Published : 22 Apr 2018 10:23 AM
Last Updated : 22 Apr 2018 10:23 AM
ச
மூக மாற்றத்துக்கு ஆதாரமான கருத்துகளை ஆண், பெண், பால் புதுமையர் என எல்லோரிடமிருந்தும்தான் பெறவேண்டியிருக்கிறது. இப்படிப் பலதரப்பட்டவர்களையும் உள்ளடக்கிய சமூகத்துக்கு ஆண், பெண் என்னும் இருமை நோக்கிலேயே செய்யப்படும் ஆராய்ச்சிகளிலிருந்து பெறும் முடிவுகள் எப்படிச் சரியாக இருக்கும் என்னும் கேள்வியை ஈவ் செட்விக்கின் (Eve Sedgwick) ‘கோணல் கோட்பாடு’ (Queer Theory) எழுப்புகிறது.
ஐரோப்பிய, அமெரிக்கப் பல்கலைக்கழகங்களில் ‘பால் புதுமையர்’ (LGBTQI) குறித்த விரிவான பாடத்திட்டங்கள் இருக்கின்றன. இந்தியாவில் இப்போதுதான் திருநங்கைகளைக் குறித்த புரிதலும் விழிப்புணர்வும் பரவலாக ஏற்படத் தொடங்கியிருக்கின்றன. அதிலும் ஆணாகப் பிறந்து, பெண் மனதோடு வளர்ந்து, நாளடைவில் திருநங்கையாக மாறுபவர்களைப் பற்றித் தெரிந்த அளவுக்கு, பெண்ணாகப் பிறந்து, ஆண் மனதோடு வளர்ந்து, நாளடைவில் ஆண் பாலினத்தை விரும்பி ஏற்கும் திருநம்பிகளைக் குறித்துச் சமூகத்தில் போதுமான அளவு விழிப்புணர்வு ஏற்படவில்லை.
திருநம்பியாவதன் வலி
பெண்ணாகப் பிறந்தவர் ஷ்யாம் பாலசுப்ரமணியன். வளர வளரத்தான் ஒருவருடைய பாலினம் எதுவெனத் தெரியவரும். நினைவு தெரிந்த நாளிலிருந்தே ஷ்யாம் தன்னை ஆணாக உணர்ந்திருக்கிறார்.
“என்னைப் பற்றிய குழப்பமே அதிகம் இருந்தது. ஏன் எல்லோரும் என்னை அலங்கரித்துக்கொள்ளச் சொல்கிறார்கள், பெண் குழந்தைகளுக்கான உடைகளை அணியச் சொல்கிறார்கள் என்றெல்லாம் யோசிப்பேன். அதுவும் ஸ்கர்ட் போட்டுக்கொண்டு பள்ளிக்குச் சென்ற அவஸ்தையை சொல்லி மாளாது. பலரும் என்னைக் கேலி செய்தனர். ஆசிரியர்கள்கூடக் கிண்டல் செய்திருக்கிறார்கள். நிறைய அவமானங்களைச் சந்திச்சேன்” என்று சொல்லும் ஷ்யாம், நன்றாகப் படிக்கக்கூடியவர். ஆனால், பள்ளி நாட்களில் தான் எதிர்கொண்ட அவமானங்களால் பள்ளிப் படிப்பை முடிப்பதற்குப் பெரும்பாடுபட்டிருக்கிறார்.
மாற்றம் தந்த சந்திப்பு
அதன் பின் எலக்ட்ரானிக்ஸ் துறையில் பட்டம் பெற்றார். அமெரிக்காவில் உயர் கல்வி படித்தார். அமெரிக்காவில் ‘பால் புதுமையர்’ குறித்து ஓரளவு விழிப்புணர்வு இருந்தாலும், அங்கும் சிக்கல்களை இவர் எதிர்கொண்டார்.
“என்னோடு படித்தவர்களில் 50 சதவீதத்தினர் இந்தியர்கள். என்னோடு படித்த மாணவிகளால் என் நடை, உடை போன்றவற்றையே ஜீரணிக்க முடியவில்லை. அங்கேயும் பலவிதமான பாதிப்புகளுக்கு ஆளானேன். இண்டர்ன் மதிப்பெண்களைப் போடமாட்டார்கள். நான் செய்த புராஜெக்ட்களைக் கிழித்துப் போட்டிருக்கிறார்கள். பாலியல்ரீதியான மிரட்டல்களைக்கூடச் சந்தித்திருக்கிறேன்” என்று சொல்லும் ஷ்யாம், விடுதியில் பலரும் இவருக்கு அறை தராமல் புறக்கணித்ததை வருத்தத்துடன் குறிப்பிடுகிறார்.
“ரூம் கதவைத் திறக்க மாட்டார்கள். என்னுடன் ரூம்மேட்டாக இருந்த பெண்ணே என் பாஸ்போர்ட்டைக் கிழித்துப் போட்டுவிடுவதாகச் சொன்னார். உடன் படிக்கும் தோழிகளோ, ‘உனக்கு என்ன பையன்களையே பிடிக்காதா’ என மிரட்டுவார்கள்” என்று சொல்லும் ஷ்யாம், படிப்பு முடிந்ததும் பெங்களூருவில் சிப் டிசைனராகப் பிரபல நிறுவனம் ஒன்றில் பணிக்குச் சேர்ந்தார். அங்குதான் தன்னைப் போல் திருநம்பி ஒருவரைச் சந்தித்தார்.
“அந்தச் சந்திப்புக்குப் பிறகுதான் என் குழப்பம் தீர்ந்தது. உளவியல்ரீதியான கவுன்சலிங் பெற்று பாலின மாறுதலுக்கான சிகிச்சையைத் தற்போது தொடங்கியிருக்கிறேன். குடும்பத்தின் அரவணைப்பு எனக்கு இருப்பதால் சமூகத்தால் ஏற்பட்ட சிரமங்களை என்னால் எளிதில் எதிர்கொள்ள முடிந்தது” என்கிறார் ஷ்யாம். புல்லாங்குழல் வாசிப்பதில் தேர்ந்தவரான இவர், இனிவரும் நாட்கள் எப்படி இருக்கும் என்பதை வேய்ங்குழல் நாதத்தின் மூலம் குறிப்பாகச் சொல்லிப் புன்னகைக்கிறார்!
(புரிந்துகொள்ள முயல்வோம்)
கட்டுரையாளரைத் தொடர்புகொள்ள: ravikumar.cv@thehindutamil.co.in
ஊக்குவித்தவர்களுக்குப் பாராட்டு
“ஒரு காலத்தில் திருநங்கைகள் சாலைகளில் நடந்து சென்றாலே கல்லால் அடிப்பார்கள் அல்லது மோசமாக நடத்துவார்கள். ஆனால், இன்றைக்கு நிலைமை ஓரளவு மாறியுள்ளது. நம்முடைய உரிமைகளைக் கேட்டுப் போராடும் அளவுக்கு நாம் உயர்ந்திருக்கிறோம்” - ‘பார்ன்2வின்’ தொண்டு நிறுவனம் வழங்கிய வாழ்நாள் சாதனையாளர் விருதைப் பெற்றுக்கொண்ட பிறகு இப்படி உணர்ச்சி பொங்கச் சொன்னார் திருநங்கை நீலம்மா.
திருநங்கைகளுக்காகச் செயல்பட்டுவரும் இந்தத் தொண்டு நிறுவனம் சார்பில் சமீபத்தில் சாதனையாளர்களை கௌரவிவித்து விருது வழங்கும் விழா சென்னையில் நடைபெற்றது.
பல்வேறு துறைகளில் சாதித்த திருநங்கைகளும் அவர்களுக்கு உறுதுணையாக இருந்தவர்களும் இந்த விழாவில் கௌரவிக்கப்பட்டனர்.
திருநங்கைகள் உரிமை அமைப்பின் நிறுவனர் ஜீவா ரங்கராஜனின் தாய் சின்னம்மாள், மதுரை மாவட்டத்தில் பிசியோதெரப்பிஸ்ட்டாகப் பணிபுரிந்து வரும் எஸ். சோலு, திமுக மாநிலங்களவை உறுப்பினர் திருச்சி சிவா, ‘அருவி’ திரைப்பட இயக்குநர் அருண் பிரபு, நடிகை அதிதி பாலன், வழக்கறிஞர் சுதா ராமலிங்கம் ஆகியோருக்கு இந்த விழாவில் விருது வழங்கப்பட்டது.
மாறுபக்க ஆணியல்
பால் புதுமையரில் ‘மாறுபக்க ஆணியல்’, ‘ஆணியல் பெண்’ போன்ற பிரிவுகளும் அடக்கம். பெண்ணாகப் பிறந்து தன் பாலினத்தை முழுதாக உணர முடியாதவராகவும் குறைந்த அளவு பெண்ணாக உணர்கிறவராகவும் இருக்கிறவர்கள், ‘மாறுபக்க ஆணியல்’ என்னும் நிலையில் இருப்பவர்கள்.
‘ஆணியல் பெண்’ என்பவர் தன் செயல்களின் மூலம் தன்னை ஆண்போல் காட்டிக்கொண்டாலும் இயல்பில் தன்னை ஒரு பெண்ணாகவே கருதுவர். ‘மாறுபட்ட பெண்ணியல்’ என்னும் நிலையில் இருப்பவர் தம்மைக் குறைந்த அளவில் ஆணாக உணர்வர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT