Last Updated : 03 Jun, 2018 10:23 AM

 

Published : 03 Jun 2018 10:23 AM
Last Updated : 03 Jun 2018 10:23 AM

போகிற போக்கில்: ஓவியச் சீலை

படித்த துறையைவிடத் தனக்குப் பிடித்த துறையில் ஈடுபடுகிறவர்கள் தங்கள் இலக்கை நோக்கி மகிழ்வோடு பயணிப்பார்கள். கோயம்புத்தூரைச் சேர்ந்த ரமா ராஜேஷ், அப்படித்தான் பயணித்துவருகிறார். ஓவியத்தின் மீதிருந்த ஆர்வத்தின் காரணமாகப் பத்தாம் வகுப்பிலிருந்தே ஓவியங்கள் வரையத் தொடங்கினார். அதன் அடுத்த கட்டமாக லண்டனில் உள்ள ஈஸ்ட் லண்டன் பல்கலைக்கழகத்தில் நுண்கலைத் துறையில் முதுநிலை படித்தார்.

புடவை ஆராய்ச்சி

பல்கலைக்கழகப் படிப்பின் இறுதியாண்டின்போது புடவைகளில் ஓவியம் வரைவது குறித்த ஆராய்ச்சியை ரமா மேற்கொண்டார். அவரது இந்த ஆராய்ச்சிக்குப் பல்வேறு தரப்பினரிடமிருந்து வரவேற்பு கிடைத்தது. இதையடுத்து பட்டு, பருத்தி, ரா சில்க், ஆண்களின் பட்டுச் சட்டைகள் ஆகியவற்றில் மயில், கண்ணன், புத்தர், பூக்கள் போன்றவற்றை வரையத் தொடங்கினார்.

அக்ரலிக், ஃபேப்ரிக் கலர் ஆகிய வண்ணங்களைக் கொண்டு புடவைகளில் ஓவியம் தீட்டுகிறார் ரமா. “பொதுவா துணிகளில் எம்ப்ராய்டரி டிசைன் போடுவாங்க. கடந்த ஏழு வருஷமா புடவைகளில் நான் ஓவியம் வரையறேன். இந்தப் புடவைகளை டிரை கிளீன் செய்தாலும் ஓவியங்கள் அழியாது.

அதேபோல் பழைய புடவைகளோடு புதிய புடவைகளைச் சேர்த்து மிக்ஸ் அண்டு மேட்ச் காம்பினேஷனிலும் ஓவியங்களை வரையறேன்” என்று சொல்லும் ரமா, வாடிக்கையாளர்களுக்குப் பிடித்தமான ஓவியங்களை அவர்கள் விரும்புகிற ஆடைகளில் வரைந்து தருகிறார். ஒரு முழு நீளப் புடவையில் ஓவியம் வரைய பத்து முதல் பதினைந்து நாட்கள்வரை ஆகும் என்கிறார் அவர்.

கேரளச் சுவரோவியம் மியூரல், கலம்கரி போன்ற ஓவியங்களையும் ஆடைகளில் வரைகிறார். சுமார் இருபது ஆண்டுகளுக்கு மேலாக ஓவியக்கலைத் துறையில் பயணித்துவரும் ரமா ராஜேஷ் பள்ளி, கல்லூரிகளில் தொடங்கி வெளிநாடுகள்வரை சுமார் ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஓவியக் கண்காட்சிகளை நடத்தியுள்ளார்.

ஓவியத்தின் மேல் ஆர்வம் உள்ளவர்களுக்காக ஓவியப் பயிற்சி பள்ளியையும் நடத்திவருகிறார். ஓவியப் புடவைகளை விற்பனை செய்வதற்கான அங்காடியையும் இவர் நடத்திவருகிறார். தான் உருவாக்கிய ஓவியச் சீலைகளுக்குத் தானே மாடலாகவும் மாறிவிடுகிறார் ரமா.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x