Published : 10 Jun 2018 11:25 AM
Last Updated : 10 Jun 2018 11:25 AM
கொல்கத்தாவுக்கும் கால்பந்தாட்டத்துக்கும் நீடித்த தொடர்பு உண்டு. கொல்கத்தாவில் 1911-ல் மோகன் பகான் அணிக்கும் கிழக்கு யார்க்ஷையர் ராணுவப் பிரிவுக்கும் இடையே கால்பந்துப் போட்டி நடந்தது. அந்தப் போட்டியில் ஆங்கிலேய அணியை வங்க அணி தோற்கடித்தது. அந்த வெற்றி, விடுதலை குறித்த நம்பிக்கையை மக்கள் மனத்தில் விதைத்தது. அந்த வெற்றிக்குப் பின் வங்க தேசத்திலிருந்து விடுதலைப் போராட்டங்கள் வீறுகொண்டு நாடு முழுவதும் பரவின.
இதுபோன்ற காரணங்களே வங்காளிகளுக்கும் கால்பந்துக்குமான பிணைப்பை வலுப்படுத்தின. அதனால்தான் இன்றைக்கும் இந்தியக் கால்பந்தாட்டத் தலைநகர் என கொல்கத்தா அழைக்கப்படுகிறது. அத்துடன், இந்தியக் கால்பந்தாட்டத் தந்தையெனப் போற்றப்படும் நாகேந்திர பிரசாத் சர்வாதிகாரி மேற்கு வங்கத்தைச் சேர்ந்தவரே.
தடை தகர்க்கும் பெண்கள்
ஸ்ரீஜா என்ற தொண்டு நிறுவனம், கொல்கத்தா மாநகரக் காவல்துறையுடன் இணைந்து பின்தங்கிய குடும்பங்களைச் சேர்ந்த 42 இளம்பெண்களுக்குத் தற்போது கால்பந்துப் பயிற்சி அளித்துவருகிறது.
கொல்கத்தாவின் சர்க்கஸ் பூங்கா மைதானத்தில் இரண்டு மாதங்களுக்கு நடைபெறும் இந்தப் பயிற்சி முகாமுக்கு மூன்று பெண் பயிற்சியாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இந்த முகாம்களில் எட்டு முதல் 18 வயதுவரை உள்ள மாணவிகள் பயிற்சி பெறுகின்றனர்.
கால்பந்துப் பயிற்சி எடுத்துக்கொள்ளும் மாணவிகளின் மிகப் பெரிய பிரச்சினை ஊட்டச்சத்துமிக்க உணவு கிடைக்காமல் இருப்பதே. தொடர்ந்து அளிக்கும் ஊக்கத்தின் மூலம் வீராங்கனைகளின் குடும்பத்தினர் இந்தப் பிரச்சினையைக் களைகின்றனர். இந்தக் குழுவில் இடம்பெற்றுள்ள 15 வயதான குஷ்னுமா ‘ஷார்ட்ஸ்’ அணிந்து விளையாடுவதைப் பார்க்கும் அக்கம்பக்கத்தினர், ‘நீ ஏன் இந்தக் குட்டை உடைகளை அணிந்துகொண்டு விளையாடுகிறாய்? பொம்பளைப் பிள்ளைக்கு எதுக்குக் கால்பந்தாட்டம்?’ என்று கேட்டிருக்கிறார்கள்.
அதற்கு அவருடைய அம்மாவோ ’விளையாட்டு மட்டுமல்ல, எல்லாவற்றிலும் ஆணும் பெண்ணும் சமம்தான்’ என்று பதில் கூறியுள்ளார். இப்படிப்பட்ட புரிதலால்தான் அவரால் தடையின்றிப் பயிற்சியைத் தொடர முடிகிறது.
கால்பந்தைப் பொறுத்தவரை கொல்கத்தாவில் ஆண், பெண் வேறுபாடு கிடையாது. இருபாலரும் கால்பந்தைத் தீவிரமாக நேசிக்கிறார்கள். இருபாலரும் கால்பந்து விளையாடுகிறார்கள். ஜூன் 14 அன்று தொடங்கவிருக்கும் உலகக் கோப்பை கால்பந்துப் போட்டிக்காக அவர்கள் தற்போது ஆவலுடன் காத்திருக்கின்றனர். ஒரு நாள் தாங்களும் அதில் பங்கேற்போம் என்ற நம்பிக்கையுடன் இருக்கிறார்கள். முயன்றால் பலிக்காத கனவு எது?
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT