Published : 03 Nov 2024 07:50 AM
Last Updated : 03 Nov 2024 07:50 AM
பிருந்தா சீனிவாசன் எழுதிய ‘பெண் எனும் போர்வாள்’ தொடரின் நிறைவுக் கட்டுரை, மனதில் நின்றது. உரிமைகள் இருப்பதால் மட்டுமே பயனில்லை. பயன்படுத்தப்படவேண்டும் என்பது உண்மைதான். மாறாக நமது நாட்டில் இத்தனை சட்டதிட்டங்கள் இருந்தும், பாலியல் பொருளாகப் பெண் பார்க்கப்படுவதில் இருந்து விடுபடவில்லை. பெண்களை நுகர்பொருளாக்கும் விளம்பரங்கள் வியாக்கியானங்கள் முற்றிலும் ஒழிக்கப்படவேண்டும். பெண்ணுரிமை பேசப்படாத நிலையே பெண் விடுதலை என்ற வாதம் ஏற்புக்குறியதே.
- சு.வாசன், திருநெல்வேலி.
உரிமை, விடுதலை எனும் இருவேறு இலக்குகளோடு ‘பெண் எனும் போர்வாள்’ கட்டுரைத் தொடர் நிறைவுற்றிருக்கிறது. நம் இலக்குகளை அடைய வெகுதொலைவு பயணிக்க வேண்டியிருக்கிறது. ஆனாலும் இடைவிடாமல் நடப்பதற்கான நம்பிக்கையையும் தெம்பையும் துணிவையும் இந்தக் கட்டுரைத் தொடர் தந்திருக்கிறது. இவை அருமையான விழிப்புணர்வுக்கட்டுரைகள். அனைத்துப் பெண்களும் படித்துப் பயன்பெற வேண்டியவை.
- கனலி, கோவை.
பெண்ணின் வாழ்க்கை எல்லாக் காலத்திலும் போர்க்களமாகவே இருந்திருக்கிறது என்கிற கசப்பான உண்மையை ‘பெண் எனும் போர்வாள்’ கட்டுரைத் தொடர் மூலம் அறிந்தபோது கொஞ்சம் அதிர்ச்சியாகத்தான் இருந்தது. மிகவும் கரடுமுரடான ஒரு பேசுபொருளைக் கட்டுரை ஆசிரியர் எப்படி இழை இழையாக நெய்திருக்கிறார் என்பதை எண்ணிப் பார்க்கவே முடியவில்லை. ஒவ்வொரு அத்தியாயத்தையும் வெவ்வேறு வார்த்தைகளால் முடித்திருந்த விதம் தனி அழகு.
- ஜே. லூர்து, மதுரை.
உலக அளவில் பெண்கள் தனித்த ஆளுமைகளாகவும், அமைப்பாகவும், தலைவர்களாகவும் மேற்கொண்ட போராட்ட வாழ்வை ‘பெண் எனும் போர்வாள்’ கட்டுரைத் தொடர் வழியே படித்துணர முடிந்தது. பல்வேறு சமூகக் கட்டமைப்புகளில் இருந்தும் எழுந்த பெண்களின் போராட்டக் குரல்களையும் சிந்தனைகளையும் இந்தக் கட்டுரைத் தொடர் மூலம் அறிய முடிந்தது. இக்கட்டுரைத் தொடர் தொகுக்கப்பட்டுச் சமூகத்திற்கு எப்போதும் பயன்படும் வகையில் விரைவில் புத்தக வடிவம் பெற வேண்டும் என்று விழைகிறேன்.
- உதயகுமார், சென்னை.
‘பெண் எனும் போர்வாள்’ தொடரில் கிம் ஹாக் சன் என்கிற கொரியப் பெண்ணின் அனுபவங்கள் மனம் கலங்க வைத்தன.
- மணிமேகலை, ஓசூர்.
‘பெண் எனும் போர்வாள்’ கட்டுரைத் தொடரில் ‘தென்னிந்தியாவின் சகோதரி’ என்கிற கட்டுரை பயனுள்ளதாக இருந்தது. இன்னும் அவரது சமயநல்லிணக்கத்தைப் பற்றியும் சாதிய தீண்டாமைக்கு எதிரான அவரது செயல்பாடுகளை பற்றியும் எழுத வேண்டும்.
- அருட்பணி.மனோஜ் குமார், பேர்ணாம்பட்டு.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT