Last Updated : 10 Jun, 2018 11:25 AM

 

Published : 10 Jun 2018 11:25 AM
Last Updated : 10 Jun 2018 11:25 AM

போகிற போக்கில்: கோலமா, ஓவியமா?

இப்போதெல்லாம் கோலமிட்ட வாசல்களைப் பார்ப்பது அரிதாகிவிட்டது. வீட்டு விழாக்கள், பண்டிகைகள், மார்கழி மாதம் போன்ற முக்கிய நாட்களில் மட்டுமே சிலர் கோலம் போடுகிறார்கள். சென்னையைச் சேர்ந்த சாந்தி ஸ்ரீதரனுக்குக் கோலம் போடுவதில் ஆர்வம் அதிகம். அதைத் தன் பாட்டியிடமிருந்து கற்றுக்கொண்டார். அவர் வரையும் கோலங்கள், அவரை சர்வதேச அளவில் பிரபலமாக்கியுள்ளன. சாந்தியின் வீட்டு வாசலை ஒவ்வொரு நாளும் புதுப் புது கோலங்கள் அலங்கரிக்கின்றன. சமூக வலைத்தளங்கள் அந்த அழகுக் கோலங்களை உலகமெங்கும் எடுத்துச் செல்கின்றன.

பாட்டியால் கிடைக்கும் ‘லைக்ஸ்’

சாந்தி வரையும் கோலங்கள் கோலமா ஓவியமா என்ற ஆச்சரியத்தை ஏற்படுத்தத் தவறுவதிவில்லை. “கோலம் போடுற பழக்கம் ஆறாம் வகுப்பு படிச்சபோதே தொடங்கிருச்சு. பாட்டி போடும் கோலங்களைப் பார்த்தே கோலம் போடக் கத்துக்கிட்டேன். என்னைக் கவர்ந்த விஷயங்களை எல்லாம் கோலமாகப் போட்டுவிடுவேன். இதற்காக எந்த வகுப்புக்கும் நான் போகலை.

நான் போடும் கோலங்களை என் மகள்கள் ஃபேஸ்புக்கில் அப்லோடு பண்ணாங்க. அப்புறம் என் பெயரிலேயே ஃபேஸ்புக் பக்கத்தைத் தொடங்கினாங்க. அதில் எனக்குக் கிடைச்ச ஒவ்வொரு ‘லைக்’கும் எனக்கு ஊக்கத்தைக் கொடுத்தது. அந்த உற்சாகத்துல முன்னைவிட நிறைய புதுமையான கோலங்களைப் போட்டு ஃபேஸ்புக்ல போடுறேன்” என்கிறார் சாந்தி.

கண்ணுக்குக் குளிர்ச்சி, மனதுக்கு நிம்மதி

“ஒவ்வொரு முறையும் கோலம் போட்ட பிறகு அந்த நிமிடத்தில்தான் எந்த கலர் இடலாம் என்பதை முடிவுசெய்வேன். இப்பவும் காலை ஐந்து மணிக்கெல்லாம் எழுந்து கோலம் போடுறேன். கோலம் போட்டு முடிச்சதும் அதைக் கொஞ்ச நேரம் அமைதியாகப் பார்த்துக்கொண்டிருப்பேன். கோலமும் அதன் பக்கத்தில் ஒளிரும் விளக்கும் மனத்துக்கு நிம்மதியைத் தரும்” என்கிறார் சாந்தி.

 

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x