்க வாய்மொழிக் கதைகள் நிறைய இருக்கு. ஒரு விதத்துல அவை அத்தனையுமே வரலாறுதான். ஆனா, அதை ஆவணப்படுத்துறதுல பலருக்கும் ஆர்வமில்லை. அந்த வரலாறுகளை என் படங்கள் மூலமா ஆவணப்படுத்த விரும்புறேன்” என்பவர், தன்னுடைய சமீபத்திய படமான ‘நாச் பிக்காரி நாச்’ படத்தைப் பற்றி விரிவாகப் பேசினார்.
“மலையாள இலக்கிய உலகத்துக்கு பஷீர் எப்படியோ, இந்தி இலக்கியத்துக்கு பிரேம்சந்த் எப்படியோ, அந்த மாதிரி போஜ்பூரி இலக்கியத்துக்கு பிக்காரி தாக்கூர் (1887 – 1971) ரொம்ப முக்கியமானவர். ஆனா, அவரைப் பத்தி முறையான ஆவணம் எதுவும் இதுவரை பொதுவெளியில் இல்லை. அவர் 12 நாடகங்களை எழுதியிருக்கார். எழுதியிருக்கார்னு சொல்றதைவிட ‘பெர்ஃபார்ம்’ பண்ணியிருக்கார்னு சொல்றதுதான் சரி. அவர் தொடங்கி வெச்சதுதான் இந்த ‘லவுண்டா நாச்’ங்கிற கலை. அந்தக் கலையோட 100-வது ஆண்டு விழா போன வருஷம் நடந்துச்சு. அதையொட்டி இந்தப் படத்தைப் பண்ணோம்” என்று சொல்லிப் புன்னகைக்கிறார் ஷில்பி.
படம்: ந.வினோத் குமார்
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT