Published : 03 Jun 2018 10:21 AM
Last Updated : 03 Jun 2018 10:21 AM

முகம் நூறு: இது மறைக்க வேண்டிய விஷயமல்ல

துணிகளுக்கு மாற்றாக வந்த சானிட்டரி நாப்கின்கள் பெண்களுக்கு மனநிம்மதியைத் தருவதாகவும் தடையின்றிப் பயணிக்க உதவுவதாகவும் கூறப்படுகிறது. ஆனால், தொடர்ச்சியாக சானிட்டரி நாப்கின்களைப் பயன்படுத்துவதால் பெண்களின் உடல் நலம் பாதிக்கப்படுவதுடன் சுற்றுச்சூழலுக்கும் ஆபத்து ஏற்படுகிறது என்கிறார் மாதவிடாய் சுகாதாரம் குறித்த விழிப்புணர்வுப் பிரச்சாரத்தில் ஈடுபட்டுவரும் காவ்யா மேனன்.

கேரள மாநிலத்தைச் சேர்ந்த காவ்யா, சிறுவயதிலிருந்தே சுற்றுச்சூழல் குறித்து அதிகம் ஆர்வம் கொண்டவராக இருந்துள்ளார். அந்த ஆர்வமே அவரை சென்னை ஐஐடி-ல் சுற்றுச்சூழல் உயிரி தொழில்நுட்பவியல் படிக்கத் தூண்டியது.

விடுதியில் ஏற்பட்ட விழிப்புணர்வு

வெளிநாட்டு வேலை, நல்ல சம்பளம் போன்ற கனவுகளில் காவ்யாவுக்கு விருப்பமில்லை. கடந்த நான்கு ஆண்டுகளாக ‘அவேர்’ என்ற தொண்டு நிறுவனத்தைத் தன் நண்பர் சந்தியனுடன் இணைந்து நடத்திவருகிறார். 2012-ல் நடந்த நிர்பயா பாலியல் வல்லுறவுக் கொலைக்குப் பிறகு காவ்யாவும் அவருடைய நண்பர் சந்தியனும் இணைந்து மாற்றத்துக்கான வழியாக பேஸ்புக் மூலமாக இந்தத் தொண்டு நிறுவனத்தைத் தொடங்கியுள்ளனர்.

03CHLRD_CUP

மாதவிடாய் சுகாதாரம் குறித்து சமூகத்தில் இருக்கும் தவறான கற்பிதங்களைத் தெளிவுபடுத்தும் விதமாகப் பள்ளி மாணவிகள் உட்பட அனைத்துத் தரப்பு மக்களிடமும் இந்த அமைப்பு சார்பாக பிரச்சாரம் செய்து வருகின்றனர்.

“நான் ஐஐடியில் படித்தபோது விடுதியில் தங்கியிருந்தேன். அப்போது எனது அறையின் பக்கத்தில் பயன்படுத்தப்பட்ட சானிட்டரி நாப்கின்களைச் சேகரித்து வைக்கும் இடம் இருந்தது. ஓரு இரவு அந்த அறையின் கதவு திறந்திருந்ததால், நாய்கள் அங்கிருந்த சானிட்டரி நாப்கின்களைக் கடித்துக் குதறி எங்கள் விடுதி முழுவதும் வீசி சென்றுவிட்டன. அந்த நாள் முழுவதும் விடுதியில் துர்நாற்றம் வீசியபடி இருந்தது.

கறைபடிந்த சானிட்டரி நாப்கின்களை அப்புறப்படுத்தும் ஊழியர்களின் நிலை எவ்வளவு மோசம் என்பதை அந்தச் சம்பவத்துக்குப் பிறகு உணர்ந்தேன். பயன்படுத்தப்பட்ட சானிட்டரி நாப்கின்களைச் சேகரித்து கல்லூரி வாளகத்திலேயே மொத்தமாக எரித்துவிடுவார்கள். எங்கள் கல்லூரியும் இதற்கு விதிவிலக்கல்ல. இப்படி எரிப்பதால் அவற்றிலிருந்து வெளியேறும் வாயுக்கள், நாம் சுவாசிக்கும் காற்றை மாசடையச் செய்கின்றன. அதனால் நமக்கு சுவாசக் கோளாறு ஏற்படக்கூடும். அதனால் என் பாடத்திட்டத்தின் ஒரு பகுதியாக பருத்தித் துணி நாப்கின்களின் பயன்பாடு குறித்த ஆய்வறிக்கையத் தயாரித்தேன்” என்கிறார் காவ்யா.

காவ்யாவின் இந்த ஆய்வறிக்கை ஆசிய அளவில் நடைபெற்ற சுற்றுச்சூழல் உயிரித்தொழில்நுட்ப மாநாட்டில் பெரும் வரவேற்பைப் பெற்றது.

சானிட்டரி நாப்கின்களால் ஏற்படும் கேடு

வர்த்தக நிறுவனங்கள் தயாரிக்கும் சானிட்டரி நாப்கின்களில் 90 சதவீதம் பிளாஸ்டிக் பயன்படுத்தப்படுகிறது. நீண்ட நேரம் சானிட்டரி நாப்கின்களை உபயோகிக்கும் நோக்கில் இப்படி உருவாக்கப்படுகின்றன. மேலும், உதிரப்போக்கைக் கசியவிடாமல் இருப்பதற்காக ‘super absorbent polymer’ என்ற வேதிப்பொருள் பயன்படுத்தப்படுகிறது.

“இவ்வளவு ரசாயனங்களைப் பயன்படுத்தி உருவாக்கப்படும் சானிட்டரி நாப்கின்களை ஒரு பெண் தொடர்ச்சியாக பயன்படுத்திவந்தால் அவர்களுக்கு பிறப்புறுப்பில் அரிப்பு, அலர்ஜி போன்றவை ஏற்படுவதுடன் நாளடைவில் கருப்பை சார்ந்த பிரச்சினைகளும் உருவாகலாம்” என்கிறார் காவ்யா.

மாதவிடாய் பிரச்சாரம்

பேஸ்புக்கில் தொடங்கப்பட்ட இவர்களது மாதவிடாய் பிரச்சாரம், பின்னர் படிப்படியாகக் களச் செயல்பாட்டை அடைந்தது. அரசு சுகாதார அமைப்புகளுடன் இணைந்து பெண்கள் மத்தியில் குறிப்பாக மீனவப் பெண்கள், உப்பளங்களில் பணிபுரியும் பெண்கள், பள்ளி, கல்லூரி மாணவர்கள் ஆகியோரை இவர்களது பிரச்சாரம் சென்றடைந்தது. தமிழகம் மட்டுமல்லாமல், கேரளத்திலும் மாதவிடாய் குறித்த விழிப்புணர்வு பிரச்சாரத்தை காவ்யா மேற்கொண்டுவருகிறார்.

“பெண்களின் உடல் ஆரோக்கியம், சுகாதாரம், சமூகத் தடைகள் ஆகிய மூன்று விஷயங்களே எங்களது முக்கியக் குறிக்கோள். இந்தியப் பெண்களில் 57 சதவீதத்தினர் பிளாஸ்டிக் சானிட்டரி நாப்கின்களைப் பயன்படுத்துகிறார்கள். அது அவர்களின் உடலுக்குக் கேடு விளைவிக்கும் என்பதை அனைவரும் புரிந்துகொள்ள வேண்டும். ஒரு பெண் மெனோபாஸ் பருவம்வரை ஆயிரக்கணக்கான சானிட்டரி நாப்கின்களைப் பயன்படுத்துகிறார். ஒரு சானிட்டரி நாப்கின் மக்குவதற்கு 500 ஆண்டுகள் பிடிக்கும். பூமியில் வீசப்படும் பல கோடி நாப்கின்களால் பூமிக்கு எவ்வளவு பாதிப்பு ஏற்படும்?’ என்ற அவர் கேட்கிறார்.

ஆண்களுக்கும் தேவை விழிப்புணர்வு

மேலும், “இன்றைக்கு எல்லோருடைய வீடுகளிலும் ஸ்மார்ட் போன் நுழைந்துவிட்ட அளவுக்குக்கூட மாதவிடாய் குறித்த விழிப்புணர்வு ஏற்படவில்லை. நம் நாட்டில் ஒரு பெண் பருவமடைவதற்கு முன்புவரை அவர்களுக்கு மாதவிடாய் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுவதில்லை. இன்றும் பல கிராமங்களில் மாதவிடாய் நாட்களில் சாம்பல், சுகாதாரமற்ற துணிகள் போன்றவற்றைப் பயன்படுத்தும் மோசமான சூழல் உள்ளது.

பொதுவெளி இன்னமும் பெண்களுக்கானதாக இல்லாத நிலையில் நீண்ட நேரம் ஒரே சானிட்டரி நாப்கினைப் பயன்படுத்த வேண்டிய கட்டாயத்துக்குப் பெண்கள் தள்ளப்படுகிறார்கள். இந்த நிலை மாற வேண்டும். மாதவிடாயைப் பெண்கள் விஷயம் எனச் சுருக்கிவிடாமல் ஆண்களுக்குச் சிறுவயதிலிருந்தே அது குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்” என்கிறார் காவ்யா.

தற்போது பிளாஸ்டிக் சானிட்டரி நாப்கின்களுக்கு மாற்றாகப் பல இடங்களில் துணியாலான நாப்கின்கள் கிடைக்கின்றன. இந்தியாவில் மட்டும் 25-க்கும் மேற்பட்ட நிறுவனக்கள் துணி நாப்கின்களைத் தயாரிக்கின்றன. அதேபோல் மாதவிடாய் குப்பிகள் (menstrual cup) பெண்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளன. சானிட்டரி நாப்கின்களுக்குச் செய்யும் செலவைவிட இந்த மாற்று மாதவிடாய் பொருட்களின் விலை குறைவு.

“துணி நாப்கின்கள், மாதவிடாய் குப்பிகள் போன்றவற்றைப் பயன்படுத்துவதால் ஆடைகளில் கறைபட்டுவிடுமோ என்ற அச்சம் பலருக்கும் உண்டு. ஆனால், ஒரு பெண்ணுக்கு மாதவிடாய் நாட்களில் ஒட்டுமொத்தமாக அறுபது முதல் எழுபது மி.லி. அளவுக்குத்தான் உதிரப்போக்கு ஏற்படும். எனவே, துணி நாப்கின்கள், மாதவிடாய் குப்பிகள் போன்றவற்றிலிருந்து உதிரம் வெளியேறிவிடுமோ என அச்சப்படத் தேவையில்லை” என்கிறார் அவர்.

உரக்கப் பேசுவோம்

மாதவிடாய் என்பது அசிங்கமான, பேசக் கூடாத விஷயம் என சிறுவயதிலிருந்தே குழந்தைகளின் மனங்களில் தெரிந்தோ தெரியாமலோ பதிந்துவிடுகிறது. இதனால்தான் வளர்ந்த பிறகும் பெண்கள் மாதவிடாய் குறித்து வெளிப்படையாகப் பேசத் தயங்குகின்றனர். “பெண்களுக்கான ஒரு முக்கியமான விஷயத்தைப் பெண்களே பேச மறுப்பது தவறு. மாதவிடாய், ஓர் இயற்கை நிகழ்வு என்பதை அனைவரும் உணர வேண்டும். அதைத் தீட்டு என ஒதுக்கிவைப்பது தவறு” என்று சொல்கிறார் காவ்யா.

கடைப்பிடிக்க வேண்டியவை

# பயன்படுத்தப்பட்ட சானிட்டரி நாப்கின்களைக் காகிதத்தில் சுற்றித் தனியாக ஒரு பையில் போட வேண்டும்.

# மாதவிடாய் நாட்களில் சானிட்டரி நாப்கின்களைக் குறைந்தது ஐந்து மணி நேரத்துக்கு ஒரு முறையாவது மாற்ற வேண்டும். அதிக உதிரப்போக்கு இருக்கும் பட்சத்தில் அதற்கேற்ற மாதிரி இடைவெளியைக் குறைத்துக்கொள்ளலாம்.

# சிலருக்கு மாதவிடாய் இறுதி நாளன்று உதிரப்போக்கு அதிகமாக இருக்காது அதற்காக நாள் முழுவதும் ஒரே சானிட்டரி நாப்கினை பயன்படுத்தக் கூடாது.

# சானிட்டரி நாப்கின் பயன்படுத்துவதால் பிறப்புறுப்பில் அரிப்பு, எரிச்சல் போன்றவை ஏற்பட்டால் உடனடியாக மருத்துவரை அணுகவேண்டும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x