Last Updated : 03 Jun, 2018 10:23 AM

 

Published : 03 Jun 2018 10:23 AM
Last Updated : 03 Jun 2018 10:23 AM

வண்ணங்கள் ஏழு 07: இது இயற்கைக்கு மாறானதா?

சமூகத்தில் தங்களுக்கான இடத்தை உறுதி செய்யவும் ஒற்றுமையை வலியுறுத்தியும் இந்தியாவில் முதன்முதலாகக் கொல்கத்தாவில் 1999-ல் பாலினச் சிறுபான்மையினர் வானவில் பேரணி நடத்தினர். கடந்த 2009 ஜுன் 28 அன்று சென்னையில் முதன்முதலாக வானவில் பேரணி நடந்தது. அதே ஆண்டு ஜூலை மாதம் டெல்லி உயர் நீதிமன்றம், “வயது வந்த தனிப்பட்ட இருவரது விருப்பத்துடன் அவர்களுக்கு இடையேயான தன்பால் உடலுறவுக்கு எந்தவித தடையும் இல்லை” எனும் வரலாற்றுச் சிறப்பு மிக்க தீர்ப்பை அளித்தது. இந்தத் தீர்ப்பின் மூலம் பலரும் தங்களின் பாலியல் தேர்வை வெளிப்படையாக அறிவித்தனர். இந்த ஆண்டு 10-வது ஆண்டாக வானவில் பேரணி நடக்கவிருக்கிறது. சென்னை, பெங்களூரு, மும்பை என இந்தியாவில் 13 நகரங்களில் இந்தப் பேரணி நடத்தப்படுகிறது.

18 ஆண்டு சட்டப் போராட்டம்

தனி மனித சுதந்திரத்தில் தலையிடும் இந்திய தண்டனைச் சட்டப்பிரிவு 377, மனித உரிமைக்கு எதிரானது என்று கடந்த 2001 முதல் சட்டப் போராட்டம் நடத்திவருகிறது ‘நாஸ்’ (NAAZ) அறக்கட்டளை. இதன் நிறுவனர் அஞ்சலி கோபாலன், எய்ட்ஸ் குறித்த விழிப்புணர்வை அமெரிக்காவில் தொடங்கி இந்தியாவின் கிராமங்கள்வரை கொண்டு சேர்க்கச் செயல்பட்டவர். எய்ட்ஸ் விழிப்புணர்வு, விளிம்பு நிலை மக்களுக்கு ஆதரவாக போராடுவது என முழு நேர சமூகச் செயற்பாட்டாளராகத் தன் வாழ்க்கையை அர்ப்பணித்துக்கொண்டவர். இவரது சமூகப் பணிகளைப் பாராட்டி பிரான்ஸ் அரசு இவருக்கு ‘செவாலியே விருது’ வழங்கியது. டைம் பத்திரிகை தேர்ந்தெடுத்த 100 சக்தி வாய்ந்த பிரபலங்களில் இவரும் ஒருவர்.

நீதி கிடைக்குமா?

உச்ச நீதிமன்றம் 2013-ல், முன்னதாக டெல்லி உயர் நீதிமன்றம் அளித்த தீர்ப்பைத் தடை செய்து தீர்ப்பளித்தது. இந்திய தண்டனைச் சட்டப் பிரிவு 377 குறித்த விவாதம் இன்னும் நீடித்துக்கொண்டுதான் இருக்கிறது. ஐந்து நீதிபதிகள் அடங்கிய அமர்வு விசாரிக்கும் என்றும் உச்ச நீதிமன்றம் அறிவித்திருக்கிறது. 377-வது சட்டப்பிரிவைத் தன்பால் உறவாளருக்கு எதிரான சட்டமாக மட்டும் பார்க்கக் கூடாது. ஆண், பெண் தவிர்த்துப் பிற பாலினத்தைச் சேர்ந்தவர்களின் உறவையும் இந்தச் சட்டம் தடை செய்கிறது.

இந்திய தண்டனைச் சட்டப் பிரிவு 377, அம்பேத்கரால் ஏற்படுத்தப்பட்ட இந்திய அரசியல் சாசனத்தின் அடிப்படையான தனி மனித உரிமைக்கு எதிராக உள்ளது. பிரிட்டிஷ் ஆதிக்கத்தின்போது ஏற்படுத்தப்பட்ட இந்தச் சட்டம் இப்போது அந்த நாட்டிலேயே அமலில் இல்லை என்கின்றனர் மாற்றுப் பாலினத்தோர் உரிமைக்காகப் போராடுபவர்கள்.

தீர்ப்பால் நீர்த்துப்போன நம்பிக்கை

அமெரிக்க அதிபராக முதன்முறையாகப் பதவியேற்றபோது இந்த வெற்றியை எல்லாச் சிறுபான்மை சமூகத்தினருக்கும் அர்ப்பணிக்கிறேன் என்று சொன்னதோடு, அமெரிக்காவின் 50 மாநிலங்களில் தன்பால் உறவுக்கு இருந்த தடையை ஒபாமா நீக்கினார் என்கிறார் எல்.ஜி.பி.டி. சமூகத்துக்காக 20 ஆண்டுகளுக்கும் மேலாக பணியாற்றிவரும் சகோதரன் அமைப்பின் பொது மேலாளர் ஜெயா. சட்டப் பிரிவு 377 நீடிப்பதால் ஏற்படும் விளைவுகளையும் நம்மிடம் அவர் பகிர்ந்துகொண்டார்.

