Published : 17 Jun 2018 11:15 AM
Last Updated : 17 Jun 2018 11:15 AM
வாக்குரிமைப் போராளி
மில்லிசெண்ட் ஃபாசெட், 19-ம் நூற்றாண்டில் பெண்ணியத்தின் அடையாளமாகத் திகழ்ந்தவர். அறிஞர், அரசியல் தலைவர், சமூக ஆர்வலர், எழுத்தாளர் எனப் பன்முகம் கொண்டவர். பெண் வாக்குரிமைக்கான போராட்டத்தை முன்னின்று நடத்தினார். அதுவே இன்றும் அவரது முக்கிய அடையாளம். 1847 ஜூன் 11 அன்று இங்கிலாந்தில் உள்ள ஆல்ட்பிர்க்கில் பிறந்தார். வாழ்நாளின் பெரும்பகுதியைப் பெண்ணுரிமைப் போராட்டத்துக்காகவே செலவிட்டார்.
அவருடைய அக்கா எலிசபெத், இங்கிலாந்தின் முதல் பெண் மருத்துவர். 1867-ல் ஹென்றி எனும் பெண்ணுரிமைப் போராளியை மில்லிசெண்ட் மணந்தார். மில்லிசெண்ட் முன்னெடுத்த போராட்டங்கள் பலவும் வெற்றி பெறவில்லை. ஆனாலும், களைப்பில்லாமல் களப்பணியாற்றினார். பெண்கள் பொதுவாழ்வில் நுழையாதவரைக்கும் சமூகத்தில் நிலவும் ஒழுக்கக் கேடுகள் ஒழியாது என்று அவர் நம்பினார். அந்த நம்பிக்கைக்காகவே 82 ஆண்டுகள் வாழ்ந்தார். அவரது 171-வது பிறந்தநாளை முன்னிட்டு டூடுல் வெளியிட்டுக் கவுரவித்தது கூகுள்.
சுகமான சுமை
அறிவு சார்ந்த வேலைகளில் பெண்கள், ஆண்களை மிஞ்சிவிட்டனர். ஆனால், உடலுழைப்பு சார்ந்த வேலைகளில் இன்றும் ஆண்களே கோலோச்சுகின்றனர். உடல் அளவில் பெண்கள் பலவீனமானவர்கள் என்ற மூடநம்பிக்கையே இதற்குக் காரணம். ஆனால், அந்த எண்ணத்தை ஜெய்ப்பூரைச் சேர்ந்த மஞ்சு தேவி முறியடித்துள்ளார். மஞ்சு தேவிக்கு மூன்று குழந்தைகள். கணவரை இழந்து 10 ஆண்டுகள் ஆகின்றன. கணவரது மறைவுக்குப் பின் குடும்பச் சுமை முழுவதும் மஞ்சு மீது விழுந்தது. கணவர் செய்த கூலி வேலையை எடுத்துச் செய்யத் தீர்மானித்தார்.
தற்போது ஜெய்ப்பூர் ரயில் நிலையத்தில் சுமைத்தூக்கும் கூலித் தொழிலாளியாக இருக்கும் மஞ்சு தேவி, இந்திய ரயில் நிலையப் பணிகளில் ஈடுபட்ட முதல் பெண் சுமைத்தூக்கும் கூலித் தொழிலாளி. ஆண்கள் மட்டுமே வேலை செய்யும் இடத்தில், தன் குழந்தைகளின் வாழ்வுக்காக ஆண்களுக்கு நிகராகச் சுமைகளைச் சுமக்கிறார் மஞ்சு தேவி. அவர் அணிந்திருக்கும் சீருடை அவரே வடிவமைத்தது. அவரது போர்ட்டர் அடையாள உரிமம் எண் 15. அவர் கணவரது அடையாள எண்ணும் அதுவே.
மறைந்து பார்க்கும் தகாத கண்கள்
தென்கொரியத் தலைநகர் சியோலில் மாபெரும் கண்டனப் போராட்டம் இந்த வாரம் நடந்தது. அதை நடத்தியவர்களும் பங்கேற்றவர்களும் பெண்களே. சுமார் 22,000 பெண்கள் கூடி நடத்திய அந்தப் போராட்டம், தகாத முறையில் உளவு பார்க்கும் வகையில் திருட்டு கேமராக்களை நிறுவும் வக்கிர மனம் படைத்தவர்களுக்கு எதிரானது. பெண்களின் தனிப்பட்ட வாழ்வை வேவு பார்க்கும் ஸ்பை கேமராக்கள், பெண்களின் சுயமரியாதைக்கு எதிரானவை.
பொதுக் கழிவறை, உடை மாற்றும் அறைகள், படிகள், இருக்கைகள், சில ஆண்களின் காலணிகள் என தென்கொரியா முழுவதும் பூற்றீசல் போன்று அந்த வகை கேமராக்கள் பரவியுள்ளன. இது தொடர்பாக ஒரு நாளுக்குச் சுமார் 18 வழக்குகள் பதிவுசெய்யப்படுகின்றன. இருந்தாலும், குற்றங்கள் குறைந்தபாடில்லை. ‘என் வாழ்க்கை உனக்கான பாலியல் படமல்ல’ எனும் பொருள்படும் பதாகைகளைச் ஏந்திக்கொண்டும் முழக்கங்கள் எழுப்பியபடியும் கொரியப் பெண்கள் ஊர்வலமாகச் சென்றனர்.
தலைமைப் பொறுப்பில் சென்னைப் பெண்
அமெரிக்காவின் முன்னணி நிறுவனமான ஜெனரல் மோட்டார்ஸ் நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரியாகத் தமிழகத்தைச் சேர்ந்த திவ்யா சூர்யதேவாரா பதவியேற்க உள்ளார். 39 வயது நிரம்பிய திவ்யா, சென்னைப் பல்கலைக்கழகத்தில் படித்தார். 22 வயதில் அமெரிக்காவில் எம்.பி.ஏ படித்து. 25 வயதில் ஜெனரல் மோட்டார்ஸ் நிறுவனத்தில் வேலைக்குச் சேர்ந்தார். 2017 முதல் இந்த நிறுவனத்தின் கார்ப்பரேட் நிதிப் பிரிவின் துணைத் தலைவராகச் செயல்பட்டு வருகிறார். 13 ஆண்டுகளாக இந்த நிறுவனத்தில் பல்வேறு பொறுப்புகளை வகித்த அவர், தற்போது தலைமைப் பொறுப்பை ஏற்கிறார். தனது பணிக்காலத்தின்போது குறிப்பிடத்தக்க சாதனைகளை நிகழ்த்தியவர் என்றும் இந்தப் பதவிக்கு அவர் தகுதியானவர் என்றும் ஜெனரல் மோட்டார்ஸ் நிறுவனம் திவ்யா குறித்து தெரிவித்துள்ளது.
ஈரானில் நடைபெறும் ஆசிய செஸ் சாம்பியன்ஷிப் போட்டிகளின்போது அவர்களது தேசிய அணியின் உடையையும் விளையாட்டு உடையையும் நான் அணிய வேண்டும் எனப் போட்டி ஏற்பாட்டாளர்கள் எதிர்பார்ப்பதை நான் புரிந்துகொள்கிறேன். ஆனால், விளையாட்டுகளில் மதக் குறியீடு கொண்ட உடைகளை அணிய நிர்பந்திப்பதை என்னால் ஏற்றுக்கொள்ள முடியாது.
அவர்கள் நாட்டில் இருக்கும் சட்டதிட்ட நிபந்தனை என் அடிப்படை உரிமை, பேச்சு சுதந்திரம், மதச் சுதந்திரம் ஆகியவற்றுக்கு எதிராக இருக்கிறது. தற்போதைய சூழ்நிலையில் என் உரிமைகளைக் காப்பாற்றுவதற்கான ஒரே வழி ஈரான் செல்லாமல் இருப்பதுதான்.
- சௌமியா சுவாமிநாதன், இந்திய செஸ் வீராங்கனை.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT