Published : 27 Oct 2024 07:34 AM
Last Updated : 27 Oct 2024 07:34 AM
வளர்ச்சி என்னும் பெயரால் சுற்றுச் சூழலை மாசுபடுத்தும் அதிகார மையங்களைத் தன்னுடைய ‘ராப்’ பாடல் களின் மூலம் எதிர்க்கும் கலகக் குரல் பாடகி சோஃபியா அஷ்ரப்.
வட சென்னை மக்கள் சுவாசிக்கும் காற்றை மாசுபடுத்தும் தொழிற்சாலைகள் குறித்தும் அவற்றிலிருந்து வெளியேற்றப்படும் நச்சுப் புகையால் ஏற்படும் விளைவுகள் குறித்தும் ‘காத்த வர விடு மூச்ச விட விடு’ என்னும் பாடலில் பாடியிருப்பார். இவரின் ‘கொடைக்கானல் வோன்ட்’ பாடல், மக்களுக்கும் சுற்றுச்சூழலுக்கும் கேடுவிளைவிப்போரைத் துணிச்சலாகக் கேள்விக்கு உள்படுத்திய பாடல். அண்மையில் சோஃபியா வெளியிட்டிருக்கும் மாதவிடாய் குறித்த விழிப்புணர்வுப் பாடல் சமூகவலைதளத்தில் கவனத்தை ஈர்த்துவருகிறது.
இன்ஸ்டகிராமில் வெளியிடப்பட்டிருக்கும் இந்தப் பாடல் குறித்து சோஃபியா நம்மிடம் பேசினார்: “நிறைய ராப் பாடல்களை நீங்கள் இதுவரை கேட்டிருக்கலாம். ஆனால், ஒரு ராப் பாடல் முழுக்க முழுக்க அமைதியான குரலில் நான் பாடியிருப்பது இதுவே முதல் முறை. இந்தப் பாடலுக்கு மிகவும் திறமையான இசையை ‘Madm’ (சஞ்சனா ராஜ்நாராயண்) அமைத்துள்ளார்.
மாதவிடாய் குறித்து வெகுஜன மக்களிடம் மண்டிப்போயிருக்கும் கற்பிதங்களை உடைக்க வேண்டும் என்பதே இந்தப் பாடலின் நோக்கம். அதோடு, மாதவிடாய் குறித்த விழிப்புணர்வை அளிப்பதோடு வளரிளம் பெண்களின் உடல்நலத்துக்காக முழுக்க முழுக்கப் பெண்களின் தலைமையில் இயங்கும் ‘Uninhibited’ என்னும் தன்னார்வத் தொண்டு நிறுவனத்திற்கான விழிப்புணர்வுப் பிரச்சாரமாகவும் இதை உருவாக்கியுள்ளோம்.
ஆரோக்கியத்தை வலியுறுத்தும் ஆதாரமான தகவல்கள், சுகாதாரமான பொருள்கள் உள்ளிட்ட எந்தவிதமான ஆதரவும் கிடைக்காமல் மாதவிடாயை எதிர்கொள்ளும் பெண்களின் எண்ணிக்கை இந்தியாவில் அதிகம். அதனால் தான், இளம் பெண்கள் மாதவிடாய் சுகாதாரக் கல்வி, உடலமைப்பு குறித்த புரிதல் மற்றும் சுய மதிப்பைப் பெறுவதற்கு Uninhibited நிறுவனம் மக்களின் பங்களிப்பை எதிர்நோக்குகிறது. 2,500 பெண்களின் மாதவிடாய் கால ஆரோக்கியத்தைப் பராமரிக்க 6 லட்சம் ரூபாய் திரட்ட இலக்கு வைத்துள்ளனர்.
மாதவிடாய் சுகாதார நிதித் திரட்டலுக்கும் மாதவிடாய் விழிப்புணர்வை உண்டாக்கும் இந்த ராப் பாடலுக்கும் என்ன தொடர்பு?
பாடலில் ஆழமான செய்தி உள்ளது. பொதுவாக, மாதவிடாய் பற்றிப் பேசும்போது பிறருக்குக் கேட்டுவிடக் கூடாது என நாம் கிசுகிசுப்பாகப் பேசுவோம். காரணம் இது பொதுவெளியில் பேசத் தடை செய்யப்பட்ட விஷயமாகக் கற்பிக்கப்பட்டுப் பெரும்பாலும் ஒதுக்கி வைக்கப்படுகிறது. எனவே, மாதவிடாய் குறித்த விழிப்புணர்வுப் பிரச்சாரங்களும் புறக்கணிக்கப்படுகின்றன அல்லது, இதைப் பற்றி பேசுவது அநாகரிகமாகக் கருதப்படுகிறது. கிசுகிசுப்பாகப் பேசுவதன் மூலம் நாங்கள் மக்களின் கவனத்தை ஈர்க்க முயல்கிறோம். தவிர, மாதவிடாய் என்பது அவ்வளவு ரகசியமான விஷயமும் இல்லை” என்கிறார் அவருக்கே உரிய அதிரடி தொனியில்!
பாடலைப் பார்க்க: https://shorturl.at/e3MRb
இந்த விழிப்புணர்வுப் பிரச்சாரத்தில் மக்களின் பங்களிப்புக்கான சுட்டி: https://shorturl.at/iJ3o5
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT
Be the first person to comment