Published : 22 Apr 2018 10:18 AM
Last Updated : 22 Apr 2018 10:18 AM
அ
ந்தப் பெண்ணுக்கு அப்போது 25 வயது. ‘புத்தாயிரத்தின் முதல் ஒலிம்பிக்’ என்ற சிறப்புப் பெற்ற 2000-ம் ஆண்டு சிட்னி ஒலிம்பிக் போட்டிகளுக்காக 65 போட்டியாளர்களை இந்திய ஒலிம்பிக் கமிட்டி தயாரிப்புப் பயிற்சி அளித்திருந்தது. அதில் அந்தப் பெண்ணுக்கும் இடம் கிடைத்தது. அதற்கு முன்புவரை ஒலிம்பிக்கில் தனிநபர் பிரிவில் இந்தியா சார்பில் பெண்கள் யாரும் பதக்கம் வென்றதில்லை.
கனவை நனவாக்கியவர்
அந்த ஒலிம்பிக்கில் ஏழு பிரிவுகளில் போட்டியாளர்கள் பங்கேற்பதும் வெளியேறுவதுமாக இருந்தனர். பதக்கப் பட்டியலில் இந்தியா இடம்பிடிக்க வாய்ப்பில்லை என்று பலரும் முடிவுகட்டிவிட்டார்கள். ஒலிம்பிக் போட்டி நிறைவடைய இரண்டு நாட்களே இருந்தன. இந்தியாவுக்கெனப் பெரிதாகப் போட்டிகளும் இல்லை. எஞ்சியிருந்த சில போட்டிகளிலும் பதக்கம் வெல்லும் அளவுக்கு முக்கியமானவர்கள் யாருமில்லை.
தேசமே விரக்தியில் இருந்த தருணத்தில் அந்தச் செய்தி வந்தது. ஊரே அவரைப் பற்றிப் பேசியது. நாடே அவரை நினைத்துப் பெருமைப்பட்டது. ஆந்திராவின் ஸ்ரீகாகுளத்தில் பிறந்து ஒட்டுமொத்த இந்தியாவையும் அன்று தன் பக்கம் திருப்பியவர், கர்ணம் மல்லேஸ்வரி. சிட்னி ஒலிம்பிக்கில் 69 கிலோ பளு தூக்கும் பிரிவில் வெண்கலப் பதக்கம் வென்றவர். ஒலிம்பிக்கில் பதக்கம் வென்ற முதல் இந்தியப் பெண். ஒலிம்பிக்கில் ஒரு தேசத்தின் ஒட்டுமொத்தக் கனவையும் தனி நபராக நனவாக்கியர்.
கர்ணம் மல்லேஸ்வரியின் இந்த வெற்றி, ஒரே நாளில் கிடைத்ததல்ல. அவரது ஒட்டுமொத்தக் குடும்பமும் விதையிட்டு வளர்தததால் கிடைத்த வெற்றி அது. ரயில்வே பாதுகாப்புப் படை காவலராக இருந்த அவருடைய தந்தையும் பளு தூக்கும் வீரர். அம்மாவும் பளுதூக்கும் விளையாட்டில் ஈடுபாடு கொண்டவர். இவர்களுக்கு நான்கு பெண் குழந்தைகள். இந்த நால்வரையுமே சிறு வயது முதலே பளு தூக்கும் பயிற்சிக்கு அனுப்பிவைத்தார் அவர்களுடைய அம்மா. ஊர் என்ன நினைக்கும் என்பதைப் பற்றியெல்லாம் யோசிக்காமல் விளையாட்டுதான் வாழ்க்கை என்று சொல்லித் தந்தார். பளு தூக்கும் விளையாட்டில் நால்வரும் இருந்ததால், அவர்களுடைய தந்தை வாங்கும் சம்பளத்தின் பெரும் பகுதியை பிள்ளைகளுக்கு ஊட்டச்சத்து நிறைந்த உணவுப் பொருட்களை வாங்கிக் கொடுக்கவே செலவு செய்தார்.
பிரகாசித்த நட்சத்திரம்
சிறு வயது முதலே பளு தூக்கும் விளையாட்டில் சிறந்து விளங்கிய கர்ணம் மல்லேஸ்வரி, 13 வயதிலேயே மாநில அளவிலான போட்டிகளில் களம் காணத் தொடங்கினார். 15 வயதிலேயே தேசிய ஜூனியர் பளு தூக்கும் சாம்பியன்ஷிப்பில் கலந்துகொண்டு பரிசு வென்று அடுத்தடுத்த கட்டங்களுக்கு முன்னேறினார்.
1990-ல் தேசிய சாம்பியன்ஷிப் போட்டியில் 52 கிலோ எடைப் பிரிவில் பட்டம், தாய்லாந்தில் நடைபெற்ற ஆசிய சாம்பியன்ஷிப் போட்டியில் 54 கிலோ எடைப் பிரிவில் சாம்பியன்ஷிப் பட்டம் எனப் பதின் பருவம் முடிவதற்குள்ளாகவே ஜெட் வேகத்தில் முன்னேறினார். 1994-95-ம் ஆண்டுகளில் தென்கொரியா, சீனா ஆகிய நாடுகளில் நடைபெற்ற சர்வதேச அளவிலான போட்டிகளில் 11 தங்கப் பதக்கங்களை அள்ளிவந்து அசத்தினார். ஒரு புறம் அவருடைய அக்கா கிருஷ்ண குமாரி தேசிய அளவில் பிரபலமாக இருந்தார் என்றால் கர்ணம் மல்லேஸ்வரியோ சர்வதேச அளவில் பிரகாசிக்கும் நட்சத்திரமாக மாறினார்.