“டெல்லி உயர் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்புக்குப் பிறகு 2010-ல் நடந்த வானவில் பேரணியில் மாற்றுப் பாலினத்தைச் சேர்ந்த ஆயிரக்கணக்கானோர் பங்கேற்றனர். ஆனால், அதன்பின் உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்பால் சட்டப் பிரிவு 377 தொடரும் நிலையில், ஏறக்குறைய 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாற்றுப் பாலினத்தவர் தங்களது அடையாளத்தை வெளிப்படுத்தாமல், முகநூலிலேயே சிறைப்பட்டனர். டெல்லி உயர் நீதிமன்றத்தின் தீர்ப்புக்குப் பின், தன்பால் உறவாளராகவும் இரு பால் உறவாளராகவும் வெளிப்பட்ட தங்களுடைய பிள்ளைகளுக்கு அவர்களின் குடும்பத்தினரிடமிருந்தும் உறவுகளிடமிருந்தும் நண்பர்களிடமிருந்தும் கிடைத்த ஆதரவுகூட அதன்பின் கிடைக்காமல் போனது.

தங்கள் பிள்ளைகளின் தன்பால் உறவை மறைத்து, வலுக்கட்டாயமாக நடத்திவைக்கப்பட்ட திருமணங்கள் இன்றைக்குக் கேள்விக்குறியாகியிருக்கின்றன. இந்தியன் சைக்கியாட்ரி சொசைட்டி, வேர்ல்ட் சைக்கியாட்ரி சொசைட்டி போன்றவை தன்பால் உறவு என்பது மன நோய் அல்ல என்று வலியுறுத்திய பிறகும், தன்பால் விருப்புள்ள தங்களுடைய பிள்ளைகளை மனநல மருத்துவரிடம் அழைத்துச் செல்லும் பெற்றோரையும் ‘ஷாக்’ ட்ரீட்மென்ட் கொடுத்தால் சரியாகிவிடும் என்று அவர்களைத் தவறாக வழிநடத்தும் சில மருத்துவர்களையும் என்ன செய்வது? உலக சுகாதார நிறுவனம் 2016-ல் வெளியிட்ட உடல் நலம் குறித்த அறிக்கையில் பாதுகாப்பான, வன்முறை இல்லாத பாலுறவே ஆரோக்கியமானது என்று குறிப்பிட்டுள்ளது.

INDIA-COURT-GAY-RIGHTS.1 அஞ்சலி கோபாலன்

இன்னும் சொல்லப்போனால், நம்மில் இடதுகைப்பழக்கம் இருப்பவர்களைப்போல்தான் தன்பால் உறவு என்பதும் இயற்கையானதுதான் என்று சொல்கிறது. தன்பால் ஈர்ப்பையும் மற்றப் பாலின ஈர்ப்பையும் இயற்கைக்கு மாறானவை என்று சொல்பவர்களிடம் கேட்க என்னிடம் ஒரு கேள்வி இருக்கிறது. இயற்கைக்கு எதிராக சோதனைக்குழாய் மூலம் குழந்தை பெற்றுக்கொள்வதும் கருத்தடை செய்துகொள்வதும் இயற்கைக்கு மாறானவை இல்லையா?” என்கிறார் ஜெயா.

மனித உரிமைகளைக் காக்கும் போராட்டத்தைப் பல ஆண்டுகளாக நடத்திவரும் அஞ்சலி கோபாலனிடம், “சட்டத் திருத்தம் கொண்டுவருவதால் எல்லாம் மாறிவிடுமா?” எனும் கேள்வியைக் கேட்டிருக்கிறார் இடையிலிங்க குழந்தைகளின் உரிமைக்காகப் போராடிவரும் கோபி ஷங்கர்.

அதற்கு அஞ்சலி கோபாலனின் பதில் இது:

“மக்கள் மனத்தில் மாற்றுப் பாலினம் பற்றிய தவறான எண்ணங்களே ஆழமாகப் பதிந்திருக்கின்றன. அத்தகைய எண்ணங்களை மாற்ற ஒரு சட்டத் திருத்தம் போதாது. சட்டம், அறிவியல், மருத்துவம், ஊடகங்கள், அரசு என்று அனைத்துத் துறைகளும் மக்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்கான முயற்சியில் இறங்க வேண்டும். அப்போதுதான் மாற்றம் நடக்கும். எல்லாம் ஒரே நாளில் நடக்கும் என்று சொல்லவில்லை. அதே நேரம், நிச்சயம் ஒரு நாள் எல்லாம் மாறும் என்று நம்புகிறேன்”.

(புரிந்துகொள்ள முயல்வோம்)
கட்டுரையாளரைத் தொடர்புகொள்ள: ravikumar.cv@thehindutamil.co.in

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x