தொடர்ந்து ஆசிய சாம்பியன்ஷிப், காமன்வெல்த் போட்டிகளிலும் தனது முத்திரையைப் பதித்துக்கொண்டிருந்த கர்ணம் மல்லேஸ்வரியைத் தேடி அர்ஜுனா விருது, ராஜீவ் காந்தி கேல் ரத்னா விருது, பத்மஸ்ரீ விருது ஆகியவை வந்தன.
கை நழுவிய தங்கம்
சிட்னி ஒலிம்பிக் போட்டி பற்றிப் பேசும்போதேல்லாம் கர்ணம் மல்லேஸ்வரி அங்கலாய்ப்பது வாடிக்கை. தங்கப் பதக்கம் வெல்ல வாய்ப்பிருந்ததைத் தாரை வார்த்ததால் இந்த அங்கலாய்ப்பு. பளு தூக்கும் போட்டியில் மூன்று வாய்ப்புகள் வழங்கப்பட்டு எடை அளவு கூட்டப்பட்டு முடிவு அறிவிக்கப்படும். கர்ணம் மல்லேஸ்வரி கடைசி வாய்ப்பைப் பயன்படுத்தும்போது தவறுதலாக இரண்டரை கிலோ குறைவாகத் தூக்கினார். அவருடைய பயிற்சியாளர் போட்ட தவறான கணக்கால், குறைந்த எடையைத் தூக்கி, தங்கம் வெல்லும் வாய்ப்பைத் தவறவிட்டார்.
எப்படியும் ஒலிம்பிக்கில் தங்கப் பதக்கம் வெல்ல வேண்டும் என்ற கனவோடு கடுமையாக உழைத்தார். 2002-ல் நடைபெற்ற காமன்வெல்த் போட்டியை ஒலிம்பிக்கில் தங்கம் வெல்வதற்கான முன்னோட்டமாகக் கருதினார். ஆனால், போட்டிக்குச் செல்ல சில தினங்கள் இருந்த நிலையில் அவருடைய தந்தை இறந்துவிட்டார். இதனால் மிகுந்த தடுமாற்றத்துக்குள்ளான அவர், அந்தப் போட்டியிலிருந்து விலகினார். அதுமட்டுமல்ல, 2004-ம் ஆண்டு ஏதென்ஸ் ஒலிம்பிக் போட்டிக்குச் செல்வதற்குத் தேவையான புள்ளிகளைப் பெறவும் தவறினார். அத்துடன் பளு தூக்கும் போட்டிக்கு முழுக்குப் போட்டுவிட்டுத் தான் ஓய்வு பெறுவதாக அறிவித்தார்.
பளு தூக்குதலில் 10 ஆண்டு காலம் நீடித்த இவரது சாதனைப் பயணத்தில் ஒலிம்பிக்கில் வெண்கலம் வென்றது உட்பட 11 தங்கப் பதக்கங்கள் 3 வெள்ளிப் பதக்கங்களைச் சர்வதேச அளவில் வென்றிருக்கிறார். மல்லேஸ்வரி ஒலிம்பிக் பதக்கம் பெற்றதன்மூலம் இந்தியா விளையாட்டுத் துறையில் மிகப் பெரிய மாற்றம் ஏற்பட்டது. ஏராளமான இளம் பெண்களுக்கு முன்மாதிரியாகத் திகழ்ந்தார். இந்திய விளையாட்டுத் துறையின் மீது இளம் பெண்களுக்கு ஈர்ப்பு ஏற்பட்டது. ஒலிம்பிக் கனவோடு பல பெண்களும் விளையாட்டில் காலடி எடுத்து வைத்தனர். தற்போது இந்திய விளையாட்டுத் துறையில் பெண்கள் நிறைந்திருப்பதற்கு அன்று கர்ணம் மல்லேஸ்வரி போட்ட ஒலிம்பிக் விதையும் ஒரு காரணம்.
தற்போது 42 வயதாகும் கர்ணம் மல்லேஸ்வரி, மத்திய அரசுப் பணியில் இருக்கிறார். இவருடைய கணவர் ராஜேஷ் தியாகியும் பளு தூக்கும் வீரர்தான். ‘ஆந்திராவின் இரும்புப் பெண்’ என்றழைக்கப்படும் மல்லேஸ்வரி, பளு தூக்கும் பயிற்சி மையம் ஒன்றை நிறுவி, ஏராளமானோருக்குப் பயிற்சியளித்துவருகிறார்.
(வருவார்கள் வெல்வார்கள்)
கட்டுரையாளரைத் தொடர்புகொள்ள: karthikeyan.di@thehindutamil.co.in
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT